பங்களாதேஷ் அரசாங்கத்தின் வேலைவாய்ப்பு இட ஒதுக்கீடை திருத்தம் செய்யக்கோரி மாணவர்கள் கடந்த ஒரு மாதக்காலமாக போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தை எதிர்த்து ஆளும் அவாமி லீக் கட்சியின் மாணவர் பிரிவைச் சேர்ந்தவர்கள் போராட்டம் செய்கிறார்கள். இதனால், இரு பிரிவினர்களுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த மோதலில் இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று டாக்காவில் இரு மாணவர் பிரிவினருக்கும் நடந்த சண்டையில் அரசாங்கக் கட்டடங்களுக்கு மாணவர்கள் தீ வைத்தனர். அவ்வாறு தீவைக்கப்பட்ட கட்டடங்களில் அரசாங்கத்தின் பிடிவி என்னும் தொலைக்காட்சி நிலையமும் ஒன்று.
இதனால், உள்ளே வேலைப்பார்த்துக்கொண்டிருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு வெளியே வந்தனர். இருப்பினும், அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனங்கள் அனைத்தும் தீக்கிரையாகின. இதையடுத்து போராட்டக்காரர்களையும் வன்முறையையும் கட்டுக்குள் கொண்டுவர ஏராளமான காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டனர். காவல்துறையினர் ரப்பர் தோட்டாக்களைப் பயன்படுத்தி போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தினர்.
போராட்டக்காரர்கள் கண்முன் தெரியாமல் அனைத்து இடங்களிலும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், பள்ளி கல்லூரிகளும் மூட்டப்பட்டுள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 17ம் தேதி பங்களாதேஷ் பிரதமர், தொலைக்காட்சியில் உரையாற்றினார். வன்முறைச் சம்பவங்களால் ஏற்பட்ட உயிரிழப்புச் சம்பவங்கள் குறித்து கடும் கண்டனம் தெரிவித்துக் கொண்டார். அதற்குக் காரணமானவர்கள் எவ்வித அரசியல் தலையீடும் இன்றி கடுமையாகத் தண்டிக்கப்படுவர் என்று எச்சரிக்கை விடுத்ததோடு, அனைவரையும் அமைதி காக்கும்படி வேண்டுகோள் விடுத்தார்.
ஆனால், இந்த உரைக்கு பிறகுதான், மேலும் போராட்டம் வலுத்தது. நாட்டின் அரசாங்க வேலை வாய்ப்புகளில் 50 விழுக்காட்டுப் பணிகள் ஒரு குறிப்பிட்ட சாராருக்கே ஒதுக்கப்படுகிறது என்பதே போராட்டக்காரர்களின் குற்றச்சாட்டு. எனவே அந்த வேலைவாய்ப்பு இடஒதுக்கீட்டு முறையில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்பதையே போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த வார்த்தைகளுக்கு அரசாங்கம் செவி சாய்க்கும் வரைப் போராட்டம் நீடிக்கும் என்று போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், அங்கு பதட்டமான சூழல் நிலவி வருவதோடு, சாதாரண மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.