மன்னிப்பை மறுத்த உச்சநீதிமன்றம்… பாபா ராம்தேவுக்கு எச்சரிக்கை!

Baba Ramdev
Baba Ramdev
Published on

பதஞ்சலி நிறுவனத்தின் மருத்துவம் குறித்த தவறான விளம்பரங்களின் வழக்கில், பாபா ராம்தேவ் சார்பில் கூறிய மன்னிப்பை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்துள்ளது. மேலும் நீதிமன்றத்தை அவமதிப்பு செய்ததற்கான நடவடிக்கைகளை எதிர்கொள்ள தயாராக இருங்கள் என்றும் எச்சரித்துள்ளது.

பதஞ்சலி நிறுவனம் டூத்பேஸ்ட், சோப், தேன், ஷாம்பு போன்ற பொருட்களை விற்பனை செய்து வருகிறது. இதற்காக அறிவியலுக்கு எதிராகவும், மருத்துவம் குறித்த தவறான கருத்துகளையும் கொண்ட விளம்பரங்களை வெளியிட்டது. அதாவது, பதஞ்சலி நிறுவனம் தீராத நோய்களையும் குணப்படுத்திவிடும் என்பது போலவும், அலோபதி மருத்துவ முறைக்கு எதிரான கருத்துகளையும் கொண்டு விளம்பரங்கள் செய்ததாக சர்ச்சை எழுந்தது. இந்த விளம்பரங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த இந்திய மருத்துவ சங்கம் உச்சநீதிமன்றத்தை நாடியது.

இதனையடுத்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், பதஞ்சலி நிறுவனத்தை கடுமையாக எச்சரித்தது. அதாவது தவறான விளம்பரங்களை செய்ய வேண்டாம் எனவும், மீறினால் கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்தது. ஆனாலும், அதன்பின்னர் சர்ச்சைக்குரிய விளம்பரங்கள் நிறத்தப்படவில்லை. ஆகையால், மீண்டும் இந்த வழக்கு பிப்ரவரி மாதம் 27ம் தேதி விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதி விசாரணை நடத்திய பின்னர், பதஞ்சலி நிறுவனத்தின் தயாரிப்புகளை விளம்பரப்படுத்தத் தடை விதிக்கப்பட்டது. அதேபோல் பதஞ்சலி நிறுவனத்தின் நிறுவனர் பாபா ராம்தேவ் மற்றும் இயக்குனர் பாலகிருஷ்ணன் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸையும் அனுப்பியது.

இதனையடுத்து நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பதஞ்சலி சார்பில் ஆஜரான துருவ் மேத்தா மன்னிப்பு கேட்பதாகக் கூறினார்.

அதற்கு உச்சநீதிமன்றம், “ உங்கள் மன்னிப்பில் அலட்சியம் தெரிகிறது. அதே அலட்சியத்தை நாங்கள் ஏன் உங்களிடம் காண்பிக்கக் கூடாது. உங்கள் மன்னிப்பை நாங்கள் நம்பவில்லை. அதனை முற்றிலும் நிராகரிக்கிறோம்.” என்று நிராகரித்துவிட்டது.

இதையும் படியுங்கள்:
ஆஃப்கானிஸ்தானிலிருந்து வெளியேறியவர்களின் சொத்துகளை மீட்டுத்தர தாலிபன் அரசு முடிவு!
Baba Ramdev

இந்த வழக்கு விசாரணையில் மத்திய அரசு சார்பில் ஜெனரல் துஷார் மேத்தாவும், உத்தரகாண்ட் மாநில சார்பில் சில அதிகாரிகளும் கலந்துக்கொண்டனர். அவர்களிடமும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது, “ பதஞ்சலி நிறுவனத்திற்கு நீங்கள் இணங்கி சென்றிருக்கிறீர்கள் என்று ஏன் நாங்கள் நினைக்கக்கூடாது?, நாங்கள் அனைத்து அதிகாரிகளையும் ஏன் சஸ்பென்ட் செய்யக்கூடாது?, மருந்து மற்றும் உரிமம் வழங்கும் வேலைகளைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? உங்கள் அதிகாரிகள் அது எதையுமே செய்யவில்லை.” என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியது.

அதேபோல் நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக சில கடும் நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராக இருங்கள் என பாபா ராம்தேவுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது, உச்சநீதிமன்றம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com