எந்த துறையிலும் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்குடன் பலர் பயணம் செய்கின்றனர். ஆனால் பலருக்கும் எதிர்பார்த்தபடி அத்தகைய இலக்கை நோக்கி செல்லும் பயணம் எளிதாகவும், எண்ணிய படியும் எப்பொழுதும் வெற்றியை பெற்றும் தருவதில்லை. குறிப்பிட்ட நபரின் இயலாமையோ, தவறோ இல்லாமலும் வெற்றி அவ்வளவு சுலபமாக வந்து அடைவதில்லை.
அவர் கடுமையான உழைப்பை அளித்து இருக்கலாம். போதிய முதலீடு செய்து இருக்கலாம். அந்த குறிப்பிட்ட செயல் பாட்டிற்கு தேவையான விவரங்களை சேகரித்து, தேவைக்கு ஏற்ப தயார் செய்து இருக்கலாம். அந்த செயல்பாட்டை சரிவர முடிக்கும் அளவிற்கு தோதான, அனுபவம் மிக்கவர்களை அப்பணியில் அமர்த்தியிருக்கலாம். அந்த செயல் பாட்டிற்கு உரிய விவரங்கள் விரல் நுனியில் வைத்து இருக்கலாம். இவ்வாறு அத்தியாவசியமானவற்றை வைத்து இருந்தும் எதிர் பார்த்த ரிசல்ட் வராமல் போகலாம் அல்லது தேவையான முடிவு தள்ளி போகலாம்.
அத்தகைய சூழ்நிலையில் குறிப்பிட்ட நபர் சந்திப்பது ஏமாற்றம், அதிர்ச்சி, கோபம், வேதனை, பொருள், பணம், நேரம் நஷ்டம், விரயம், சொல்ல முடியாத துக்கம் என்று நீண்டு கொண்டே போகும்.
இத்தகையை தோல்வி, பின்னடைவு ( set back ) எதிர்பாரத ஒன்று மட்டும் அல்லாது குழப்பங்களையும் உண்டு செய்யும். இத்தகையை முடிவிற்காக இவ்வளவு பிரயர்த்தனம் எடுத்து உழைக்கவில்லை. ஆனால் கிடைத்த முடிவு தான் ( தோல்வி/ பின்னடைவு அடைந்தது தான்) யதார்த்த நிலை. அதை அழிக்கவும் , மறுக்கவும் முடியாது. இத்தகையை சூழ்நிலைகள் நடைமுறை வாழ்க்கையில் ஒரு அங்கம் என்பதும் மறுக்க முடியாத உண்மை.
இத்தகையை சுழ்நிலை இன்னல்களை குறைத்துக் கொள்ள வழி உள்ளது. அது தான் பிளான் பி ( Plan B )
அதை பற்றி சில விவரங்கள் இங்கு காண்போம்.
பெரிய கட்டடங்களில் இடி தாங்கிகள் இருக்கும். முன்பு எல்லாம் பிரிட்ஜுடன் (Fridge) தனியாக இன்வெர்டர் வாங்குவார்கள். இப்பொழுது பெரும்பாலும் இன்பில்ட் (in built ) வசதியுடன் வருகின்றது. இவை எதிர்பாராது வரும் ஷாக்குகளை எதிர்கொள்ள உதவும்.
அதேபோல் பிளான் பி ( Plan B ) ஒரு ஷாக் அப்சர்வர் போல செயல்படும்.
ஒரு செயலை செய்ய துவங்குவதற்கு முன்பு திட்டம் இடுவது மிக அவசியம். அந்த செயலை வெற்றிகரமாக செய்து முடிக்க தேவையானவற்றை விஸ்தாரமாக ஆலோசித்து , முடிவு செய்து விவரங்களை குறித்து வைத்துக் கொண்டு செயல்படுவது பொதுவாக பிளான் ஏ என்பார்கள்.
( Plan A ) செயல்படுத்தும் பொழுது எதிர்பாரத தடங்கல்கள், இன்னல்கள் வந்து திட்டமிட்டபடி பிளான் ஏ நடைபெறாமல் போகலாம். அத்தகைய தடங்கல்களை எதிர்கொள்ளவும், மேலும் செயல்பட்டு முன்னேற்றவும், முன்னதாகவே வேறு ஒரு திட்டம் தயாரித்து கைவசம் வைத்துக்கொள்வது புத்திசாலித்தனம் மட்டும் அல்லாது இன்றைய சூழலில் அவசியமும் கூட.
அந்த அடுத்த திட்டம் தான் பிளான் பி ( Plan B )
இத்தகைய பிளான் பி அளிப்பது நம்பிக்கை மற்றும் மனோதைரியம். ஒரே ஒரு திட்டம் மட்டும் வைத்துக் கொண்டு ஆரம்பித்து எதிர்பாராத வளர்ச்சிகளால் ( due to unexpected developments ) திட்டமிட்டபடி முன்னேற முடியாமல் தவிப்பவர்கள், திண்டாடுபவர்கள் முன்கூட்டியே பிளான் பி தயாரித்து தயார் நிலையில் வந்திருந்தால், அது ஒரு வரபிரசாதம் போல் காட்சியாளித்து தொய்விலிருந்து காப்பாற்றும்.
பிளான் பி கைவசம் இருக்கின்றது என்ற எண்ணமே நம்பிக்கை, தன்னம்பிக்கை இவைகளை வலுப்படுத்திக்கொள்ள பெரிதும் உதவும்.
பிளான் பி, நாம் எடுத்துக்கொண்ட (எடுத்துக்கொள்ளும்) செயல்பாட்டை தங்கு , தடையன்றி செயல்படுத்தும் உத்வேகமாக ( serve as motivational factor ) அமையும் என்பதும் மறுக்க முடியாத உண்மை.
பிளான் பி ஒரு மாற்று மற்றும் துணை கருவியாக ( supporting tool ) தேவையான சமயத்தில் உதவும்..
பிளான் பி யுடன் களம் இறங்கி வெற்றிபெற்று சாதித்தவர்களுக்கு தெரியும் பிளான் பி- யின் அருமை.