2024 தேர்தலில் களமிறங்கும் தளபதி விஜய்?!

2024 தேர்தலில் களமிறங்கும் தளபதி விஜய்?!
Published on

மிழ்நாட்டின் அரசியல் களத்தை மக்கள் எப்போதுமே திறந்த வீட்டைப் போல எளிதாக வைத்திருக்கிறார்கள். அரசியலில் நுழைவதற்கான மிக எளிதான நுழைவுச் சீட்டாக சினிமாவின் வாசல்கதவுகள் இருக்கின்றன. அண்ணாதுரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, ஸ்டாலின், விஜயகாந்த், கமல்ஹாசன், சரத்குமார், டி.ராஜேந்தர், சீமான், உதயநிதி என பலரும் சினிமா எனும் துருப்புச்சீட்டு வழியாக அரசியலுக்குள் வந்தவர்கள் தான்.

சினிமா என்பது எண்ணிப் பார்க்க முடியாத அளவிற்கு வலிமை மிகுந்த ஊடகமாக இருக்கிறது. சினிமாவில் ஓரிரு காட்சிகளில் நடிக்கும் நடிகர்கள் கூட காலம் கடந்து பேசப்படுகின்றனர். இப்படிப் போன்றவர்களை ஞாபகம் வைத்திருக்கும் நமக்கு கக்கனின் முகமோ, பனகல் அரசரின் முகமோ, ஓமந்தூராரின் முகமோ எளிதில் நினைவுக்கு வராது. அதுதான் சினிமாவின் வலிமை.

சினிமாவில் நடித்து பெயரும் புகழும் அடைந்தவுடன் அடுத்த இலக்காக அரசியல் ஆசை துளிர்த்து விடுகிறது. அரசியலுக்குள் வந்து அதிகாரத்தை கைப்பற்றத் துடிப்பது மக்களுக்கு நல்லது செய்யவா என்ற கேள்வி உருவாகும். இதற்கான பதில் மிக எளிமையானது. யாரும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இன்னும் சொல்லப்போனால், அரசியலுக்கு வருவதற் காகவே, தன் முகத்தை மக்களின் மனதில் பதிய வைப்பதற்காகவே சினிமாவுக்குள் நுழைத்து பின் பொறுப்புகள் வழங்கப்பட்டு, எம்.எல்.ஏ.வாகி அமைச்சரும் ஆகிவிடுவதும் உண்டு.

இப்படி ஒரு வலிமைமிகு ஊடகத்தின் நம்பர் ஒன் அந்தஸ்த்தும் எக்கச்சக்கமான சம்பளமும் பெறும் ஒரு நடிகருக்கு அரசியல் ஆசை வருவது சகஜமானதே. சினிமாவின் மூலம் அரசியலுக்குள் நுழைந்து வெற்றிக்கொடி நாட்டிய நடிகரின் வளர்ச்சியை அருகிலிருந்து பார்த்த விஜய் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் தன் மகனும் அத்தகையதொரு இடத்தை அடைய வேண்டும் என்ற எண்ணம் கொழுந்து விட்டெரியத் தொடங்கியது. அதற்கான முன்தயாரிப்புகள் திரைமொழி வழியாகவே செய்யப்பட்டது.

2008 ம் ஆண்டு ஈழத் தமிழர்களுக்காக நடிகர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். அதில் நடிகர் விஜய்யும் பங்கேற்றார். அவருக்கு தெரிந்தோ தெரியாமலோ நிகழ்ந்த முதல் அரசியல் பிரவேசம் அதுதான். அதற்கு கிடைத்த வரவேற்பை ஒட்டித்தான் மக்கள் இயக்கத்தை தொடங்கி வைத்தார் விஜய். ’தலைவா’ படத்தின் கேப்ஷனாக ’டைம் டு லீட்’ என வைக்கப்பட, அரசியல் ரீதியான சிக்கல் அதிமுகவின் ஜெயலலிதா வடிவில் உருத்திரண்டது. கேப்ஷனை நீக்கி, பொதுவெளியில் வீடியோ வெளியிட்ட பின்பே அப்படம் வெளியானது.

இளைய தளபதி என்ற பட்டம் தளபதியானது, அலைக்கற்றை விவகாரம், ஜி.எஸ்.டி குறித்து படங்களில் பேசியது என எல்லா கட்சியினரையும் எதிர்க்க வைத்தார் விஜய். ரஜினிகாந்த் எப்படி தமது படங்கள் வருவதற்கு முன்பு அரசியல் பேசுவாரோ அதே போல, படங்கள் வெளியான பின்பு அரசியல் கட்சியினரை வைத்தே படத்திற்கும், தனக்கும் ப்ரோமோசன் தேடிக் கொண்டார் விஜய்.

கடந்த உள்ளாட்சித் தேர்தலில் பிரதான அரசியல் கட்சிகளே ஆச்சரியப்படும் அளவிற்கு விஜயின் ஆதரவாளர்கள் 129 இடங்களில் வெற்றி வாகை சூடினர். பல மாநகராட்சிகளில் இரண்டாம் இடம் பிடித்தனர். இவ்வளவிற்கும் விஜய் நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்த பிரசாரத்தையும் முன்னெடுக்கவில்லை.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஓராண்டு இருக்கும் நிலையில் விஜய் மக்கள் இயக்கம் மீண்டும் தீவிரமாக களமாடத் தொடங்கியுள்ளது. அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி அவரது சிலைகளுக்கு தமிழ்நாடு முழுவதும் மாலையிட அறிவுறுத்தப்பட்டதாக தகவல் வந்ததை அடுத்து மாலையிட அனுமதி கேட்டும் போலீசார் மறுத்து விட்டனர். பின்னர் திமுக தலைமை வரை செய்தி கொண்டு செல்லப்பட்டு அனுமதி வழங்கியதாகத் தெரிகிறது. நேற்று தீரன் சின்னமலையின் பிறந்த நாளையொட்டியும் பல இடங்களில் விஜய் மக்கள் இயக்கத்தினர் மரியாதை செய்துள்ளனர். சமீபத்திய நிகழ்வுகள் மட்டுமல்லாமல் விஜயின் பிறந்த நாளையொட்டி பல ஆக்கப்பூர்வமான நலத்திட்ட உதவிகளைச் செய்ய அவரது ரசிகர்கள் தவறுவதில்லை.

பனையூர் இல்லத்தில் நிர்வாகிகளையும், ரசிகர்களையும், தேர்தலில் வெற்றி பெற்றவர்களையும் தொடர்ச்சியாக சந்தித்து வருகிறார் விஜய். விருந்துகள் பரிமாறப் படுகிறது. ராகுல் காந்தியுடன் புகைப்படம் எடுத்து வெளியிடுகிறார் விஜய். தெலங்கானா முதல்வர், புதுச்சேரி முதல்வர் என விஜயின் சந்திப்புகள் தொடர்கின்றன. கூட்டிக் கழித்துப் பார்த்தால் கணக்குகள் நேராகின்றன. மக்கள் இயக்கம் அரசியல் இயக்கமாக மாற்றப்படுமா என்கிற கேள்விக்கு விஜய் பதில் சொல்வார் என்கிறார் மாநிலப் பொறுப்பாளரான புஸ்ஸி ஆனந்த். இவர், புதுச்சேரியில் எம்.எல்.ஏ.,வாக இருந்தவர். ஒருவேளை விஜய் அரசியல் பயணத்தைத் தொடங்கினால் அது புதுச்சேரியில் இருந்தும் தொடங்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் மக்கள் இயக்கத்தினரை வேட்பாளர்களாக நிறுத்தி விஜய் ஆழம் பார்க்கலாம். ஏனெனில், பல ஆண்டுகளுக்கு முன்பே நடிகர் விஜய் இப்படி தெரிவித்துள்ளார்:

 "நான் எதில் கால் வைத்தாலும் அதில் ஜெயிக்க வேண்டும் என்ற வெறியும் வேகமும் இருக்கும். இறங்குவதற்கு முன்னர் ஆழம் பார்ப்பது அவசியம். இப்போதுதான் தலைவர்களின் புத்தகங்களை படித்து வருகிறேன்"

'ஒரு குழந்தை உருவாக பத்துமாசம் தேவை. ஒரு பட்டதாரி உருவாக மூணு வருஷம் தேவை. ஆனா... ஒரு தலைவன் உருவாக ஒரு யுகமே தேவைப்படும்' - இது விஜய் பட வசனங்களில் மிகப்பிரபலமான ஒன்று.

விஜய் சொன்னது போல அந்தத் தலைவன் உருவாகி விட்டாரா? இல்லை இன்னும் ஒரு யுகத்திற்காக காத்திருப்பாரா?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com