தொடர்ந்து ஏறுமுகத்தில் சிமெண்ட் விலை, கையை பிசையும் கட்டுமானத் தொழில் நிறுவனங்கள்!

தொடர்ந்து ஏறுமுகத்தில் சிமெண்ட் விலை, கையை பிசையும் கட்டுமானத் தொழில் நிறுவனங்கள்!

கொரோனா தொற்றுப் பின்னர் கடந்த ஓராண்டில் கட்டுமானத் தொழில் மீண்டு வந்திருக்கிறது. நாட்டின் பல இடங்களில் கட்டுமானப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சிமெண்ட் விலை குறையுமா என்கிற கேள்வி பத்து மாதங்களாக தொடர்ந்து இருந்து வருகிறது.

சிமெண்ட் விலை தொடர்ந்து ஏறுவதால் இந்தியா முழுவதுமே கட்டுமானத்துறை பெரிய பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. அதையும் மீறி டிமாண்ட் இருப்பதால் கட்டுமானத் தொழிலில் இதுவரை சுணக்கம் இல்லை. ஆனால், சிமெண்ட விலை குறையவேண்டும் என்கிற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

கடந்த மாதம், வட இந்தியாவில் மட்டும் ஒவ்வொரு மூட்டைக்கும் 10 முதல் 20 ரூபாய் வரை விலை ஏறியிருக்கிறது. டிமாண்ட் அதிகமாக இருப்பதாலும், பல முன்னணி நிறுவனங்களின் சிமெண்ட் நிறுவன யூனிட் மூடப்பட்டிருப்பதாலும் நாடு முழுவதும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.

இதன் காரணமாக நாட்டின் பிற பகுதிகளிலும், தென்னிந்திய மாநிலங்களிலும் கூட சிமெண்ட் மூட்டையின் விலை தொடர்ந்து ஏற்றத்தில் இருந்து வருகிறது. 50 கிலோ எடையுள்ள ஒரு சிமெண்ட் மூட்டையின் விலை, 370 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

சிமெண்ட் மூலப்பொருட்களின் விலை உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, நிலக்கரி தட்டுப்பாடு என பல்வேறு காரணங்கள் விலை உயர்வுக்கு காரணமாக சொல்லப்படுகின்றன. சிமெண்ட் உற்பத்தி நடப்பாண்டில் குறைந்தபட்சம் 6 சதவீத வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிமெண்ட் விலை குறையும் பட்சத்தில் இரண்டு இலக்க வளர்ச்சி விகிதத்தையும் தொட முடியும்.

சராசரியாக 5000 டன் சிமெண்ட் ஒவ்வொரு மாதமும் விற்பனையாகிறது. அல்ட்ரா டெக், ஸ்ரீ சிமெண்ட், அம்புஜா சிமெண்ட், டால்மியா சிமெண்ட், ராம்கோ சிமெண்ட் ஜேகே சிமெண்ட் என அனைத்து முன்னணி நிறுவனங்களின் விற்பனையும் ஏறக்குறைய இதே அளவில் உள்ளன. முதலிடத்தில் ஜே.கே சிமெண்ட், அதற்கு அடுத்தபடியாக ராம்கோ சிமெண்ட் என இரண்டுமே தேசிய அளவில் நல்ல விற்பனையில் உள்ளன.

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நேரத்தில் கட்டுமானத் திட்டங்கள் விறுவிறுப்பான நிலையை எட்டியிருக்கின்றன. எக்ஸ்பிரஸ் சாலைகள் அனைத்தும் இவ்வாண்டு இறுதிக்குள் நிறைவேற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பட்ஜெட்டில் கிராமப்புற வீடு கட்டும் திட்டங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன. ஜல் ஜீவன் உள்ளிட்ட ஊரக வளர்ச்சித் திட்டங்களுக்கான கட்டுமான பணிகளையும் இவ்வாண்டு இறுதிக்குள் முடித்தாக வேண்டும். எப்படிப் பார்த்தாலும் சிமெண்ட் தேவை என்பது அடுத்து வரப்போகும் ஓராண்டில் அதிகரிக்க வாய்ப்புண்டு.

ஆகவே, சிமெண்ட் விலை குறைவதற்கு இனி வாய்ப்பில்லை. கிடுகிடுவென்று உயர்ந்துவிடாமல் மெல்ல மெல்ல உயர்ந்தால் நிலைமையை சமாளித்துவிடலாம் என்கிற முடிவுக்கு ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் வந்துவிட்டன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com