ஆஃப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றிய பின் வெளியேற்றப்பட்ட ஹிந்து மற்றும் சீக்கியர்களின் சொத்துக்களை அவர்களிடமே திரும்பத் தர தாலிபான் நிர்வாகம் தீவிரம் காட்டி வருவதாக தகவல் வந்துள்ளது.
கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆஃப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றினர். இதனையடுத்து சீக்கியர்கள் மற்றும் இந்துக்கள் அங்கிருந்து வெளியேற்றம் செய்யப்பட்டார்கள். அவர்களின் சொத்துக்களை தாலிபான்கள் அபகரித்துக் கொண்டனர்.
முன்னதாக ஏராளமான இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் ஆஃப்கானிஸ்தானில் வசித்து வந்தனர். ஆனால், கடந்த 1970 மற்றும் 1980களில் உள்நாட்டில் ஏற்பட்ட அரசியல் ரீதியான பிரிவினையால் ஆஃப்கானிஸ்தானில் வசித்த ஹிந்து மற்றும் சீக்கியர்களின் எண்ணிக்கை 1 லட்சத்திலிருந்து 100 ஆக 9 2021ம் ஆண்டு இறுதியில்) மாறியது.
இதனையடுத்து அந்த நாட்டின் சீக்கிய அரசியல் பிரமூகரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நரேந்திர சிங் கல்சா ஆஃப்கானிஸ்தானிலிருந்து கனடா சென்று, தற்போது இந்தியா திரும்பியுள்ளார். இதுகுறித்து நெதர்லாந்தில் வசித்து வரும் ஆஃப்கானிஸ்தானைச் சேர்ந்த வர்ணனையாளர் சங்கர் பாய்கர் தெரிவித்துள்ளதாவது, “புலம்பெயர்ந்த இனத்தின் தலைவர்கள் தங்கள் தாய்நாட்டிற்கே திரும்ப வேண்டும் என்ற வகையில் இது அமைந்துள்ளது. இது வரவேற்கத்தக்கதும் கூட.” என்று பேசியுள்ளார்.
ஆஃப்கானிஸ்தானைக் கைப்பற்றிய தாலிபான்கள் முந்தய ஆட்சியைப் போல் எங்கள் ஆட்சி இருக்காது என்று கூறினார்கள். ஆனாலும், அந்த நாட்டின் மக்களுக்கு பல வகையான கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். அது மதத்தின் அடிப்படையிலும், ஒழுக்கத்தின் அடிப்படையிலும் விதிக்கப்படும் விதிகள் என்பது அவர்களின் விளக்கமாகவுள்ளது.
இந்தநிலையில் தற்போது தாலிபான் ஆட்சிக்கு முந்தய ஆட்சியாளர்கள், சீக்கியர்கள் மற்றும் ஹிந்துக்களிடமிருந்து கைப்பற்றிய சொத்துக்களை மீட்டுத்தருவதாக தாலிபான் அரசு கூறியுள்ளது. அதற்கான குழு ஒன்றை அமைத்து, இந்த நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருவதாக ஆஃப்கானிஸ்தானின் செய்தித் தொடர்பாளர் சுஹைல் ஷஹீன் தெரிவித்துள்ளார்.
அதேபோல், ஆப்கானிஸ்தான் (பாகிஸ்தான், வங்கதேசமும் இதில் அடங்கும்) நாட்டில் மதரீதியாக துன்புறுத்தப்பட்டு, 2014 டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பு இந்தியாவில் அடைக்கலம் புகுந்த இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்த மதத்தினர், ஜெயின் மதத்தினர், பார்சிகள், கிறிஸ்தவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, சிஏஏ சட்டம் வழிவகுப்பது குறிப்பிடத்தக்கது.