இந்த ஆண்டு G7 மாநாட்டில் கலந்துக்கொள்ள இன்று இந்திய பிரதமர் மோடி இத்தாலி சென்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, காலிஸ்தான் பயங்கரவாதிகள் அங்குள்ள காந்தி சிலையை உடைத்திருக்கின்றனர்.
சமீபத்தில் நடைபெற்ற லோக்சபா தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெற்றது. இதனையடுத்து மூன்றாவது முறையாக மோடி பிரதமராகப் பதவியேற்றார். மோடி பதவியேற்றவுடன் முதல் வெளிநாட்டு பயணமாக இன்று இத்தாலி சென்றார். உலகநாடுகளின் முக்கிய அமைப்புகளில் ஒன்றாக இருக்கும் ஜி 7ன் தலைமை பொறுப்பை இத்தாலி வகிக்கிறது. இந்த ஆண்டு ஜி 7 உச்சிமாநாட்டை நடத்தும் இத்தாலி, இந்தியா உள்ளிட்ட 12 நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்புவிடுத்துள்ளது.
இத்தாலியின் அபுலியாவில் இன்று முதல் வரும் 15ம் தேதி வரை ஜி7 உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. ஆகையால், பிரதமர் நரேந்திர மோடி இன்று இத்தாலி சென்றார். இம்மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் உள்ளிட்டோருடன் பிரதமர் மோடியும் பங்கேற்கிறார்.
பிரதமர் மோடியுடன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் தலைமையிலான குழுக்களும் ஜி 7 மாநாட்டுக்கு செல்கிறது.
இதனிடையேதான், காலிஸ்தான் தீவிரவாதிகள் பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சீக்கியர்களுக்கு தனி நாடு வேண்டும் என்ற முழக்கத்துடன் காலிஸ்தான் இயக்கம் செயல்பட்டு வருகிறது. முந்தைய காலங்களில் இந்த இயக்கம் பயங்கரவாத நடவடிக்கைகளிலும் ஈடுபட்டது. இந்த இயக்கம் ஒடுக்கப்பட்ட போதிலும், வெளி நாடுகளில் வசிக்கும் பல சீக்கியர்கள் தொடர்ச்சியாக காலிஸ்தான் கோரிக்கையை எழுப்பி வருகின்றனர். சமீபத்தில்கூட கனடாவில் ‘காலிஸ்தான் ஜிந்தாபாத்’ என்று அங்குள்ள சீக்கியர்கள் கோஷம் எழுப்பினார்கள்.
வெளிநாடுகளில் உள்ள காலிஸ்தான் பயங்கரவாதிகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். இதனையடுத்து தற்போது, காலிஸ்தான் தீவிரவாதி நிஜ்ஜார் படுகொலையை சுட்டிக்காட்டி பிரதமர் மோடிக்கு, இந்த பயங்கரவாதிகள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி உள்ளனர். இத்தாலியில் உள்ள மகாத்மா காந்தியடிகள் சிலையை காலிஸ்தான் தீவிரவாதிகள் உடைத்திருக்கின்றனர். அத்துடன் பிரதமர் மோடியின் இத்தாலி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சுவரொட்டிகளை வீசி உள்ளனர்.