African continent is splitting into two
African continent is splitting into two

இரண்டு துண்டுகளாகப் பிரியும் ஆப்பிரிக்க கண்டம்... எதிர்காலம்?

Published on

ஆப்பிரிக்க கண்டம் இரண்டாக பிரிந்து கொண்டு இருக்கிறது. ஆப்பிரிக்க கண்டத்தில் ஒரு பெரிய பிளவு ஏற்பட்டுள்ளது. அந்த பிளவு எதிர்காலத்தில் ஒரு கண்டத்தையே இரண்டாகப் பிரிக்கும் என்று யாரும் கற்பனை செய்திருக்க கூட மாட்டார்கள். கிழக்கு ஆப்பிரிக்காவின் அடியில் டெக்டோனிக் தட்டுக்கள் படிப்படியாக ஆப்பிரிக்க கண்டத்தை உடைத்து வருகின்றன.

தெற்கில் மொசாம்பிக்கிலிருந்து வடக்கில் செங்கடல் வரை இந்த பிளவு அதிகரித்துள்ளது. ஆப்பிரிக்க மற்றும் சோமாலிய டெக்டோனிக் தகடுகளுக்கு இடையில் நடைபெறும் பிளவு கிழக்கு ஆப்பிரிக்க பிளவு அமைப்பு என்றழைக்கப்படுகிறது. இந்த டெக்டோனிக் தகடுகள் வருடத்திற்கு சுமார் 0.8 சென்டிமீட்டர் என்ற விகிதத்தில் பிரிந்து, கண்டத்தின் கிழக்கு விளிம்பை ஆப்பிரிக்காவின் மற்ற பகுதிகளிலிருந்து பிரித்து இழுக்கின்றன. இந்த வேகம் மெதுவாகத் தோன்றினாலும், பூகம்பங்கள் மற்றும் எரிமலை செயல்பாடு போன்ற புவியியல் நிகழ்வுகள் இந்த செயல்முறையை கணிசமாக துரிதப்படுத்தும்.

2005 ஆம் ஆண்டில் எத்தியோப்பியாவின் அஃபார் பகுதியில் பூமி இரண்டாகப் பிளந்தது. ஒரு சில வாரங்களில் 420க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் அந்தப் பகுதியில் ஏற்பட்டன. இதனால் 10 மீட்டர் ஆழம் கொண்ட விரிசல் 60 கி.மீ நீளம் வரை ஏற்பட்டது. இது போன்ற பிளவுகள் ஏற்பட பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகும் என்று கருதப்பட்டது. ஒரு மில்லியன் ஆண்டுகளுக்குள் நிகழலாம். ஆனால், இது சில நாட்களில் நடந்ததைக் கண்டு புவியியலாளர்கள் ஆச்சரியப்பட்டனர்.

இந்தப் கண்டப்பிளவு விரிவடையும் போது, ​​சோமாலியா மற்றும் கென்யா போன்ற நாடுகள் பிரதான நிலப் பகுதியிலிருந்து பிரிந்து விலகி வரும், அப்போது பிளவில் கடல் நீர் உட்புகுந்து ஒரு புதிய பெருங்கடலை உருவாக்கும். கடல்நீர் பெருகி பெரிய தனித் தீவை உருவாக்கும்.

ஒரு கண்டம் பிளவுபடுவதையும் ஒரு கடல் உருவாவதையும் விஞ்ஞானிகள் கணிக்கக்கூடிய ஒரே இடம் இதுதான்.

புதிய நிலப்பரப்பின் இறுதி வடிவத்தை விஞ்ஞானிகளால் கணிக்க முடியாவிட்டாலும், பிளவுகள் ஆயிரக்கணக்கான கி.மீ முழுவதும் பரவுவதை வைத்து விரிசல் பகுதிகளை கண்டறியலாம். விரிசல்கள் ஆழமான பள்ளத்தாக்குகள் மற்றும் கரடுமுரடான நிலப்பரப்பை உருவாக்குகின்றன. இந்த எதிர்கால நிலப்பரப்பின் கடற்கரை, செங்கடலுக்கு அருகிலுள்ள அஃபார் பகுதியிலிருந்து தான்சானிய எல்லை வரை செல்லலாம்.

டெக்டோனிக் தட்டுகள் உருவாக்கிய பெரிய பிளவு பள்ளத்தாக்கு வடக்கிலிருந்து தெற்கு வரை 6,000 கி.மீ மேல் வரை செல்கிறது. இந்தப் பிராந்தியத்தின் புவியியல், மூன்று டெக்டோனிக் தகடுகளின் சந்திப்புப் புள்ளி ஆப்பிரிக்க, சோமாலிய மற்றும் அரேபியன் பகுதிகளில் உள்ளது. கிழக்கு ஆப்பிரிக்காவின் பிரிவினால் சாம்பியா மற்றும் உகாண்டா போன்ற நிலத்தால் சூழப்பட்ட நாடுகள் இறுதியில் கடலுக்கான அணுகலைப் பெறலாம். இது வர்த்தகம் மற்றும் மேம்பாட்டிற்கான புதிய பாதைகளைத் திறக்கும். புதிய கடற்கரைகள் உருவாகும்.

சுற்றுச்சூழல் கண்ணோட்டத்தில், தற்போது வறண்ட நிலமாக இருக்கும் கடல் , எதிர்காலத்தில்  பல்லுயிர் பெருக்கத்தை உருவாக்கி பெரிய மாற்றங்களைக் கொண்டுவரும். முழு சுற்றுச்சூழல் அமைப்புகளும் மாற்றமடைந்து புதிய வாழ்விடங்களை உருவாக்கும்.

இதையும் படியுங்கள்:
தங்கம் வென்ற இந்தியாவின் ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா
African continent is splitting into two

அதே நேரத்தில், கடல் மட்டம் உயரும் , பூகம்பங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகள் போன்ற தொடர்ச்சியான ஆபத்து மாறி மாறி வரலாம். மாறிவரும் நிலப்பரப்பின் சவால்களை இந்தப் பகுதி முழுவதும் உள்ள அரசாங்கங்கள் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படும். இதனால் அரசாங்கங்களுக்கு புதிய பொருளாதார சுமைகள் ஏற்படலாம்.

இப்போதைக்கு இந்த பெரும் பிளவின் பெரும்பகுதி எதிர்காலத்தில் நிச்சயமற்றதாகவே உள்ளது. இவ்வளவு குறுகிய காலத்தில் திடீரென ஒரு பெரிய பிளவு தோன்றியது ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது. இது போன்ற புவியியல் மாற்றங்கள் பல நூற்றாண்டுகளாக நடைபெற வேண்டும். திடீரென நிகழும் புவியியல் மாற்றங்கள் மிகப்பெரிய அளவில் ஆபத்துகளையும் உயிர் சேதங்களையும் கொண்டு வரலாம்.

இதையும் படியுங்கள்:
பீட்ரூட் ஜூஸ் குடிப்பது உண்மையிலேயே இரும்புச்சத்தை அதிகரிக்குமா?
African continent is splitting into two
logo
Kalki Online
kalkionline.com