தாய்லாந்தில் தன்பாலின திருமணங்களுக்குச் சட்ட அங்கீகாரம் அளிக்கும் மசோதா நிறைவேற்றப்பட நிலையில், அமலுக்கு வந்த முதல் நாளே 200 ஜோடிகள் திருமணம் செய்துக்கொண்டனர்.
தன்பாலின திருமணங்களுக்கு உலகம் முழுவதும் பல நாடுகளில் அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றாலும், சில நாடுகள் அங்கீகாரம் அளித்துள்ளன. அமெரிக்காவில் ட்ரம்ப் பதவியேற்றவுடன் தன்பாலின திருமணங்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்படாது என்று உத்தரவு பிறப்பித்தார்.
அதேபோல் தன்பாலின உறவில் இருந்தால் கூட சில நாடுகளில் கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகின்றன. இந்தியாவில் பொறுத்தவரை, தன்பாலின திருமணங்கள் செய்துக்கொள்ளலாம். ஆனால், சட்டம் அதற்கான பதிவு சான்றிதழ்களை வழங்காது என்று தெரிவித்தது. இப்படி ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன.
இப்படியான நிலையில், சென்ற ஆண்டு மார்ச் மாதம், தாய்லாந்து நாடாளுமன்றத்தில் தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் அளிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம், தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு சட்டம், நிதி மற்றும் மருத்துவ உரிமைகள் பெறமுடியும். இந்த சட்டம் அமலுக்கு வந்த முதல் நாளிலேயே தலைநகர் பாங்காக்கில் 200க்கும் மேற்பட்ட தன்பாலின ஈர்ப்பாளர்கள் உற்சாகத்துடன் திருமணம் செய்துக் கொண்டனர்.
இதனை மகிழ்ச்சியோடு கொண்டாடி வரும் தன்பாலின ஈர்ப்பாளர்கள், இந்த சட்டத்தை உலக நாடுகள் அனைத்தும் கொண்டு வர வேண்டும் என்கிறார்கள்.
ஆசியாவில் தைவான், நேபாளம் நாடுகளை தொடர்ந்து தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணத்தை அங்கீகரிக்கும் மூன்றாவது நாடு என்ற பெருமையை தாய்லாந்து பெற்றுள்ளது.
இந்த மூன்று நாடுகளுமே உலக நாடுகளுக்கு முன் உதாரணமாக செயல்படுகின்றன.
இந்தியாவை பொறுத்தமட்டில், சட்ட அங்கீகாரம் கொடுக்கவில்லை என்றாலும், தன்பாலின திருமணம் செய்பவர்களுக்கு எந்த பிரச்சனைகள் வராமலும் அவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதமாகவும், அமைச்சரவைத் தலைமையில் ஒரு குழு அமைத்து அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என நாடாளுமன்றத்திற்கு வலியுறுத்தப்பட்டது.
ஆனால், ஈராக்கில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டாலே கடும் தண்டனை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஈராக்கில் ஓரினச்சேர்க்கையில் ஈடுப்பட்டவர்களை அறிந்தாலே, அவர்களுக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என்ற மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. முன்னதாக, அந்நாட்டில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்று அந்த நாட்டின் அரசு ஒரு சட்டத்தை நிறைவேற்றியது. இது போல சில நாடுகள் கடும் தண்டனைகள் வழங்குவது குறிப்பிடத்தக்கது.