

ORS என்பது உலக சுகாதார நிறுவனம் (WHO) பரிந்துரைத்த ஒரு துல்லியமான உப்பு மற்றும் சர்க்கரை கலவையாகும். உடலுக்கு நீர்ச்சத்து இழப்பு ஏற்பட்டால் பரிந்துரைக்கப்படும் பானம்.ஆனால் அவற்றில் சில பானங்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட சர்க்கரை மிக அதிகளவு உள்ளதாகவும், சில சமயங்களில் மருத்துவ ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட அளவை விட பத்து மடங்கு அதிகமாக உள்ளதாகவும் புகார்கள் எழுப்பப்பட்டு வந்தன.
இதுதொடர்பாக கடந்த 8 ஆண்டுகளாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்த ஹைதராபாத்தை சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவரான சிவரஞ்சனி சந்தோஷ், போராட்டத்திற்கு தற்போது பலன் கிடைத்துள்ளது. ஆம், அக்டோபர் 14, 2025 அன்று, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையம் (FSSAI), உணவு மற்றும் பான நிறுவனங்கள் தங்களது லேபிள்கள் அல்லது வர்த்தக முத்திரைகளில் "ORS" (வாய்வழி நீரேற்ற தீர்வு) என்ற வார்த்தையை முன்னொட்டு அல்லது பின்னொட்டாகப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் முக்கிய ஆலோசனையை வெளியிட்டுள்ளது.
அதாவது அதிக சர்க்கரை கொண்ட எந்த பானத்தையும் இனி ORS என்ற பெயரில் விற்க முடியாது.
இந்நிலையில் தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்ப அலை காரணமாக பொதுமக்களுக்கு நீர்ச்சத்து இழப்பு ஏற்படுவதைத் தடுக்க, பொது சுகாதாரத் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ORS (உப்புச் சர்க்கரை கரைசல்) தடையின்றி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.விவசாயக் கூலித் தொழிலாளர்கள் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ORS கரைசல் வழங்க வேண்டும் என்றும், அரசு மருத்துவமனைகளில் பொதுமக்கள் இலவசமாக ORS கரைசலைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து பொது மருத்துவமனைகளிலும் வெயில் பாதிப்பு சிகிச்சைக்காக ‘ஹீட் ஸ்ட்ரோக்’ என்ற சிறப்பு வார்டு அமைக்க அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், ஹீட் ஸ்ட்ரோக் காரணமான உயிரிழப்புகளைத் தடுக்க மாவட்ட சுகாதாரத் துறை அலுவலர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது மருந்து கடைகளுக்கு தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்கம் மற்றும் உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ORS மற்றும் ORSL கரைசல்களை முறையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி விற்பனை செய்யுமாறு மருந்துக் கடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. "FSSAI அங்கீகரிக்கப்பட்ட ORSL, ORSL Plus விற்பனை செய்யப்படுவதை பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்". அங்கீகரிக்கப்படாத ORS மற்றும் ORSL தயாரிப்புகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.