
உலக நாடுகள் பலவும் நிலா குறித்த ஆராய்ச்சிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. சமீபத்தில் இந்தியா சந்திராயன் செயற்கைகோளை நிலவுக்கு அனுப்பி, அதன் தென்துருவத்தை ஆராய்ச்சி செய்தது. இந்நிலையில் நிலவின் ஒரு பகுதி துருப்பிடித்து வருவதாக சீனாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்துள்ளனர்.
சீனாவில் உள்ள மக்காவ் பல்கலைக்கழகத்தில் ஜிலியான் ஜிங் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு நிலவின் மேற்பரப்பை ஆராய்ச்சி செய்தனர். பூமிக்கும் நிலவுக்கும் இடையிலான ஆழ்ந்த தொடர்பைப் புரிந்து கொள்ள இந்த ஆராய்ச்சி உதவியதாக அவர்கள் தெரிவித்தனர்.
நிலவின் மேற்பரப்பு குறித்த ஆராய்ச்சி பற்றி விஞ்ஞானிகள் கூறுகையில், “நிலவில் தற்போது ஒரு கெட்ட நிகழ்வு நடந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணமே ஹெமடைட் இரசாயனம் தான். நிலவின் மேற்பரப்பில் உள்ள துருவப் பகுதிகளில் ஹெமடைட் என்ற இரசாயனம் அதிகளவில் இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் நிலவின் துருவப் பகுதிகளில் துருப்பிடித்தல் நடக்கிறது. ஏனெனில் ஹெமடைட் இரசாயனம் ஒரு இரும்பு ஆக்சைடு என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் துருப்பிடித்தலுக்கு தண்ணீரும், காற்றும் தேவை. ஆனால் ஹெமடைட் இரசாயனத்திற்கு எங்கிருந்து காற்று மற்றும் தண்ணீர் கிடைக்கிறது என குழம்பினோம். பூமியில் இருந்து காற்று நிலவுக்குப் பயணம் செய்வதால், காற்று இங்கிருந்து தான் நிலவுக்கு சென்றிருக்க வேண்டும். நிலவில் தண்ணீரும், காற்றும் குறைவாகவே உள்ளது. இந்நிலையில் நிலவு துருப்பிடிக்க பூமி தான் முக்கிய காரணமாக உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.
இதனை ஒரு செயற்கையான ஆராய்ச்சி மூலமே நாங்கள் கண்டுபிடித்தோம். நிலவின் துருப்பிடித்தலை ஆழமாகப் புரிந்து கொண்டால், இது நிலா தொடர்பான அடுத்தடுத்த ஆராய்ச்சிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்” என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
சந்திராயன்-1 செயற்கைகோளை இந்தியா நிலவுக்கு அனுப்பிய போதே ஹெமடைட் இரசாயனம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் சீன விஞ்ஞானிகளும் அதையே கூறுகின்றனர். நிலவு துருப்பிடிபபது உண்மையென்றால், இனி வரும் காலங்களில் அது விஞ்ஞான உலகில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது.
ஏற்கனவே பூமியை விட்டு நிலா விலகிச் செல்கிறது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நிலா துருப்பிடிப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.