
சாம்பார், வத்தல் குழம்பு இவைகளில் காரம் அதிகமானால் கொஞ்சம் நல்லெண்ணெய் சேர்த்து கொதிக்கவிட்டால் காரம் அடங்கும்.
நீங்கள் பொரியலுக்கு உப்பு காரம் இவற்றை தூவாமல் சிறிது நீரில் அதைக் கரைத்து சேர்க்க அவை பொரியலுக்கு நல்ல சுவை தரும்.
காய்கறிகளை சூப் தயாரிக்கும்போது வெண்ணையில் வதக்கி தயாரிக்க சுவையாக இருக்கும்.
குலோப் ஜாமூன் ஜீரா மீந்துவிட்டால் அதை ஃப்ரிட்ஜ் ஜில் வைத்து அவ்வப்போது தயிருடன் கலந்து ஸ்வீட் லஸ்ஸியாக அருந்தலாம்.
இஞ்சி பூண்டு பேஸ்ட் உடன் உப்பு மஞ்சள் சேர்த்து அரைத்தால் அவை கெடாமல் இருக்கும்.
அவியல் தயாரிப்புக்கான காய்களை வேகவைக்கும் போது அந்த நீரை கொட்டாமல் ரசம் தயாரிக்க மிகச் சுவையாக இருக்கும்.
தினமும் த்ரிபலா பூர்ணம் சாப்பிடுவதால் தோல் பொலிவு பேறும். கண்பார்வை மேம்படும்.
வறுத்த வேர்க்கடலை தோலியை நீக்க அதை துணிப் பையில் போட்டு கையால் தேய்த்து பிறகு அதை முறத்தில் புடைக்க தோலி நீங்கும்.
வெயில் காலத்தில் பாலில் நெல்மணிகள் போட்டு வைத்தால் பால் திரியாது.
பாயசம் நீர்த்துவிட்டால் இரண்டு ஸ்பூன் சோளமாவு கரைத்து சேர்க்க கெட்டியாகும்.
அரைத்து விட்ட சாம்பாருக்கு கசகசா சேர்த்து அரைக்க சுவையாக இருக்கும்.
நீங்கள் ரவாதோசைக்கு கரைத்த மாவை மிக்சியில் பச்சைமிளகாய் கறிவேப்பிலை சேர்த்து அரைத்து தோசை வார்க்க மிகச் சுவையாக இருக்கும்.
கடுகு வெடிக்க விடும்போது சிறிது மஞ்சள் தூள் சேர்த்தால் அவை வெடித்துச் சிதறாது.
முந்திரி மருப்போடு பச்சை கற்பூரம் சிறிது சேர்க்க பூச்சி வராது.
கீரையைக் கடையும்போது அதில் சாதம் வடித்த கஞ்சி சேர்க்க சுவை கூடும்.
நெய் காய்ச்சிய பாத்திரத்தில் சிறிது சுடுநீர் கலந்து சாம்பாரில் சேர்க்க சுவை கூடும்.
அரிசியை டிஷ்யூ பேப்பரில் மடித்து காபி பொடி டப்பாவில் வைக்க காபி கட்டி தட்டாது.
அரிசி உப்புமாவிற்கு வீட்டிலேயே அரிசியை மிக்சியில் ரவையாக உடைத்தபிறகு அதை சலித்து மாவை எடுத்து பிறகு உப்புமா தயாரிக்க உதிரி உதிரியாக வரும்.