

தமிழக வெற்றி கழகம் தனது தேர்தல் வாக்குறுதியாக தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் என்பதை அறிவித்து இருந்தது.இந்த திட்டம் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15 அன்று தமிழகம் முதல்வர் விஜய் தொடங்கி வைப்பார் என்று அரசு தெரிவித்துள்ளது.அதாவது அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் ஒவ்வொரு குழந்தையையும், பிரசவித்த தாயையும் கவுரவிக்கும் முகமாக ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ வடிவமைக்கப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும், தமிழகத்தில் நிரந்தரமாக வசிக்கும் குடும்பங்களை சார்ந்த தாய்மார்களின் குழந்தைகளுக்கு தமிழக முதலமைச்சரின் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும்.
தமிழர் பாரம்பரியத்தில், ‘தாய்மாமன் சீர்’ என்ற மரபின்படி, தமிழக முதல்வர், தாயின் சகோதரர் புதிதாகப் பிறந்த குழந்தையை வரவேற்று வாழ்த்தும் வகையில் தங்கம் உள்ளிட்ட பரிசுகளை வழங்கும் விதமாகவும், தமிழர் பண்பாட்டு மரபை பிரதிபலிக்கும் வகையிலும், அரசு ஒவ்வொரு குழந்தைக்கும் தாய்மாமனின் பங்கை ஏற்று, அன்பும் அக்கறையும் நிறைந்த வரவேற்பின் அடையாளமாக ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்திற்காக ரூ.755 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஒரு தங்க மோதிரத்துக்கு ரூ.17 ஆயிரம் வரை ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வசிப்பிடச் சான்று பெற்ற தாய்மார்கள், அரசு மருத்துவமனை அல்லது சுகாதார நிலையங்களில் பிரசவம் பார்த்தவர்கள் இத்திட்டத்திற்கு தகுதியானவர்கள். மேலும், ‘தாய் PICME முறையில் பதிவு செய்து RCH ID பெற்றிருக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள 94 மைய (HUBs) அரசு மருத்துவமனைகளின் பட்டியல் மண்டல ரீதியாகவும், மாவட்ட வாரியாகவும் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் செங்கல்பட்டு மண்டலம் : சென்னையில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் மருத்துவக் கழகம், கஸ்தூர்பா காந்தி தாய் சேய் நல மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆர்.எஸ்.ஆர்.எம் (RSRM) மருத்துவமனை ஆகியவை இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும், தாம்பரம் மாவட்டத் தலைமை மருத்துவமனையும் சேர்க்கப்பட்டுள்ளன. திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் திருத்தணி மாவட்டத் தலைமை மருத்துவமனை ஆகியவை மையங்களாகச் செயல்படும்.
வேலூர், திருவண்ணாமலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் : வேலூர் மாவட்டத்தில் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் குடியாத்தம் மாவட்டத் தலைமை மருத்துவமனை ஆகியவை இதில் அடங்கும். திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் செய்யாறு வட்டார மருத்துவமனை ஆகியவையும், திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர் மாவட்டத் தலைமை மருத்துவமனை மற்றும் வாணியம்பாடி வட்டார மருத்துவமனையும் இடம்பெற்றுள்ளன. மேலும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாலாஜாபேட்டை மாவட்டத் தலைமை மருத்துவமனை சேர்க்கப்பட்டுள்ளது.
கோவை மற்றும் கொங்கு மண்டலம் : கோவை மாவட்டத்தில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மேட்டுப்பாளையம் வட்டார மருத்துவமனை மற்றும் பொள்ளாச்சி மாவட்டத் தலைமை மருத்துவமனை ஆகியவை இப்பட்டியலில் உள்ளன. ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மாவட்டத் தலைமை மருத்துவமனை, பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கோபிசெட்டிபாளையம் மற்றும் சத்தியமங்கலம் வட்டார மருத்துவமனைகள் மையங்களாக அமைக்கப்பட்டுள்ளன. திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தாராபுரம் மற்றும் உடுமலைப்பேட்டை வட்டார மருத்துவமனைகள் இப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. நீலகிரி மாவட்டத்தில் நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மையமாகச் செயல்படும்.
சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மண்டலம் : சேலம் மாவட்டத்தில் மோகன் குமாரமங்கலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மேட்டூர் அணை மாவட்டத் தலைமை மருத்துவமனை மற்றும் ஆத்தூர் வட்டார மருத்துவமனை ஆகியவை இடம்பெற்றுள்ளன. தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரூர் வட்டார மருத்துவமனை மற்றும் பெண்ணாகரம் மாவட்டத் தலைமை மருத்துவமனை ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஓசூர் மாவட்டத் தலைமை மருத்துவமனை ஆகியவை மையங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
திருச்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்கள் : திருச்சி மாவட்டத்தில் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மணப்பாறை மாவட்டத் தலைமை மருத்துவமனை மற்றும் ஸ்ரீரங்கம் வட்டார மருத்துவமனை ஆகியவை இடம்பெற்றுள்ளன. கரூர் மாவட்டத்தில் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் குளித்தலை மாவட்டத் தலைமை மருத்துவமனை சேர்க்கப்பட்டுள்ளன. அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஜெயங்கொண்டம் மாவட்டத் தலைமை மருத்துவமனை ஆகியவை அடங்கும். பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத் தலைமை மருத்துவமனை இப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை : தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கும்பகோணம் மாவட்டத் தலைமை மருத்துவமனை மற்றும் பட்டுக்கோட்டை வட்டார மருத்துவமனை ஆகியவை இதில் அடங்கும். திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி மற்றும் விஜயபுரம் வட்டார மருத்துவமனைகள் சேர்க்கப்பட்டுள்ளன. நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை மாவட்டத் தலைமை மருத்துவமனை மற்றும் சீர்காழி வட்டார மருத்துவமனையும், புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அறந்தாங்கி மாவட்டத் தலைமை மருத்துவமனை ஆகியவையும் மையங்களாகச் செயல்படும்.
கடலூர், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி : கடலூர் மாவட்டத்தில் கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கடலூர் மாவட்டத் தலைமை மருத்துவமனை, சிதம்பரம் மற்றும் விருத்தாச்சலம் வட்டார மருத்துவமனைகள் சேர்க்கப்பட்டுள்ளன. விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் திண்டிவனம் மாவட்டத் தலைமை மருத்துவமனை ஆகியவை அடங்கும். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் திருக்கோவிலூர் மாவட்டத் தலைமை மருத்துவமனை ஆகியவை இப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
மதுரை, திண்டுக்கல் மற்றும் தேனி : மதுரை மாவட்டத்தில் ராஜாஜி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மேலூர் மற்றும் திருமங்கலம் வட்டார மருத்துவமனைகள் மற்றும் உசிலம்பட்டி மாவட்டத் தலைமை மருத்துவமனை ஆகியவை உள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் பழனி மாவட்டத் தலைமை மருத்துவமனை அடங்கும். தேனி மாவட்டத்தில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பெரியகுளம் மாவட்டத் தலைமை மருத்துவமனை மற்றும் கம்பம் வட்டார மருத்துவமனை ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன.
நெல்லை, தூத்துக்குடி, குமரி மற்றும் தென்காசி : திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அம்பாசமுத்திரம் வட்டார மருத்துவமனை ஆகியவை மையங்களாக உள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கோவில்பட்டி மாவட்டத் தலைமை மருத்துவமனை மற்றும் திருச்செந்தூர் வட்டார மருத்துவமனை சேர்க்கப்பட்டுள்ளன.
தென்காசி மாவட்டத்தில் தென்காசி மாவட்டத் தலைமை மருத்துவமனை மற்றும் சங்கரன் கோவில் வட்டார மருத்துவமனை அடங்கும். கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பத்மநாபபுரம் மாவட்டத் தலைமை மருத்துவமனை மற்றும் குழித்துறை வட்டார மருத்துவமனை ஆகியவை இப்பட்டியலில் உள்ளன.