
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வரும் நிலையில், சென்னையின் கடந்த இரண்டு நாட்களாக காலையில் அதிக வெயில் கொளுத்தும் நிலையில் இரவு 11 மணிக்கு மேல் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இரவில் மழை சென்னை மக்களை குளிர்வித்தாலும், காலையில் கடும் வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது. இந்நிலையில் சென்னையின் கடந்த 30-ம் தேதி சில இடங்களில் நள்ளிரவில் கனமழை கொட்டித் தீர்த்தது.
இந்த கனமழைக்கு மேகவெடிப்பே காரணம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்நிலையில், தமிழகத்தில் இந்தாண்டு வடகிழக்கு பருவமழை சற்று தாமதமடைந்தாலும் அதிகளவு மழைக்கு வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். பருவமழையின் காரணமாக வரும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் தீவிர மழை பொழிவு இருக்கும் என்றும் சென்னையை பொறுத்தவரை புயல் ஆபத்து வர அதிக வாய்ப்புள்ளதாகவும், தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலம், புயல் போன்ற அமைப்புகள் உருவாகி தமிழகத்தில் அதிக மழை பொழிவு இருக்கும் என்றும் தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் எச்சரித்துள்ளார்.
அதேநேரத்தில் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இந்த (செப்டம்பர்) மாதத்திற்கு, வழக்கமான நீண்ட கால சராசரியை விட 109% அதிகமான மழைப் பொழிவுக்கு வாய்ப்புள்ளதாகவும், இந்தியாவில் வட மாநிலங்களான உத்தரகண்ட், இமாச்சலப் பிரதேசம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஏற்கனவே கடந்த இரண்டு மாதங்களாக கனமழையின் காரணமாக கர்நாடகா, இமாசலபிரதேசம், ஜம்மு-காஷ்மீர், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், மேற்கு வங்கம், கேரளா போன்ற பல மாநிலங்களில் கனமழையால் பல ஆறுகள் நிரம்பி வழிந்தன. அதுமட்டுமின்றி இமாசலபிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் கனமழையால் திடீர் மேக வெடிப்புகளும், நிலச்சரிவுகளும் ஏற்பட்டு மக்கள் பலர் உயிரிழந்த சம்பவங்களும் நிகழ்ந்தது.
செப்டம்பர் மாதத்தில் மேற்கு கடற்கரை மாநிலங்கள், வட இந்தியா மற்றும் மத்திய இந்தியாவின் சில பகுதிகளில் இயல்பை விட அதிக மழை பெய்யக்கூடும் என்றும் வடகிழக்கு மற்றும் தென் தீபகற்ப இந்தியாவின் சில பகுதிகளில் மழைப்பொழிவு குறைவாக இருக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த மாதம் மழை அதிகமாக இருக்கும் என்று வானிலை மையம் கூறியிருப்பது விவசாயத்திற்கு சாதகமாக இருந்தாலும், ஏற்கனவே பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேலும் அதிகளவு மழை பெய்தால் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இருப்பினும் அடுத்தடுத்து இனிவரும் நாட்களில் வானிலை மையம் கூறும் துல்லியமான கணிப்புகளின் அடிப்படையில் என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என்பதை ஓரளவு அறிந்துகொள்ள முடியும்.