

உலகளவில் சுமார் 5.78 பில்லியன் மக்கள் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் 120 கோடிக்கும் அதிகமானோர் செல்போன்களை பயன்படுத்தி வருகின்றனர். இவர்களில் சுமார் 95 கோடி பேர் தங்களது ஸ்மார்ட் போன்களில் இணையதளத்தை பயன்படுத்துகின்றனர். மேலும் நாட்டின் மொத்த மக்கள்தொகையில் சுமார் 40 சதவீதம் பேர் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துகின்றனர். ஒவ்வொரு இந்தியரும் தினமும் சராசரியாக 5 மணி நேரம் செல்போன்களில் நேரத்தை செலவிடுவதாக கூறப்பட்டுள்ளது. அந்த வகையில் செல்போன் அனைவரின் வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே மாறி விட்டது என்று சொல்லலாம். உணவு, தூக்கம் இல்லாமல் கூட இருந்து விடுவார்கள். ஆனால் செல்போன் இல்லாமல் இருக்க முடியாது என்ற மனநிலையில் தான் இன்றைய மக்கள் உள்ளனர்.
அந்த வகையில் செல்போன்களை அதிகளவு பயன்படுத்துபவர்களை குறிவைத்து மோசடி கும்பல் பல்வேறு விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றன. மோசடி செய்பவர்களும் புதுப்புது வழிமுறைகளை பின்பற்றி மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், போனில் இருந்து வாட்ஸ்ஆப் அல்லது ஃபேஸ்புக் மெசேஞ்ஜரில் முன் பின் தெரியாதவர்களிடமிருந்து வரும் அழைப்புகளை ஏற்கும்போது, மோசடியாளர்கள் அரைகுறை ஆடையுடன் இருந்து, அவர்களுடன் பேசுபவரின் ஸ்க்ரீனை ரெக்கார்டு செய்து கொண்டு பணம் கேட்டு மிரட்டும் கும்பல் தற்போது அதிகரித்து வருகிறது.
முன் பின் அடையாளம் தெரியாத எண்களிலிருந்து வீடியோ அழைப்புகள் வந்தால் ஏற்க வேண்டாம் என்று காவல்துறை வெகு நாள்களாக எச்சரித்து வருகிறது. இதற்குக் காரணம், இதுபோன்ற மோசடிகள்தான். அதுமட்டுமின்றி மோசடி வலையில் சிக்கி நிதி இழப்பு ஏற்பட்டதாக அன்றாடம் செய்தித்தாள்களில் செய்திகள் வந்தவண்ணம் தான் உள்ளது. ஆனாலும் மோசடிகள் நிற்காமல் அதிகரித்துக்கொண்டே தான் வருகிறது.
இது ஒருபுறம் இருக்க செல்போன் பயன்படுத்துபவர்களுக்கு, தனியார் நிதி நிறுவனங்களிடம் இருந்தும், தொலைதொடர்பு நிறுவனங்களிடம் இருந்தும் அடிக்கடி போன் செய்து தொல்லை கொடுக்கும் சம்பவங்களும் தற்போது அதிகரித்து வருகின்றன.
இந்த சூழலில் தான் தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) மற்றும் தொலைதொடர்பு அமைச்சகம் ஆகியவை இணைந்து புதிய வசதியை அறிமுகம் செய்ய உள்ளன. அதாவது முன்பின் தெரியாதவர்களிடம் இருந்து செல்போனுக்கு வரும் அழைப்பு வந்தால் இனிமேல் அவர் யார் என்று அடையாளம் தெரிந்து விடும்.
அதன்படி, செல்போனில் சேமித்து வைக்காத எண்களில் இருந்து அழைப்பு வரும்போது, ஒருவருக்கு அழைப்பு வரும் எண்களுடன் சேர்த்து அந்த சிம் கார்டை பயன்படுத்துபவரின் பெயர் விவரமும் பதிவாகும். இதன் மூலம் தெரியாத நம்பரில் இருந்து அழைப்பு வந்தாலும் அவர் யார் என்பது குறித்து அறிந்து கொள்ளமுடியும்.
இந்த வசதி '4ஜி' அலைக்கற்றை சேவையில் இருந்து படிப்படியாக பிற அலைக்கற்றைகளுக்கும் கொண்டுவரப்பட டிராய் மற்றும் தொலைதொடர்பு அமைச்சகமும் திட்டமிட்டுள்ளது. இந்த வசதியின் மூலம் மோசடி மற்றும் தொல்லை கொடுக்கும் விரும்பாத அழைப்புகளுக்கு செல்போன் எண்ணோடு பெயரும் வரும் வகையிலான இந்த புதிய சேவை கடிவாளம் போடும் வகையில் இருக்கும் என்றே சொல்லலாம். இதன் மூலம் இனிமேல் தெரியாத எண்களில் இருந்து எந்த அழைப்பு வந்தாலும் அடையாளம் காணமுடியும் என்பதால் பயமின்றி எந்த போன் வந்தாலும் எடுக்கலாம்.
டிராய் மற்றும் தொலைதொடர்பு அமைச்சகம் ஆகியவை இணைந்து இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதுடன், இந்த வசதியை விரைவில் அமலுக்கு கொண்டுவருவதில் தீவிரம் காட்டி வருகின்றன. அரசு இதற்கான அறிவிப்பானையை வெளியிட்ட 6 மாதங்களுக்குள் தொலைதொடர்பு நிறுவனங்கள் இந்த சேவையை வழங்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
முதற்கட்டமாக மும்பை மற்றும் ஹரியாணாவில் இந்த வசதி அறிமுகப்பட்டுத்தப்பட்டுள்ளதாகவும், வரும் வாரங்களில் பிற நகரங்களுக்கும் சோதனை முயற்சியின் கீழ், இந்த சேவை விரிவுபடுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.