
எகிப்தில் 13 வயது சிறுவன் (uncooked Instant Noodles) சமைக்காத பச்சை நூடுல்ஸை சாப்பிட்டதால் உயிரிழந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. சமைக்கப்படாத நூடுல்ஸில் வைரஸ் எந்த வகையில் ஆபத்துகளையும், குடல் அடைப்புகளையும் ஏற்படுத்தும் என்பதையும் அறிந்து கொள்ளலாம்.
உடனடி நூடுல்ஸ் என்பது மிகவும் பிரபலமான சிற்றுண்டி மட்டுமில்லாமல், விரைவானது, சுவையானது மற்றும் எளிதானது என்பதால் அனைவராலும் விரும்பப்படுகிறது. இதனாலேயே வேலைக்கு செல்பவர்கள் காலையில் நேரமின்மை காரணமாக விரைவில் செய்யக்கூடிய நூடுல்ஸ் பலரது தேர்வாக உள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது.
எகிப்தின் கெய்ரோவில், சமைக்காத உடனடி நூடுல்ஸ் மூன்று பாக்கெட்டுகளை சாப்பிட்ட 13 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.
நூடுல்ஸ் சாப்பிட்டு அரை மணி நேரத்திற்குள் இந்த சிறுவனுக்கு, கடுமையான வயிற்று வலி, வியர்வை மற்றும் வாந்தி ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறிது நேரத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
ஆரம்பத்தில், நூடுல்ஸ் விஷம் கலந்ததாகவோ அல்லது காலாவதியானதாகவோ இருக்கலாம் என சந்தேகித்த அதிகாரிகள் அவற்றை விற்பனை செய்த கடைக்காரரிடம் விசாரணை நடத்தினர். இருப்பினும், ஆய்வக சோதனைகள் மற்றும் பிரேத பரிசோதனையில் பொருட்கள் மாசுபடவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து மருத்துவர்கள் சிறுவனின் மரணத்திற்கு அதிகளவு சமைக்காத பச்சை நூடுல்ஸ் உட்கொண்டதால் ஏற்பட்ட கடுமையான குடல் அடைப்பு, சிறுவனின் குடலில் வீக்கத்தை ஏற்படுத்தி, அடைப்பு மற்றும் ஆபத்தான நீரிழப்பு காரணமாக மரணம் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறியுள்ளனர்.
இந்த நிகழ்வின் மூலம் சிலர் சமைக்காத நூடுல்ஸ் பாதுகாப்பானது என்று நம்பினாலும், இந்த பழக்கம் கடுமையான, ஆபத்தான சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அதாவது உடனடி நூடுல்ஸை பச்சையாக உட்கொள்ளும்போது, ஜீரணிக்க கடினமாக இருக்கும் என்றும், செரிமான மண்டலத்தில் நீரிழப்பு, அடைப்புகள் அல்லது தொற்றுகளை ஏற்படுத்தும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
அதுமட்டுமின்றி இந்த சம்பவத்தின் மூலம் மக்கள் பொதுவாக நுடுல்ஸை பாதிப்பில்லாத சிற்றுண்டியாக கருதும் நிலையில் பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் ஏற்படும் அபாயங்களை எடுத்துக்காட்டுகிறது. நூடுல்ஸ் முன்கூட்டியே சமைக்கப்பட்டிருந்தாலும், அவற்றை கொதிக்க வைப்பதன் மூலம் சரியாக நீரேற்றம் செய்ய வேண்டும் என்று பேக்கேஜிங் வலியுறுத்துகிறது. இப்படி ஆபத்துகள் இருந்தபோதிலும், பச்சையாக நூடுல்ஸ் சாப்பிடும் பழக்கம் ஆன்லைனில் பிரபலமடைந்துள்ளது மட்டுமின்றி சமூக ஊடக தளங்களில் மில்லியன் கணக்கான பார்வைகளுடன் "Eat Ramen Raw" என்ற சவால் வீடியோக்கள் பரவி வருவது வருத்தத்தை அளிக்கிறது.
சமைக்காத உடனடி நூடுல்ஸ் ஏற்படுத்தும் பாதிப்புகள்
உணவியல் நிபுணர் ரக்ஷிதா மெஹ்ரா கூறுகையில், நூடுல்ஸ் உங்களை நேரடியாக கொல்லாது என்றாலும் அது பாதுகாப்பானதோ அல்லது ஆரோக்கியமானதோ இல்லை என்று கூறுகிறார். உடனடி நூடுல்ஸ் சுத்திகரிக்கப்பட்ட மாவால் (மைதா) தயாரிக்கப்படுகிறது என்றும், சுவைக்காக செயற்கை வண்ணங்கள் மற்றும் சேர்க்கைகள் இதில் அதிகம் சேர்க்கப்படுவதுடன், அதன் பிளாஸ்டிக் பேக்கேஜிங் மேலும் கவலையை எழுப்புவதாக உள்ளது என்றும் அவர் கூறினார்.
நீங்கள் நூடுல்ஸை நன்றாக சமைத்து சாப்பிடும்போது, அதிலுள்ள வெப்பம் பாக்டீரியாவைக் கொல்ல உதவுகிறது. ஆனால் அதுவே நுடுல்ஸை பச்சையாக சாப்பிடும் போது அவை குடலுக்குள் வீங்கி அடைப்புகளுக்கு வழிவகுப்பதுடன் அதிக ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரிக்கிறார். அது சத்தானதும் இல்லை, பாதுகாப்பானதும் அல்ல, எதிர்பாராத வழிகளில் தீங்கு விளைவிக்கும் என்பதால் உடனடி நூடுல்ஸை பச்சையாக சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.
இதில் புரதம் மற்றும் நார்ச்சத்து குறைவாக இருப்பதுடன் உப்பு, ஆரோக்கியமற்ற கொழுப்புகள் மற்றும் செயற்கை பொருட்கள் அதிகமாக உள்ளதால் சரியாக சமைத்தாலும் கூட, உடனடி நூடுல்ஸ் ஆரோக்கியமான தேர்வாக இருக்காது. அவ்வப்போது நூடுல்ஸ் சாப்பிடுவது தீங்கு விளைவிக்காது, ஆனால் அடிக்கடி உட்கொள்வது எடை அதிகரிப்பு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் செரிமான பிரச்சினைகள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும் என்றும் அவர் எச்சரிக்கிறார்.
மேலும் ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகையில், குழந்தைகள் மற்றும் டீனேஜர்கள் பழங்கள், காய்கறிகள் அல்லது வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவுகளை விட நூடுல்ஸை அதிகம் விரும்புகின்றனர். இது காலப்போக்கில் அவர்களின் வளர்ச்சி, ஆற்றல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கும் என்கிறார்.
தென் கொரியாவின் சியோலில் இருந்து நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், அடிக்கடி நூடுல்ஸ் உட்கொள்வது உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிகரிக்கும் குளுக்கோஸ் போன்றவை இருதய வளர்சிதை மாற்ற அபாயங்களுடன் தொடர்புடையது என்று கண்டறியப்பட்டுள்ளது.
பேராசிரியர் லாரன் பால் (குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம்) மற்றும் டாக்டர் எமிலி பர்ச் (சதர்ன் கிராஸ் பல்கலைக்கழகம்) போன்ற ஊட்டச்சத்து நிபுணர்கள், உடனடி நூடுல்ஸ் நார்ச்சத்து இல்லாதது உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று வலியுறுத்துகின்றனர். அவை முழு தானியங்களை விட சுத்திகரிக்கப்பட்ட கோதுமையிலிருந்து தயாரிக்கப்படுவதால், அவை செரிமானம் அல்லது குடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்கின்றனர். சமைக்கப்படாத உடனடி நூடுல்ஸை சாப்பிடதன் மூலம் ஒரு சிறுவன் இறந்துள்ள துயரமான நிகழ்வு, குறிப்பாக குழந்தைகள் மற்றும் டீனேஜர்கள் மத்தியில், உடனடி நூடுல்ஸ் பிரபலமாக இருந்தாலும், நல்ல ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை மிதமானது முக்கியமானது என்பதை நினைவூட்டுகிறது.
உணவுப் பொருட்களில் வைரஸ் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் பாதுகாப்பற்ற வழிகளில் குழந்தைகள் உடனடி நூடுல்ஸை உட்கொள்வதைத் தடுக்க வேண்டும் என்றும் நீண்டகால ஆரோக்கியத்திற்காக சீரான உணவுக்கு முறைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று பெற்றோர்களுக்கு சுகாதார நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.