ராஜஸ்தானில் ஜெய்ப்பூரில் திடீரென்று 500 வெளிநாட்டு பறவைகள் உயிரிழந்துள்ளன. இதற்கு என்ன காரணம் என்பதைப் பார்ப்போம்.
பறவைக் காய்ச்சல்கள் ஏற்பட்டு பறவைகள் இறப்பது அடிக்கடி நடக்கும். ஆனால், மர்மமான முறையில் இறகுகள் செயலிழந்து பறவைகள் இறப்பது அரிதுதான். அந்தவகையில் ராஜஸ்தான் ஜெய்ப்பூரில் உள்ள சம்பா ஏரியில் இதுபோல மர்மமான முறையில் பறவைகள் இறந்துக் கிடந்துள்ளன.
இந்த சம்பா ஏரியில் வெளிநாட்டு பறவைகள் வருவது வழக்கம். கடந்த 2019ம் ஆண்டின் தொடக்கத்தில் 13 முதல் 15 இனத்தைச் சேர்ந்த சுமார் 18 ஆயிரம் பறவைகள் புலம் பெயர்ந்து ராஜஸ்தானுக்கு வந்ததாக ரெக்கார்டு கூறுகிறது.
ராஜஸ்தானில் புகழ்பெற்ற ஒரு சுற்றுலா தளம்தான் சம்பா ஏரி. இங்கு வரும் பறவைகளை காணவே சுற்றுலாவாசிகள் அதிகம் கூடுவார்கள்.
இப்படியான சூழலில் கடந்த சில தினங்களாக இங்கு மர்மமான முறையில் பறவைகள் இறந்துக் கிடக்கின்றன. கடந்த மாதம் 26ம் தேதியிலிருந்து பறவைகள் கொத்து கொத்தாக இறப்பது கண்டறியப்பட்டது. இதுவரை சுமார் 520 பறவைகள் இறந்துள்ளன.
உடனே இறந்த பறவைகளின் சாம்பிள் எடுத்துச் சென்று ஆய்வு செய்யப்பட்டது. அப்போதுதான் தெரிந்தது. இறந்துப் போன பறவைகள் அனைத்தும் ஒருவித பாக்டிரியாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றன என்று. இந்த பாக்டீரியாவின் பெயர் கிளோஸ்ட்ரிடியம் போட்லினம் ஆகும். இந்த பாக்டீரியா பறவைகளிடம் வந்தால், அவற்றின் இறகுகள் மற்றும் கால்கள் செயலிழந்து விழுந்து உயிரை விடும்.
இந்த ஏரியை சுற்றி பல பறவைகள் முட்டையிட்டு குஞ்சு பொரித்து வருவதால், பாக்டீரியா பரவி மேலும் உயிர் சேதத்தை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது.
ஆனால், இப்போது விரைவாக இந்த பாக்டிரீயா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் மருத்துவர்கள் உள்ளனர். மேலும் இந்த பாக்டீரியா பாதித்த பறவைகளின் உயிரைக் காப்பாற்ற மருத்துவர்கள் போராடி வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த பாக்டீரியா இந்திய பறவைகளுக்கு பரவியதா? அல்லது பரவுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா? என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று.