காட்டு யானைகளின் அட்டகாசம் தாங்கமுடியாமல் விவசாயிகள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்த பேரில், அவர்கள் காட்டு யானைகளைப் பிடிக்கச் சென்றிருக்கின்றனர். அப்போது அவர்கள் வண்டியை மறித்து காட்டெருமை ஒன்று போக்குக்காட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் சரணாலயம் மற்றும் சாம்பல் நிற அணில்கள் சரணாலயம் ஆகிய இரண்டு சரணாலயங்கள் இயங்கி வருகின்றன. இங்கு புலி, யானை, காட்டெருமை, மிளா, மான், கரடி, சிறுத்தை மற்றும் அரிய வகை அணில்கள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்துவருகின்றன.
இந்தநிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியின் அடிவாரத்தில் 20 நாட்களாக காட்டு யானைகள் சுற்றித் திரிகின்றன. இவை விவசாய நிலங்களுக்குள் நுழைந்து தென்னை, மாமரம், பலா, வாழை உள்ளிட்ட மரங்களை சேதப்படுத்தியதால், விவசாயிகள் பெரும் கவலையில் ஆழ்ந்தனர். ஆகையால், காட்டு யானைகளை விரட்ட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்ததால், வனத்துறையினர் கடந்த 20 நாட்களாக தினமும் தீ மூட்டம் மூட்டி ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் செண்பகத்தோப்பு - அத்திதுண்டு சாலையில் காட்டுயானைகள் சுற்றி வந்துள்ளது. இதனைக்கண்ட விவசாயிகள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து யானையை காட்டுக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் வனத்துறையினர் அவ்விடத்திற்கு ரோந்து வந்த போது, திடீரென சாலையின் குறுக்கே ஒரு காட்டெருமை வந்து மறித்து நின்றது. சிறிதுநேரம் சாலையில் அங்கும் இங்கும் நடந்து சென்றது. வனத்துறையினர் காத்திருந்துப் பார்த்தனர். ஒருகட்டத்தில் அந்த காட்டெருமை வனத்துறையினரின் வாகனத்தைத் தாக்க முயன்றதால், சுதாரித்த வனத்துறையினர், காட்டெருமையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
தொடர்ந்து மேற்குத்தொடர்ச்சி மலை அடிவார பகுதியை சுற்றி வலம்வரும் காட்டு யானைகளை நோட்டமிட்டு வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து வனத்துறையினர் பேசியதாவது, “மலையடிவாரப் பகுதிகளில் விலங்குகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், விவசாய நிலங்களுக்குச் செல்லும் விவசாயிகள் மாலை மற்றும் இரவு நேரங்களில் கவனமுடன் செல்ல வேண்டும். வனப்பகுதிக்குள் வரும் சாலைகளை மாலை நேரத்துக்குப் பிறகு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். காட்டு விலங்குகளைக் கண்டால், உடனே வனத்துறையினருக்கு தெரிவிக்க வேண்டும். விவசாயிகள் தாமாக முன்வந்து விலங்குகளை விரட்ட முயற்சிக்க வேண்டும்.” என்று தெரிவித்தனர்.