விமானத்தில் பெண்ணை அவமதித்த நபர் பணி நீக்கம்!

விமானத்தில் பெண்ணை அவமதித்த நபர் பணி நீக்கம்!

கடந்த நவம்பர் மாதம் அமெரிக்காவின் நியூயார்க் நகரிலிருந்து தில்லிக்கு ஏர் இந்தியா விமானம் வந்து கொண்டிருந்தது. விமானத்தில் குடிபோதையில் இருந்த ஆண் பயணி ஒருவர் பிஸினஸ் கிளாஸ் வகுப்பில் பயணம் செய்த மூதாட்டியின் மீது சிறுநீர் கழித்துள்ளார்.

இது குறித்து விமானப் பணியாளர்களிடம் தெரிவித்தபோது அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

இதனால் கோபமடைந்த அந்த மூதாட்டி, பின்னர் தனக்கு நேர்ந்த அவலம் குறித்து ஏர் இந்தியா குழுமத் தலைவர் சந்திரசேகரனுக்கு கடிதம் மூலம் புகார் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து ஏறக்குறைய 40 நாட்களுக்குப் பிறகு இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பினரும் இது தொடர்பாக கண்டனக்குரல் எழுப்பியிருந்தனர். இதையடுத்து போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்தனர். அந்த பயணி 30 நாட்களுக்கு விமானத்தில் பயணிக்க தடைவிதிப்பதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்தது.

பின்னர் அந்த நபர் அப்பெண்ணிடம். “என்னை மன்னித்துவிடுங்கள். நீங்கள் இதுபற்றி போலீசில் புகார் கொடுத்தால் எனது வாழ்க்கை பாதிக்கப்பட்டும்” என்று கெஞ்சியதாக கூறப்படுகிறது.

இதனிடையே இந்த விஷயத்தை பெரிதுபடுத்த வேண்டாம். இதுகுறித்து விமான பணிக்குழுவினரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என்று ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்திருந்தது.

விமான போக்குவரத்துத்துறை டைரக்டர் ஜெனரலும், இதுபோன்ற சம்பவங்கள் விமானப் பயணத்தின்போது நடந்தால் அது பற்றி தங்களுக்கு தெரிவிக்க வேண்டும். இல்லையெனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் விமானக் குழுவினருக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபரின் பெயர் சங்கர் மிஸ்ரா என்றும் அவர் மும்பையைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்ததும் அவரை தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே அப்படி ஒரு சம்பவமே நடைபெறவில்லை என்றும் தமது மகன் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாகவும் முன்பு கூறிவந்த சங்கர் மிஸ்ராவின் தந்தையும் வழக்குரைஞருமான ஷியாம் மிஸ்ரா பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக அந்த பெண் கேட்ட பணம் கொடுக்கப்பட்டு சமரசம் செய்துகொள்ளப்பட்டது. ஆனால் இப்போது அவர் போலீஸில் தேவையில்லாமல் புகார் செய்துள்ளார்.

எங்களிடம் பணம் பறிக்கவே அவர் இவ்வாறு புகார் கூறியுள்ளார் என்றார்.

இந்நிலையில் சங்கர் மிஸ்ரா வேலை செய்து வந்த பன்னாட்டு நிறுவனமான வெல்ஸ் பார்கோ, அவரை பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. மிஸ்ரா, கலிபோர்னியைவை தலைமையகமாகக் கொண்ட அந்த நிறுவனத்தில் இந்தியாவின் துணைத் தலைவராக பணிபுரிந்து வந்தார்.

சங்கர் மிஸ்ரா மீதான புகார்கள் எங்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. நாங்கள் தகுதியானவர்களையும் நன்னடத்தை உள்ளவர்களையுமே பணியமர்த்துகிறோம். பெண்ணிடம் முறைதவறி நடந்து கொண்ட சங்கர் மிஸ்ராவை பணி நீக்கம் செய்கிறோம் என்று தெரிவித்துள்ளது.

இதனிடையே தலைமறைவாக இருந்த சங்கர் மிஸ்ராவை போலீஸார் வெள்ளிக்கிழமை (ஜன.6) இரவு பெங்களூரில் கைது செய்தனர். அவர் பெங்களூரில் இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து தில்லி போலீஸார் விரைந்து சென்று அவரை கைது செய்து தில்லிக்கு அழைத்து வந்தனர். செல்லிடைபேசியை அவர் சுவிட்ச் ஆஃப் செய்திருந்தபோதிலும், சமூக வலைத்தளத்தை அவர் பயன்படுத்திவந்ததால் அவர் இருக்குமிடத்தை கண்டுபிடித்து கைது செய்தோம் என்று போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com