மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்தின் தென்மாவட்டங்களுக்கு மத்திய அரசு நிவாரண நிதி ஒதுக்கியுள்ளது. அந்தவகையில், சுமார் ரூ 276 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் மட்டும் இரண்டு புயல்கள் தாக்கின. முதலாவதாக மிக்ஜாம் புயலால், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தில் அதிகளவு பாதிக்கப்பட்டன. அதன்பின்னர், டிசம்பர் மாதத்தின் இரண்டாம் பாதியில் தென்தமிழகத்தில் பெய்த கனமழையால், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் வெள்ளம் அதிகளவு ஏற்பட்டு கடுமையாக பாதிக்கப்பட்டன. தென்தமிழகத்தில் சுமார் 62 ஆண்டுகளுக்குப் பிறகு அதிகளவு மழை பதிவானது.
டிசம்பர் மாத கனமழையால் பொதுமக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டதை அடுத்து புயல், வெள்ள பாதிப்புகளை சீர் செய்ய மத்திய அரசிடம் தமிழக அரசு போதிய அளவு நிவாரண நிதியை கேட்டிருந்தது. அப்போது, மத்திய அரசு குழு தமிழகம் வந்து வெள்ளத்தால் பாதிப்படைந்த பகுதிகளை ஆய்வு செய்தனர்.
வெள்ள பாதிப்புகளை சீர் செய்ய தமிழக அரசு மத்திய அரசிடம் சுமார் 38 ஆயிரம் கோடி ரூபாயை கேட்டதாக கூறப்பட்டது. ஆனால், அந்த நிவாரண தொகையை மத்திய அரசு வழங்கவில்லை என்றும், ஆண்டு தோறும் மாநிலங்களுக்கு அளிக்கும் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் சிறிய தொகையை மட்டுமே மத்திய அரசு கொடுத்ததாக, தமிழக அரசு தொடர்ந்து கூறிவந்தது. தமிழக அரசு சார்பில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 6 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில்தான், மத்திய அரசு தற்போது மிக்ஜாம் புயல் மற்றும் தென்தமிழகத்தின் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரண தொகையை அறிவித்துள்ளது. அதன்படி, மிக்ஜாம் புயல் பாதிப்புக்கு 285.54 கோடி ரூபாயும், தென் தமிழக வெள்ள பாதிப்புக்கு 397.13 கோடி ரூபாயும், தமிழகத்திற்கான தேசிய பேரிடர் நிதி என 406.57 கோடி ரூபாயும் அளிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
அதில் முதற்கட்டமாக, மிக்ஜாம் புயல் வெள்ளத்திற்கு 115.49 கோடி ரூபாய், தென் தமிழக வெள்ள பாதிப்புக்கு 160.61 கோடி ரூபாய் என மொத்தமாக 276 கோடி ருபாயை தற்போது உடனடியாக மத்திய அரசு வழங்குவதாக அறிவித்துள்ளது.
அதேபோல், கர்நாடகாவில் ஏற்பட்ட வறட்சிக்கு நிவாரணமாக 3,498 கோடி ரூபாயும், தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து 44 கோடி ரூபாயும் அளிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதில் முதற்கட்டமாக கர்நாடகாவுக்கு 3,454 கோடி ரூபாய் அளிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
தற்போது கர்நாடகாவில் லோக்சபா தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. முதற்கட்டமாக நேற்று 14 தொகுதிகளுக்கும், வரும் மே மாதம் 7ம் தேதி 14 தொகுதிகளுக்கும் என இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்தப்படுகின்றன. கர்நாடகாவின் மாநில எதிர்க்கட்சியாக பாஜக உள்ளது குறிப்பிடத்தக்கது.