

தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பை அதிகரிப்பதில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வேலை வாய்ப்புகளை உருவாக்குவது மட்டுமின்றி, தொழில்முனைவோர்களை உருவாக்கவும் தமிழக அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தி, மானியமும் வழங்கி வருகிறது.
குறிப்பாக பெண் தொழில் முனைவோர்களை அதிகளவில் உருவாக்க, தமிழக மகளிர் தொழில்முனைவோர் மேம்பாட்டு திட்டத்தை தொடங்கியுள்ளது அரசு. இத்திட்டத்தின் கீழ் கடன் பெறும் பெண்களுக்கு இனி 14 நாட்களுக்குள் மானியம் வழங்க ஒப்புதல் அளிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு தொழில்துறை அறிவுரைத்துள்ளது.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையின் கீழ் செயல்படும் தொழில் வணிக ஆணையரகம், மகளிர் தொழில்முனைவோர் மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் படி ஓராண்டுக்கு 20,000 பெண் தொழில்முனைவோர்களை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழக மகளிர் தொழில்முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், தொழில் தொடங்க கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் இதுவரை 15,529 பெண்கள் கடன் பெற விண்ணப்பித்துள்ளனர். இதில் 8,210 பெண்களுக்கு கடன் வழங்க தமிழக அரசு சார்பில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
பெண் தொழில்முனைவோர்களின் விண்ணப்பங்கள் அனைத்தையும் சரிபார்த்து, விரைவில் அனைவருக்கும் கடன் வழங்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கடனுக்கு 25% மானியம் வழங்கவுள்ளது தமிழக அரசு.
பெண் தொழில்முனைவோர்களுக்கு கடன் வழங்குவதிலும், மானியம் வழங்குவதிலும் காலதாமதம் ஏற்படுவதால் விரைந்து தொழிலை தொடங்க முடியாமல் பெண்கள் சிரமப்படுகின்றனர். இதன் காரணமாக இனி கடனுக்கு விண்ணப்பித்த 14 நாட்களுக்குள் மானியத்துடன் கடன் வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் பெண்களின் விண்ணப்பங்களை விரைந்து பரிசீலனை செய்து, இரண்டே வாரங்களுக்குள் மானியம் வழங்க அதிகாரிகள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அறிவுரைத்துள்ளது.
தமிழக மகளிர் தொழில்முனைவோர் மேம்பாட்டு திட்டத்தில் கைவினைப் பொருள்கள், சுற்றுச்சூழலுக்கு ஏற்ற பொருள்கள், வளர்ந்து வருகின்ற சேவை தொழில்களை தொடங்குதல், ஸ்டார்ட்அப் நிறுவனம் தொடங்குதல், குழந்தைகள் காப்பகம் மற்றும் அன்றாடத் தேவைகளுக்கு உதவும் பொருட்களைத் தாயாரிக்க கடனுதவி வழங்கப்படுகிறது.
வயது வரம்பு: 18 முதல் 55 வயது வரையிலான பெண்கள் மானியத்துடன் கடன் பெற விண்ணப்பிக்கலாம்.
கடன் தொகை: அதிகபட்சம் ரூ.10 லட்சம் வழங்கப்படும்.
மானியத் தொகை: தொழில் தொடங்குவதற்கான திட்ட மதிப்பில் 25% அல்லது அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை மானியம் வழங்கப்படும்.
வங்கிக் கடன் பெற விரும்பும் பெண்கள் www.msmeonline.tn.gov.in/twees என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களில் யாரேனும் ஒருவர் மட்டுமே இத்திட்டத்தின் கீழ் பயன் பெற முடியும்.
இத்திட்டத்தில் கடன் பெற விண்ணப்பிக்க கல்வித்தகுதி மற்றும் வருமான உச்ச வரம்பு ஏதுமில்லை. விண்ணப்பிக்கும் போது குடும்ப அட்டை, ஆதார் அட்டை, சாதி சான்றிதழ், திட்ட அறிக்கை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், வங்கி கணக்கு புத்தகம் மற்றும் விலைப் பட்டியலை பதிவேற்றம் செய்ய வேண்டும்.