
இந்தியாவில் வருமான வரி தாக்கல் செய்யும் பெண்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. நல்ல ஊதியம் பெறும் வேலைகள் அல்லது சொந்தமாக தொழில் தொடங்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை இது காட்டுகிறது.
இதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை. நாட்டில் விடுதலைக்குப் பின் பெண்களின் வளர்ச்சி எப்போதும் சீராக உயர்ந்துக் கொண்டு தான் உள்ளது. நாட்டில் பெண்களின் கல்வியறிவு சதவீதம் உச்சத்தில் உள்ளதால், அவர்களில் வேலைக்கு செல்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. வருமானவரி கட்டுவதில் அவர்களுக்கு விருப்பம் உள்ளது. நாட்டின் வளர்ச்சியில் அவர்கள் தங்களது பங்களிப்பை தர முன் வருகின்றனர்.
கடந்த 4 ஆண்டு காலமாக வருமானவரி கணக்கு தாக்கல் செய்யும் பெண்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. 2019-20 மதிப்பீட்டு ஆண்டில் 1 கோடியே 83 லட்சம் பெண்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர். 2023-24 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரிக் கணக்கை 2 கோடியே 29 லட்சம் பெண்கள் தாக்கல் செய்துள்ளனர். இந்த தரவுகளின் படி 4 ஆண்டுகளில் பெண்களின் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை 25% அதிகரித்துள்ளது.
மஹாராஷ்டிராவிற்கு முதலிடம்:
மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த பெண்கள், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதில் முதலிடத்தில் உள்ளதாக நிதியமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. மகாராஷ்டிராவில் மட்டும் 36 லட்சத்து 83 ஆயிரம் பெண்கள், 2023-24 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்துள்ளனர். இந்த எண்ணிக்கையின் அளவு 2019-20 மதிப்பீட்டு ஆண்டில் 29 லட்சத்து 94 ஆயிரமாக இருந்தது. இதன் மூலம் 4 ஆண்டுகளில் மகாராஷ்டிராவில் வருமான வரி தாக்கல் செய்த பெண்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 88 ஆயிரம் அதிகரித்துள்ளது. அந்த மாநிலத்தில் பெண்களின் வருமான வரி தாக்கல் அளவு 23% உயர்ந்து உள்ளது.
உத்தரபிரதேசத்தில் 2019-20 மதிப்பீட்டு ஆண்டில், வருமான வரி தாக்கல் செய்த பெண்களின் எண்ணிக்கை 15 லட்சத்து 81 ஆயிரமாக இருந்தது. இது 2023-24 மதிப்பீட்டு ஆண்டில் 20 லட்சத்து 43 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இந்த நான்கு ஆண்டுகளில் பெண்கள் தாக்கல் செய்த வருமான வரி கணக்குகளின் எண்ணிக்கை 4,62,000 அதிகரித்துள்ளது.
குஜராத்தில் 2023-24 மதிப்பீட்டு ஆண்டில், பெண்கள் தாக்கல் செய்த வருமான வரி கணக்குகளின் எண்ணிக்கை 22 லட்சத்து 50 ஆயிரம்.
லடாக்கில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் பெண்களின் எண்ணிக்கை 2019-20 மதிப்பீட்டு ஆண்டில் 30 பேராக இருந்தது , 2023-24 மதிப்பீட்டு ஆண்டில் 205 பெண்களாக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் 2019-20 மதிப்பீட்டு ஆண்டில் 12,92,028 ஆக இருந்த வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்த பெண்களின் எண்ணிக்கை ,2023-24 மதிப்பீட்டு ஆண்டில் 15,51,769 ஆக அதிகரித்து 20% எண்ணிக்கை உயர்ந்துள்ளது. கர்நாடகாவிலும் 20% அதிகரித்து 14,30,345 பெண்கள் 2023-24 மதிப்பீட்டு ஆண்டில் வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்தனர். பஞ்சாப் மற்றும் ராஜஸ்தானில் 4 ஆண்டில் வருமான வரி தாக்கல் செய்த பெண்களின் எண்ணிக்கை சதவீதம் மற்ற மாநிலங்களை விட மிகவும் அதிகமாக உள்ளது.
நாட்டிலேயே சண்டிகரில் மட்டுமே வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் பெண்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. 2019-20 மதிப்பீட்டு ஆண்டில் 89 ஆயிரத்து 873 பெண்கள் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்துள்ளனர். 4 ஆண்டுகளுக்கு பிறகு அந்த எண்ணிக்கை 88 ஆயிரத்து 115 ஆக குறைந்ததுள்ளது.