தமிழகத்தில் சாலை வரியை உயர்த்த மாநில போக்குவரத்து துறை முடிவு! உயரும் கார்,பைக் விலை!

தமிழகத்தில் சாலை வரியை உயர்த்த மாநில போக்குவரத்து துறை முடிவு! உயரும் கார்,பைக் விலை!
Published on

வரி விகிதங்கள் தென் மாநிலங்களிலேயே மிகக்குறைவாக இருப்பதால் கடந்த ஆண்டு வரியை சீரமைக்க வேண்டும் என போக்குவரத்து துறை அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது. இதன்காரணமாக தமிழ்நாட்டில் சாலை வரியை உயர்த்த மாநில போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.

சமீபத்தில் இதுதொடர்பாக போக்குவரத்து மற்றும் போக்குவரத்து ஆணையரக அதிகாரிகளுடன் தலைமை செயலாளர் ஒரு கூட்டம் நடத்தியுள்ளார். இந்த கூட்டத்தில் சாலை வரியை உயர்த்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டுள்ளது. எனவே புதிய வரி உயர்வு தொடர்பாக விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் வர்த்தக வாகனங்கள் மற்றும் பிற போக்குவரத்து அல்லாத வாகனங்களுக்கான வரிகளும், அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், விலை உயர்ந்த வாகனங்களை வாங்கக்கூடியவர்களுக்கு அதிக வரி விதிக்கும் கொள்கையின் அடிப்படையில் சாலை வரி திருத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டு 10-ந்தேதி மாநிலத்தின் நிதிநிலை குறித்து அப்போதைய நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெள்ளை அறிக்கை வெளியிட்டிருந்தார். அப்போதே சாலை வரி விகிதங்களை உயர்த்த அதில் முன்மொழிந்திருந்தார். தமிழ்நாட்டில் உள்ள தற்போதைய வரி விகிதங்கள் தென் மாநிலங்களிலேயே மிகக்குறைவாக இருப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதன் காரணங்களால் புதிய இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களின் விலை 5 சதவீதம் உயர உள்ளது. மோட்டார் சைக்கிள்களுக்கான தற்போதைய சாலை வரி கட்டணம் கடந்த 2008-ம் ஆண்டு ஜூன் மாதத்திலும், கார்களுக்கான சாலை வரி கட்டணம் கடந்த 2010-ம் ஆண்டு ஜூன் மாதத்திலும் திருத்தம் செய்யப்பட்டது.

இதன்படி கடந்த 15 ஆண்டுகளில் மொத்த வாகன செலவில் 8 சதவீதம் இருசக்கர வாகனங்களுக்கு சாலை வரியாக விதிக்கப்படுகிறது. புதிய அறிவிப்பு மூலம் ரூ.1 லட்சம் வரையிலான வாகனங்களுக்கு 10 சதவீதம் வரியும், ரூ.1 லட்சத்திற்கு மேல் உள்ள இருசக்கர வாகனங்களுக்கு 12 சதவீத வரியும் விதிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதே போல தற்போது ரூ.10 லட்சம் வரையிலான கார்களுக்கு வாகன விலையில் 10 சதவீதம் சாலை வரியும், ரூ.10 லட்சத்திற்கு மேல் உள்ள கார்களுக்கு 15 சதவீத வரியும் விதிக்கப்படுகிறது. புதிய திட்டத்தின் படி ரூ.5 லட்சம் மதிப்புள்ள கார்களுக்கு 12 சதவீதமும், ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான கார்களுக்கு 13 சதவீதமும், ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை மதிப்புள்ள வாகனங்களுக்கு 15 சதவீதமும் வரி விதிக்கப்படும் என கூறப்படுகிறது.

இதே போல ரூ.20 லட்சத்திற்கு மேல் விலை உள்ள கார்களுக்கு வாகனத்தின் மொத்த விலையில் 20 சதவீதம் வரை வரி விதிக்கப்படும். 2022-2023-ம் ஆண்டில் போக்குவரத்து துறையின் ஆண்டு வருவாய் ரூ.6,674.29 கோடியாக இருந்தது. புதிய வரி உயர்வின் மூலம் மேலும் ரூ.1,000 கோடி வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய வரி விதிப்பின் மூலம் 100 சி.சி. திறன் கொண்ட மோட்டார் சைக்கிள் விலை ரூ.55 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரையிலும், 125 சி.சி. திறன் கொண்ட பைக்குகள் ரூ.85 ஆயிரம் முதல் ரூ.95 ஆயிரம் வரையிலும் இருக்கும் எனவும், 150 சி.சி. மற்றும் அதற்கும் மேற்பட்ட என்ஜீன் திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களின் விலை இப்போதைய விலையை விட ரூ.7 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

ரூ. 10 லட்சத்திற்கும் குறைவான விலை உள்ள கார்கள் சந்தையில் அதிக அளவில் விற்பனை ஆகி வருகிறது. எனவே 2 முதல் 3 சதவீதம் வரை வரி அதிகரிக்கும் போது அதன்விலை ரூ.20 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை உயரக்கூடும் என கார் ஷோரூம் டீலர்கள் தெரிவித்தனர். 2022-2023-ம் ஆண்டில் 14.77 லட்சம் புதிய வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் ரூ.12.5 லட்சம் இருசக்கர வாகனங்கள் ஆகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com