

சட்டவிரோதமான வேலை நீக்கங்கள் மற்றும் ஊழியர்களை பணிநீக்கம் செய்வது தொடர்பான புகார்களைத் தொடர்ந்து, புனே தொழிலாளர் ஆணையர் அலுவலகம் (Labour Commissioner Office, Pune), டாடா கன்சல்டன்சி சர்வீஸஸ் (TCS) நிறுவனத்துக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
இதுகுறித்து, தகவல் தொழில்நுட்ப ஊழியர்களின் அமைப்பான NITES (Nascent Information Technology Employees Senate) சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
இந்த வழக்கில் விசாரணை வரும் நவம்பர் 18, 2025 அன்று நடைபெற உள்ளது. தகவல் தொழில்நுட்ப சேவைகள் துறையின் இந்த மாபெரும் நிறுவனம், தனது உலகளாவிய பணியாளர்களில் சுமார் 2 சதவிகிதத்தினரைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளதால், தொடர்ந்து நடந்து வரும் பணி நீக்கங்கள் குறித்து இந்தப் புகார்கள் எழுந்துள்ளன.
இந்தப் புகார்கள் அனைத்தும், திடீர் பணி நீக்கங்கள், கட்டாய ராஜினாமா, சட்டப்படியான நிலுவைத் தொகையை (statutory dues) மறுத்தல் மற்றும் ஊழியர்களை நிர்பந்திக்கும் வேலை நடைமுறைகள் (coercive employment practices) பற்றியவை ஆகும்.
NITES அமைப்பு இந்த புகார்களையும் ஆதாரங்களையும் ஆய்வு செய்த பிறகு, பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு முறையான புகார்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தாக்கல் செய்ய உதவியுள்ளது.
இந்த வழக்கில் தொழிலாளர் ஆணையம் விசாரணையைத் தொடங்கியிருப்பது, எந்த ஒரு நிறுவனமும் சட்ட நடைமுறைகளைப் பின்பற்ற கடமைப்பட்டுள்ளது என்பதையும், தொழிலாளர் சட்டங்களை மீறி செயல்பட முடியாது என்பதையும் உறுதிப்படுத்துகிறது.
நிறுவனத்தின் காலாண்டு வருவாய் மாநாட்டில் முக்கியத் தகவல்கள் வெளியாகின. 2016 நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் பணியாளர்களின் எண்ணிக்கை சுமார் 19,755 குறைந்தது. இதுமட்டுமின்றி, மறுசீரமைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இதுவரை 6,000 பேரை (1%) விடுவித்துள்ளதாகவும் மனிதவளத் துறைத் தலைவர் கூறியிருந்தார். இந்த எண்ணிக்கை, பணி நீக்கத்தின் வீரியத்தையும் அதன் சமூகத் தாக்கத்தையும் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.
தவறான பணி நீக்கம், கட்டாய ராஜினாமா அல்லது நிலுவைத் தொகை மறுப்பு போன்ற பிரச்னைகளை எதிர்கொண்ட ஊழியர்கள், தங்கள் உரிமைகளுக்காக வெளிப்படையாக குரல் கொடுக்க முன்வர வேண்டும் என்று NITES வலியுறுத்தியுள்ளது.
பொறுப்புணர்வை உறுதிப்படுத்தவும், ஊழியர்களின் வேலைவாய்ப்பு உரிமைகளைப் பாதுகாக்கவும் சட்டரீதியான வழக்குகளைத் தொடங்குவது முக்கியமான நடவடிக்கையாகும் என்றும் NITES தெரிவித்துள்ளது.
NITES-ன் இந்த X சமூக ஊடகப் பதிவு குறித்து, TCS நிறுவனம் இதுவரை எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை.