37 நாட்களுக்கும் மேலாக திருவனந்தபுர சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டு, பழுதுபார்க்கப்பட்டு வந்த பிரிட்டனின் அதிநவீன எஃப்-35பி லைட்னிங் II போர் விமானம், செவ்வாய்க்கிழமை (ஜூலை 22, 2025) இறுதியாக கேரளாவில் இருந்து புறப்பட்டுச் சென்றது. இந்த போர் விமானத்தின் திடீர் வருகையும், நீண்டகாலத் தங்குதலும் உள்ளூர் மக்களிடையும், ஊடகங்களிடையும் பெரும் கவனத்தை ஈர்த்திருந்தது.
கடந்த ஜூன் 14 அன்று, ராயல் நேவியை (Royal Navy) சேர்ந்த இந்த எஃப்-35பி ரக போர் விமானம், எரிபொருள் பற்றாக்குறை மற்றும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது. இந்த விமானம் அப்போது சுமார் 100 கடல் மைல் தொலைவில் கேரள கடற்பரப்பில் இருந்த ராயல் நேவியின் ஹெச்.எம்.எஸ். பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் (HMS Prince of Wales) என்ற விமானந்தாங்கி கப்பலில் இருந்து செயல்பட்டு வந்தது. மோசமான வானிலை காரணமாக கப்பலுக்குத் திரும்ப முடியாமல் போனதால், திருவனந்தபுரத்தில் அவசரமாக தரையிறங்க அனுமதி கோரியது.
விமானம் தரையிறங்கியதும், ஆரம்பகட்ட பழுதுபார்ப்பு முயற்சிகள் இந்திய விமானப்படை மற்றும் விமான நிலைய அதிகாரிகளின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டன. எனினும், விமானத்தின் ஹைட்ராலிக் சிஸ்டம் மற்றும் துணை மின் அலகில் (Auxiliary Power Unit) ஏற்பட்ட முக்கிய கோளாறுகள் காரணமாக, பிரிட்டனில் இருந்து சிறப்பு பொறியாளர்கள் குழுவை வரவழைக்க வேண்டியதாயிற்று. ஜூலை 6 அன்று, பிரிட்டனில் இருந்து 14 பேர் கொண்ட நிபுணர் குழு, தேவையான உதிரி பாகங்கள் மற்றும் உபகரணங்களுடன் திருவனந்தபுரம் வந்தடைந்தது.
சுமார் இரண்டு வாரங்களுக்கும் மேலாக, திருவனந்தபுரம் விமான நிலையத்தில் உள்ள ஏர் இந்தியாவின் பழுதுபார்க்கும் மையத்தில் வைத்து இந்த போர் விமானத்தை பழுதுபார்க்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றன. பல கட்ட சோதனைகளுக்குப் பிறகு, விமானம் மீண்டும் செயல்படும் நிலையில் இருப்பதாக உறுதி செய்யப்பட்டது. விமான நிலையம், விமானப் போக்குவரத்து கட்டுப்பாடு, மற்றும் இந்திய பாதுகாப்புத் துறையினரின் தொடர்ச்சியான ஒத்துழைப்புடன், இந்தச் சிக்கலான பணி வெற்றிகரமாக நிறைவுற்றது.
மிகவும் சக்திவாய்ந்த போர் விமானங்களில் எஃப்-35பி யும் ஒன்று. இந்த விமானம் அமெரிக்கா, பிரிட்டன், இத்தாலி ஆகிய நாடுகளிடம் மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது. இந்த விமானம், 51 அடி நீளமும், 7,000 கிலோ எடையை சுமந்து செல்லும் திறனுடையது. இதன் மதிப்பு 100 மில்லியன் டாலர் (ரூ. 859 கோடி) என்கின்றனர்.
இந்த எஃப்-35பி போர் விமானம் புறப்பட்டுச் செல்வதற்கு முன்னதாக, விமான நிலைய அதிகாரிகளுடன் உரிய கட்டணங்கள் மற்றும் பார்க்கிங் கட்டணங்கள் குறித்த கணக்கு தீர்க்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 37 நாட்கள் கேரள மண்ணில் தங்கியிருந்த இந்த நவீன போர் விமானத்தின் வருகை, தொழில்நுட்ப சவால்கள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான ஒரு எடுத்துக்காட்டாக அமைந்தது.
இந்த சம்பவம் கேரள சுற்றுலாத் துறையால் வேடிக்கையாகவும், "கேரளா எவ்வளவு அற்புதமான இடம், நான் வெளியேற விரும்பவில்லை" என்ற தலைப்பில் சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்கள் மற்றும் பதிவுகளாகவும் பகிரப்படுவதும் குறிப்பிடத்தக்கது.