விநாயகப் பெருமானின் பிறந்தநாளான விநாயகர் சதுர்த்தி, இந்த ஆண்டு ஆகஸ்ட் 27ஆம் தேதி, புதன்கிழமை அன்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. அந்தவகையில் 500 கோடி மதிப்புள்ள மிகச்சிறிய விநாயகர் குறித்து பார்ப்போமா?
ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி திதியில் கொண்டாடப்படும் இந்த விழா, ஆன்மிக ரீதியாகவும், சமூக ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பக்தர்கள் வீடுகளில் களிமண் பிள்ளையார் சிலைகளை வைத்து, கொழுக்கட்டை, மோதகம் உள்ளிட்ட பல்வேறு உணவுப் பதார்த்தங்களை படையலிட்டு வழிபடுவார்கள். 10 நாட்கள் நடைபெறும் இந்த விழா, அனந்த சதுர்த்தியன்று விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைத்து நிறைவு பெறும்.
விநாயகர் சதூர்த்திக்கு பல மாதங்கள் முன்பே சிலைகள் செய்ய ஆரம்பித்து விடுவார்கள். ஒரு மாதம் முன்னரே விற்பனை சூடுபிடிக்க ஆரம்பித்துவிடும். விதவிதமான சிலைகள் நாடு முழுவதும் பல வண்ணங்களில் பல கலைஞர்களால் உருவாக்கப்படும்.
அப்படியிருக்க இதுவரையில் சிறப்புமிக்க ஒரு விநாயகர் சிலையாக இருந்து வரும் விலைமதிப்புள்ள சிலைப்பற்றி பார்ப்போம்.
இந்தியாவில் பல இடங்களில் விநாயகர் சிலைகள் இருந்தாலும், குஜராத்தின் சூரத் நகரத்தில்தான் உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த விநாயகர் சிலை உள்ளது.
சூரத்தைச் சேர்ந்த ராஜேஷ் பாய் பாண்டவ் என்ற தொழிலதிபர் இந்த சிலையை வைத்திருக்கிறார். இது வெறும் 2.44 செ.மீ. உயரம் மட்டுமே. ஆனால் இதன் விலை சுமார் 500 கோடி ரூபாய். ஏனெனில், இது பட்டை தீட்டப்படாத வைரத்தால் செய்யப்பட்டது. புகைப்படங்களில் வெள்ளை கல் போல் தோன்றினாலும், இது மிகவும் அரிய வகை வைரம்.
ராஜேஷ் பாய் பாண்டவ் ஒருமுறை தென்னாப்பிரிக்காவில் ஒரு ஏலத்தில், 29,000 ரூபாய்க்கு இதை வாங்கியுள்ளார். தென்னாப்பிரிக்காவில் இருந்தவர்களுக்கு இது வெறும் வைரம்தான். ஆனால், ராஜேஷ் அதில் விநாயகரைப் பார்த்தார். அதை இந்தியாவுக்குக் கொண்டு வந்து தனது வீட்டில் வைத்து வழிபடுகிறார்.
இந்த சிலையை அவர்கள் 'டைமண்ட்ஸ் ஆஃப் இந்தியா' நிறுவனத்திடம் பரிசோதித்தபோது, அது இயற்கையாக உருவானது என கண்டறியப்பட்டது. இந்த வைரம் மட்டுமே தனித்துவமானது என்பதை நிரூபிக்கவும் குடும்பத்தினரிடம் ஆதாரம் உள்ளது.27 காரட் வைரத்தின் மதிப்பு ரூ.500 கோடி என்று குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இந்த சிலையை வீட்டில் வைத்த பிறகு, தனது குடும்பத்திற்கு நிறைய நல்லது நடந்ததாக ராஜேஷ் கூறுகிறார். அவர் விநாயகரின் தீவிர பக்தர். 2016ஆம் ஆண்டு முதல், ராஜேஷ் ஒவ்வொரு வருடமும் நடக்கும் கண்காட்சியில் இந்த வைர விநாயகர் சிலையை பொதுமக்களுக்குக் காட்சிப்படுத்துகிறார்.
இந்த வைரம் ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவின்போது வழிபாட்டிற்காக வெளியே கொண்டு வரப்படுகிறது. இந்த ஆண்டும், சிலை போன்ற இந்த வைரம் முக்கிய ஈர்ப்பாக உள்ளது.விநாயகர் சதுர்த்தியின் 10 நாட்கள் முடிந்ததும், குடும்பத்தினர் வைரத்தை பாலில் கழுவி மீண்டும் ஒரு லாக்கருக்குள் வைக்கிறார்கள்.