

தென்கிழக்கு வங்கக் கடலை ஒட்டிய இந்தியப் பெருங்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்தக் குறைந்த காற்றழுத்தப் பகுதி இன்று (ஜனவரி 6) மேலும் வலுவடைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, ஜனவரி 6 முதல் ஜனவரி 9-ஆம் தேதி வரை தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையத்தின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 9-ஆம் தேதியன்று தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஜனவரி 10 அன்று தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று லேசான பனிமூட்டத்துடன் வறண்ட வானிலையே நிலவக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது. இதனிடையே, வரும் 9-ஆம் தேதி தொடங்கி 14-ஆம் தேதி வரை தமிழகக் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகத் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.