

சமூகவலைதளங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் 'CM 2031' என்ற பதிவு எண்ணை கொண்ட காரில் , நின்று கொண்டு கையசைப்பது போன்ற , காணொளிகள் வெளியாகின. இந்த காணொளியை ஒருபுறம் விசிகவினர் பகிர்ந்து மகிழ்ச்சி தெரிவித்தாலும் , மறுபுறம் காரின் பதிவு எண்ணை வைத்து சர்ச்சையை கிளப்பினர். திருமாவளவன் பயணித்த காரின் பதிவு எண்ணாக 'TN 07 CM 2031' குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்கு முன்னர் விஜய் நடித்திருந்த 'தி கோட் ' திரைப்படத்தில் ஒரு காட்சியில் 'CM 2026' என்று பதிவிடப்பட்ட வாகனத்தில் அவர் பயணிப்பது போன்று காட்டப்பட்டிருக்கும். தற்போது அது போலவே திருமாவளவனும் தான் தான் 2031 ஆம் ஆண்டின் முதல்வர் என்று மறைமுகமாக கூறுகிறார், என்று சமூக வலைதளங்களில் கருத்து கூறப்பட்டது. இந்த விஷயத்தை அவர்களின் கூட்டணிக் கட்சியினரான ஆளும் தவெகவினர் ரசிக்கவில்லை. அவர்களுக்குள் உள்ளுக்குள் புகைச்சல் ஏற்பட்டிருந்தது.
தற்போது விசிக தலைவர் பயணித்த வாகனத்தின் பதிவு எண் சர்ச்சை, தமிழக அரசியல் களத்தில் சூட்டைக் கிளப்பியுள்ளது.
இதற்கு விசிக பொருளாளர் எஸ்.எஸ். பாலாஜி அறிக்கை ஒன்றை வெளியிட்டு அதற்கு விளக்கமும் அளித்துள்ளார். அந்த அறிக்கை சுருக்கமாக ,
"வாகனத்தின் எண்ணும் வன்மத்தைக் கக்கும் எண்ணமும்!விசிக பொருளாளர் விளக்கம்," என்று தொடங்குகிறது.
சாதி ஒழிப்பையும் தமிழ்த்தேசியத்தையும் முன்நிறுத்தி, உழைக்கும் தமிழ் மக்களையும் அரசியல் சக்தியாக அணிதிரட்டுவதற்காகவே தன் வாழ்வை ஒப்படைத்துக் கொண்டவர் தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்கள். அதனால் தான் அவருடைய பிறந்த நாளை 'தலித் எழுச்சி நாள்' என்று கொண்டாடாமல் 'தமிழர் எழுச்சி நாள்,'என்று ஆண்டுதோறும் ஆகஸ்ட் 17 ஆம் தேதியில் சிறுத்தைகள் கொண்டாடி வருகிறோம்.
அந்தக் கொண்டாட்டத்தின் அடுத்த பரிணாமமாக 2008 ஆம் ஆண்டின் திருமாவளவன் பிறந்த நாளை 'களப்பணியில் கால்நூற்றாண்டு' என்று கொண்டாடினோம். 2012 இல் 'எழுச்சித்தமிழரின் பொன்விழா ' ஆண்டாக கொண்டாடினோம். சாதியச் சமூகத்தின் பொதுப்புத்தியைச் சாம்பலாக்கும் "சனநாயக திருவிழா”வாகவே இவை நடந்தேறின.
தமிழக அரசியலில் முன்னெப்போதும் நிகழ்த்தாத பேரதிர்வை சிறுத்தைகளின் அரசியல் சீற்றத்துடன் விதைத்தன.'எழுச்சித்தமிழர்’ பொதுவாழ்வில் 35 ஆண்டுகள் நிறைவு செய்ததை வாழ்த்திடும் நிகழ்ச்சி ஒன்றை நடத்த நாங்கள் திட்டமிட்டு இருந்தோம்.
இந்நிலையில், தலைவரின் அரசியல் நகர்வின் பெரிதும் ஈர்க்கப்பட்ட "இந்தியா மீடியா வொர்க்ஸ்” எனும் நிறுவனத்தை நடத்தி வரும் திரு. ஜான் அமலன் அவர்கள் நிறுவனத்தின் சார்பில் "திருமா 35: சமூகநீதியின் சகாப்தம்” என்கிற தலைப்பில் நிகழ்ச்சி ஒன்றை , கட்சித் தலைவர் அனுமதியுடன் நடத்த விரும்பினார். அதனால் , கடந்த 19.09.2026 அன்று சென்னை பூந்தமல்லியில் இந்நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஒரு பகுதியாக 'TN 07 CM 2031 பதிவெண் கொண்ட காரில் தலைவர் பயணம் செய்தார். அது படப்பிடிப்புகளுக்கு வாடகைக்கு விடப்படும் கார். விசிகவின் எதிர்கால திசையினை உணர்த்தும் வகையில் வாகன எண் பொருத்தப்பட்டிருந்தது. படப்பிடிப்புத் தளத்தில் படம் பிடிக்கப்பட்ட, அந்த வாகன பதிவு எண் குறித்து வன்மத்தை கக்குகின்றனர்.
விசிக மீது நாள்தோறும் அவதூறை அள்ளி வீசியவர்கள் இன்று தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள் ‘சிஎம்’ என்று பதித்த காரில் வருவதையே தாங்கிக்கொள்ள முடியாமல் வழக்கம்போல் வன்மத்தைச் சிந்துகின்றனர்.
இன்று அரசியலை தீர்மானித்ததுபோல், நாளைய தமிழகத்தின் அரசியல் திசையை வரவேற்று காத்திருப்போமே தவிர, எரிச்சலோடு வெறுப்பு அரசியலில் வெந்து போபவர்கள் அல்ல சிறுத்தைகள். என்று விளக்கமளித்திருந்தார்.