இஸ்லாமிய அமைப்பான ஹிஸ்புத் தஹீரிர் அமைப்பை மத்திய அரசு பயங்கரவாத அமைப்பாக அறிவித்த நிலையில், அந்த அமைப்பு செயல்பட இந்தியாவில் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
ஹிஸ்புத் தஹீரிர் என்ற அமைப்பு இந்திய நாட்டின் இறையாண்மைக்கு எதிராக பல பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தது. இந்த அமைப்பை பல உலக நாடுகள் தீவிரவாத அமைப்பாக கருதி தடை செய்துவிட்டனர். இதனையடுத்து சமீபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 9 நபர்கள் மற்றும் பெங்களூருவைச் சேர்ந்த ஒரு நபர் என மொத்தம் பத்து நபர்கள் இந்த அமைப்பிற்காக ஆள் திரட்டுவதில் ஈடுபட்டு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் NIA அதிகாரிகளால் சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த டாக்டர் ஹமீது உசேன், அவரது தந்தை மன்சூர், சகோதரர் அப்துல் ரகுமான் அவர்களது நண்பர்களான முகமது மாரீஸ், காதர் நவாஸ் ஷெரீப், அகமது அலி உமாரி, ஃபைசுல் ரகுமான், தஞ்சையைச் சேர்ந்த அப்துல் ரகுமான், முஜிபுர் ரஹ்மான் (எ) முஜிபுர் ரஹ்மான் அல்தான் சாஹிப் மற்றும் பெங்களூரு விமான நிலையத்தில் வைத்து அஜீஸ் அகமது என இதுவரை 10 நபர்களை கைதுசெய்து தேசிய புலனாய்வு முகமை தென்மண்டல அதிகாரிகள் அதிரடி சோதனைகள் ஈடுபட்டு வருகின்றனர் என்ற செய்திகள் வந்துள்ளன.
இந்த அமைப்பை உலக நாடுகள் தடை செய்தாலும், இந்தியா தடை செய்யவில்லை. மேலும் இந்த அமைப்பு காஷ்மீரை விடுவிக்கக்கோரி பாகிஸ்தான் ராணுவத்தினர் உதவியை நாடியதும் இந்திய இறையாண்மைக்கு எதிராக பல சதி செயல்கள் செய்ததும் தெரிய வந்தது.
இதனையடுத்து இதனை பயங்கரவாத அமைப்பாக அறிவித்து இந்தியாவிலும் தடை செய்யப்பட்டுவிட்டது. சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின்படி, பயங்கரவாத அமைப்பாக இந்த ஹிஸ்புத் தஹீரிர் அமைப்பை மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் தடைவிதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த அமைப்பு சமூக வலைதளங்கள் மூலமாக பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதும், இந்த பயங்கரவாத அமைப்பிற்கு ஆள் சேர்த்ததும் தெரியவந்துள்ளதாக மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.