

நாட்டில் பொதுமக்களின் வசதிக்காக பேருந்து, புறநகர் ரயில் மற்றும் மெட்ரோ ரயில் உள்ளிட்ட போக்குவரத்துகள் செயல்பட்டு வருகின்றன. இருப்பினும் நகரமயமாக்கல் காரணமாக ஆட்டோ மற்றும் டாக்ஸிகளின் தேவையும் அதிகரித்துள்ளது. நாட்டில் சென்னை, பெங்களூர், டெல்லி மற்றும் மும்பை உள்ளிட்ட பல பெருநகரங்களில் ரேபிடோ மற்றும் உபர் உள்ளிட்ட தனியார் டாக்ஸி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
பொது மக்கள் தனியார் டாக்ஸி செயலிகளை அதிகமாக பயன்படுத்தினாலும், இவற்றின் கட்டணம் நிரந்தரமாக இல்லை என பல ஆண்டுகளாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக டாக்ஸிகளின் தேவை அதிகமாக இருக்கும் போது கட்டணம் அதிகரிக்கப்படுவதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தனியார் டாக்ஸி போக்குவரத்தின் அதிக கட்டணங்களுக்குத் தீர்வு காணும் வகையில், மத்திய அரசு ‘பாரத் டாக்ஸி (Bharat Taxi)’ என்ற செயலியை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. பாரத் டாக்ஸி செயலி பயன்பாட்டிற்கு வந்த பிறகு, தனியார் டாக்ஸி செயலிகளின் பயன்பாடு வெகுவாக குறைந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடு முழுவதும் உள்ள பொதுமக்கள், பாரத் டாக்ஸி செயலியை மட்டுமே பயன்படுத்தி ஆட்டோ மற்றும் டாக்ஸிகளை புக் செய்து பயணிக்கலாம். தனியார் டாக்ஸி செயலிகளை விட இதில் கட்டணம் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பாரத் டாக்ஸி என்ற செயலியை மத்திய அரசு ஏற்கனவே உருவாக்கி, சோதனை முயற்சிகளை செய்து வருகிறது.
வெகு விரைவில் தலைநகர் டெல்லியில் பாரத் டாக்ஸி செயலி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதன் பிறகு இந்தியாவின் மற்ற மாநிலங்களில் பாரத் டாக்ஸி விரிவுபடுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. பாரத் டாக்ஸி செயலி பயன்பாட்டிற்கு வந்ததும், பொதுமக்கள் தங்களுடைய பெயர், மொபைல் நம்பர், மற்றும் இ-மெயில் முகவரியை உள்ளீடு செய்து பயன்படுத்தத் தொடங்கலாம்.
தமிழ்நாடு தவிர மற்ற சில மாநிலங்களில் எரிபொருள் செலவுக்கு ஏற்ப ஆட்டோ கட்டணம் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அதோடு ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க அரசின் பொது செயலிகளும் உருவாக்கப்பட்டு, பயன்பாட்டில் உள்ளது. ஆனால் இந்த இரண்டு வசதிகளுமே தமிழ்நாட்டில் இல்லை என ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மத்திய அரசின் பொது செயலியான பாரத் டாக்ஸி விரைவில் டெல்லியில் அறிமுகப்படுத்தப்பட இருப்பதால் ஆட்டோ ஓட்டுநர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த செயலியை தமிழ்நாட்டிலும் விரைவாக அறிமுகப்படுத்த வேண்டும் என ஆட்டோ ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏனெனில் சென்னை போன்ற பெரு நகரங்களைக் கொண்ட தமிழ்நாட்டிற்குத் தான் பாரத் டாக்ஸி செயலி அவசியம் தேவை எனவும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பாரத் டாக்ஸி செயலியின் மூலம் ஆட்டோ மற்றும் டாக்ஸி கட்டணங்கள் வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.