

தமிழ்நாடு அரசின் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் துவங்கும் தேதி தள்ளி வைக்கப்பட்டு, புதிய தேதியாக செப்டம்பர் 25, 2026 தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் வழங்கும் இந்தத் திட்டம், முதலில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்படுவதாக இருந்தது. முதலமைச்சர் விஜய் லண்டன் பயணம் மேற்கொள்வதன் காரணமாக இத் திட்டத்தின் தொடக்க விழா தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். புதிய அறிவிப்பின்படி செப்டம்பர் 25ஆம் தேதி மதுரை உசிலம்பட்டியில் நடைபெறும் விழாவில் முதலமைச்சர் விஜய் இத்திட்டத்தை முறைப்படி தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஜூன் மாதம் 23ஆம் தேதி தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் அறிவித்தார். மேலும் இந்தத் திட்டம் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். இத்திட்டத்தின் மூலம் பயன்பெற கடந்த ஜூன் மாதம் 22 ஆம் தேதி முதல் அரசு மருத்துவமனைகளில் பிறக்கின்ற குழந்தைகள் தகுதி பெற்றவர்கள் ஆவார்கள். இந்த குழந்தைகளுக்கு 22 கேரட் தங்கத்தில் செய்யப்பட்ட ஒரு கிராம் தங்க மோதிரம் தாய்மாமன் சீராக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதற்காக பட்ஜெட்டில் ரூபாய் 755 கோடியே 83 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன் 4 லட்சத்து 41 ஆயிரத்து 667 (4,41,667) தங்க மோதிரத்திற்கும் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. கல்யாண் ஜுவல்லர்ஸ் மற்றும் ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் இரண்டும் தங்க மோதிரம் செய்து கொடுக்கும் ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளன. கல்யாண் ஜுவல்லரி நிறுவனம் 30% அளவிற்கும், ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் 70% அளவுக்கும் செய்து கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் செப்டம்பர் 15 தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்குவதற்கு வாய்ப்பு இல்லை என்று தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. முதலமைச்சர் விஜய்யின் லண்டன் பயணம் காரணமாக தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
சர்வதேச தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக நாளை லண்டனுக்கு புறப்படும் விஜய், துபாய் சென்று அங்கிருந்து லண்டன் போகிறார். லண்டன் பயணத்தின் பொழுது சில்வர்ஸ்டோனில் நடைபெறும் நடிகர் அஜித்குமாரின் கார் பந்தயத்தையும் பார்க்கச் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. லண்டன் பயணம் 16ஆம் தேதி வரை ஏழு நாட்கள் நீடிப்பதால் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15 ஆம் நாளில் திட்டத்தை தொடங்கி வைக்க இயலாது.
எனவே “தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் திட்டமிட்டப்படி செப்.15ல் தொடங்கப்படாது என்றும், மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் வருகின்ற 25ஆம் தேதி தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது . இந்த நிகழ்வில் உசிலம்பட்டியில் பிறந்த 1,500 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.