பூமிக்கு வரப்போகும் பேராபத்து. உச்சத்தைத் தொட்ட உலக வெப்பநிலை.

பூமிக்கு வரப்போகும் பேராபத்து. உச்சத்தைத் தொட்ட உலக வெப்பநிலை.

லகில் பருவநிலை மாற்றம் காரணமாக வெப்பநிலை அதிகரித்து வருவதால் பூமிக்கு மிகப்பெரிய பேராபத்து வரப்போகிறது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

கடந்த சில தினங்களுக்கு முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு வெப்பத்தின் அளவு புதிய உச்சத்தை தொட்டது. இது மனிதர்களின் நடவடிக்கையினாலேயே நடக்கிறது என்கிறனர். இந்தப் பருவநிலை மாற்றம் காரணமாகவே திடீரென கொட்டித் தீர்க்கும் மழை, கோடைக்காலத்தில் அதிக வெப்பம் என பல பாதிப்புகளை நாம் சந்தித்து வருகிறோம். என்னதான் இந்த பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் முயற்சி எடுக்க வேண்டும் என பலர் வலியுறுத்தி வந்தாலும், இதில் எவ்விதமான பெரிய முன்னேற்றமும் இருப்பதாகத் தெரியவில்லை. 

கடந்த கோடைக் காலத்தில் வெப்பம் சுட்டெரித்ததை நாம் கண்கூடாகப் பார்த்தோம். இதனால், மதிய நேரத்தில் நம்மால் வெளியே கூட வர முடியவில்லை. இந்த ஆண்டு கோடைக் காலம் முடிந்துவிட்டது என மகிழ்ச்சியாக இருந்தாலும், வரும் ஆண்டுகளில் இது மேலும் சூடாக மாறும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதற்கிடையே மற்றொரு பிரச்சினையாக, உலகின் சராசரி வெப்பநிலை உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த ஜூலை மூன்றாம் தேதி உலகின் சராசரி வெப்பநிலை 17 டிகிரி செல்சியஸை முதன்முறையாகத் தாண்டி இருக்கிறது. வெறும் 17 டிகிரி தானே என சாதாரணமாக நினைக்க வேண்டாம். உலகின் தென் மற்றும் வட துருவங்களில் வெப்பம் மைனஸ் டிகிரிக்கு கீழ் இருக்கும். அப்படி இருக்கையில் உலகில் ஒட்டுமொத்த சராசரி வெப்பம் 17 டிகிரியைத் தொட்டுள்ளது ஆபத்தானதாகவே பார்க்கப்படுகிறது. 

கடந்த 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்தே உலகின் வெப்பம் தொடர்ந்து பதிவு செய்யப்பட்டு வருகிறது. ஆனால், இதுவரை இந்த அளவுக்கு வெப்பம் எப்போதும் அதிகமானதில்லை. இதற்கு 'எல் நினோ' வானிலை நிகழ்வுதான் காரணம் என சொல்லப்படுகிறது. மேலும், பூமியில் கரியமில வாயுவும் அதிகரித்து வருகிறதாம். இது தொடர்ந்து அதிகரித்தால் பூமியின் வெப்பம் மேலும் அதிகரிக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள். 

இந்தியாவைப் பொறுத்தவரை எப்போதுமே மே மாதத்தில் தான் அதிக வெப்பம் இருக்கும். ஆனால் இந்த ஆண்டு மே மாதத்தில் அவ்வப்போது மழை பெய்தது. ஜூன் மாதத்தில் தான் வெப்பம் உச்சத்தைத் தொட்டது. ஜூன் மாதத்தில் தென்னிந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் மோசமான வெப்பம் இருந்தது. 34.05°c என்ற புதிய வெப்ப உச்சத்தை இந்த ஆண்டு தென்னிந்தியா எட்டியது. முன்பு 2014 ஆம் ஆண்டில் 33.74°c அளவில் பதிவான வெப்பம் தான் தென்னிந்தியாவில் அதிகமாக இருந்தது. 

இந்த பருவநிலை மாற்றத்தை உலக நாடுகள் தற்போது கண்டுகொள்ளவில்லை என்றால், எதிர்காலத்தில் வெப்பம் மேலும் அதிகரித்து, மனிதர்கள் பலவிதமான இடர்பாடுகளைச் சந்திக்க வாய்ப்புள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com