ஏஐ பயன்படுத்தி உலகின் முதன்முதலாக ஒரு திரைப்படம் இயக்கியுள்ளனர். அதுவும் கன்னட படம் என்பதால், இந்தியாவின் பெருமையை உலகிற்கு எடுத்துச் சொல்லும் விதமாக இது அமைந்திருக்கிறது.
சமீபக்காலமாக ஏஐயின் வளர்ச்சி உச்சத்தை அடைந்திருக்கிறது. இன்று செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) அத்தியாவசிய ஒன்றாக மாறிவருகிறது. சாதாரண மக்கள் வரை தனது போனில் AI பயன்படுத்துகிறார்கள். தங்களது சந்தேகங்களையும், தங்களது கற்பனைகளையும் AI யிடமே பகிர்ந்துக்கொள்கிறார்கள். அதேபோல் இப்போது உள்ள குழந்தைகளுக்கு சிறந்த கேம் பார்ட்னர் AI.
இவையனைத்தையும்விட AI மூலம் உருவாக்கப்படும் புகைப்படங்களே நல்ல வரவேற்பை பெறுகின்றன. இந்த படங்களையே பலரும் பயன்படுத்துகின்றனர். நாளுக்கு நாள் புது புது ஏஐ செயலிகள் அறிமுகமாகி வருகின்றன. அதுவும் இப்போது ஆலோசனை வழங்குவது முதல் முழு கட்டுரையையும் ஏஐயே வழங்கிவிடுகிறது. இது இப்போதைக்கு வசதியாக இருந்தாலும் போக போக மனிதர்களின் யோசிக்கும் திறனையே அழித்துவிடும். கேட்பதற்கு கசப்பாக இருந்தாலும் அதுதான் உண்மை.
சமீபத்தில், மைக்ரோசாப்ட் புதிய AI கருவியை அறிமுகம் செய்தது. அதாவது மருத்துவர் கூறும் குறிப்புகளை எடுத்துக் கொண்டு அதன்பின்னர் நோயாளிக்கு சிகிச்சை அளிக்கக் கூடிய வரைமுறைகளை வகுத்து தருகிறது. இதனால் இனி நோயாளி பற்றிய குறிப்பு எடுப்பதற்கு நர்ஸ் அல்லது அவருக்கு இணையான இன்னொருவர் தேவைப்படாது என்றும் டாக்டரே AI உதவி மூலம் நோயாளிகளின் முழு விவரத்தை பதிவு செய்து வைத்துக் கொள்வார் என்றும் கூறப்பட்டது.
இப்படியான நிலையில்தான், ஏஐ உதவியுடன் ஒரு குழந்தை பிறந்திருக்கிறது.
அந்தவகையில் தற்போது உலகின் முதன் முதல் முழு நீள ஏஐ படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆம்! கன்னடாவில் லவ் யூ எனப் பெயர் வைக்கப்பட்டுள்ள இந்தப் படம், பத்து லட்சம் ரூபாய் செலவில் மொத்தப் படமும் எடுக்கப்பட்டது. நடிப்பு, இசையமைப்பு, பாடல்கள், பின்னணி இசை, பின்னணிக் குரல் பதிவு என அனைத்தையும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் கையாண்டுள்ளனர்.
இப்படத்தின் இயக்குநர் ஒரு கோவிலில் அர்ச்சகராகப் பணியாற்றி வருகிறார். அவரது பெயர் நரசிம்ம மூர்த்தி. பெங்களூருவில் உள்ள பாகலகுண்டே ஆஞ்சநேயர் கோவிலில் அர்ச்சகராக இருந்தபடி ஏற்கெனவே இரண்டு திரைப்படங்களை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.