மத்திய அரசின் 20% எத்தனால் கலந்த பெட்ரோல் (E20) திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இந்த வழக்கை தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மற்றும் நீதிபதி கே. வினோத் சந்திரன் ஆகியோர் விசாரித்தனர்.
மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ஷாதன் ஃபராசத், 2023 ஏப்ரலுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட வாகனங்களுக்கு E20 பெட்ரோல் ஏற்றதல்ல என்று வாதிட்டார். பழைய வாகனங்களில் எத்தனால் கலந்த பெட்ரோலைப் பயன்படுத்தினால், என்ஜின் பாகங்கள் சேதமடையும், மைலேஜ் குறையும் மற்றும் பழுதுபார்ப்புச் செலவு அதிகரிக்கும் என்று கூறினார்.
மேலும், பழைய வாகனங்களுக்கு எத்தனால் கலக்காத சாதாரண பெட்ரோலை (E0) தொடர்ந்து விற்க வேண்டும் என்றும் அவர் கோரினார். எரிபொருள் பம்புகளில் இதுகுறித்த சரியான தகவல்கள் இல்லை என்றும், இது நுகர்வோர் உரிமையை மீறுவதாகவும் சுட்டிக்காட்டினார்.
மத்திய அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் ஆர். வெங்கடரமணி, இந்த வழக்கு தேவையற்றது என்று கூறினார். இந்த திட்டம் கரும்பு விவசாயிகளுக்கு உதவுகிறது என்றும், நாட்டின் எரிபொருள் பாதுகாப்பிற்கு முக்கியமானது என்றும் அவர் தெரிவித்தார். வெளிநாட்டவர்கள் இந்திய எரிபொருள் கொள்கையைத் தீர்மானிக்க முடியாது என்றும் அவர் ஆவேசமாகப் பேசினார்.
மனுவில் கூறப்பட்ட முக்கிய விஷயங்கள்:
E20 பெட்ரோலுக்கு உகந்ததல்லாத வாகன உரிமையாளர்களுக்கு எத்தனால் கலக்காத பெட்ரோலை வாங்குவதற்கு வாய்ப்பு இல்லை.
எரிபொருள் பம்புகளில் இதுகுறித்த சரியான தகவல்கள் இல்லாததால், நுகர்வோருக்கு தங்கள் விருப்பத்தைத் தேர்வு செய்ய முடியவில்லை.
E20 பெட்ரோல் பயன்படுத்தும்போது, என்ஜின் பாகங்கள் துருப்பிடித்து, எரிபொருள் திறன் குறைகிறது. இதனால் பழுதுபார்ப்பு செலவுகள் அதிகரிக்கின்றன.
எத்தனால் பெட்ரோலை விட விலை குறைவானது என்றாலும், அந்த விலை குறைப்பின் பலன் நுகர்வோருக்கு அளிக்கப்படுவதில்லை.
மனுதாரர் தரப்பு, E0 பெட்ரோலை தொடர்ந்து விற்க வேண்டும் என்றும், எரிபொருள் பம்புகளில் சரியான அறிவிப்புகள் வைக்க வேண்டும் என்றும் கோரியது. ஆனால் உச்ச நீதிமன்றம் இந்த கோரிக்கையை நிராகரித்து வழக்கை தள்ளுபடி செய்தது.