1 ரூபாயில் பயணம்..! இன்று முதல் அமலுக்கு வரும் புதிய சலுகை..!
சென்னை மக்களின் பயணத்தை எளிதாக்கும் வகையில், கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி ‘சென்னை ஒன்’ என்ற செயலியை தமிழக அரசு அறிமுகம் செய்தது. இதன்படி மின்சார ரயில், மெட்ரோ ரயில், பேருந்து, ஆட்டோ மற்றும் டாக்ஸி உள்ளிட்டவற்றில் பயணம் செய்வதற்கு இந்த செயலியில் டிக்கெட்டை புக் செய்து கொள்ளலாம். வேகமாக நகரும் இன்றைய சூழலில், டிக்கெட் எடுப்பதற்கு இனி அதிக நேரம் வரிசையில் நிற்க வேண்டாம் என்ற நிலைமையை மாற்றியது இந்த செயலி.
அறிமுகத்திற்கு வந்த ஒரு சில தினங்களிலேயே சென்னை ஒன் செயலிக்கு பயணிகள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்தது. இதனையடுத்து சென்னை ஒன் செயலியில், பயணிகளின் வசதிக்காக பல்வேறு சிறப்பு சலுகைகளை கொண்டு வர சென்னை ஒருங்கிணைந்த மாநகர போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது. இதன்படி ‘ஒரு ரூபாயில் ஒரு பயணம்’ என்ற புதிய சலுகையை பயணிகளுக்கு அறிவித்துள்ளது. இந்த சிறப்பு சலுகை சென்னை பயணிகளுக்கு மிகவும் உபயோகமானதாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பயணிகளின் வசதிக்காக கொண்டுவரப்பட்ட ‘சென்னை ஒன்’ செயலி அறிமுகப்படுத்தப்பட்டு இன்னும் இரண்டு மாதங்கள் கூட முழுதாக முடிவடையாத நிலையில், இதுவரை 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பயனர்களை தன்வசம் வைத்துள்ளது. மேலும் இந்த செயலில் இதுவரை 8 லட்சத்திற்கும் மேலான டிக்கெட்டுகள் புக் செய்யப்பட்டுள்ளன. சென்னை ஒன் செயலிக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததோடு, பயணிகளின் யுபிஐ பரிவர்த்தனையும் அதிகரித்தது.
இந்நிலையில் பணமில்லாத பரிவர்த்தனையின் கீழ், அரசின் பொது போக்குவரத்து பயணங்களை பயணிகள் மத்தியில் ஊக்குவிக்கும் விதமாக ஒரு சிறப்பு சலுகை இன்று அறிமுகமாகி உள்ளது. இதன்படி, ஒரு ரூபாய் கட்டணத்தில் பயணம் செய்யும் சிறப்பு சலுகை, இன்று (நவம்பர் 13) சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் ஒரு நாளைக்கு ஒரே ஒருமுறை மட்டும் 1 ரூபாய் கட்டணத்தில் மின்சார ரயில்கள், மெடரோ ரயில்கள் மற்றும் மாநகர பேருந்துகளில் பயணிக்கலாம். இந்த 1 ரூபாய் கட்டணத்தை யுபிஐ செயலிகள் வழியாக மட்டுமே செலுத்த வேண்டியது கட்டாயமாகும்.
இந்த சிறப்பு சலுகை, ஒரு டிக்கெட்டுக்கு ஒரு முறை மட்டும் தான் கிடைக்கும் என்பதை பயணிகள் நினைவில் கொள்ள வேண்டும். பயணிகளுக்கு உதவும் இந்த சிறப்பு நடைமுறை இன்று முதல் (நவம்பர் 13) பயன்பாட்டிற்கு வருகிறது என சென்னை ஒருங்கிணைந்த மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த சலுகை ஆட்டோ மற்றும் டாக்ஸி பயணத்திற்குப் பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு ரூபாயில் பயணம் என்பது சென்னையில் பயணம் செய்யும் அனைவருக்கும் பலன் தரக் கூடியது. ஆகையால் சென்னை ஒன் செயலியை பதிவிறக்கம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனத் தெரிகிறது.

