திமுக - தவெக இணைய வேண்டும்: திருமாவளவன் போடும் புதிய கணக்கு..!

mk stalin, Vijay, Thirumavalavan
mk stalin, Vijay, Thirumavalavan
Updated on

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு தமிழக அரசியல் களம் வரலாறு காணாத மாபெரும் திருப்பங்களையும், அதிரடி மாற்றங்களையும் சந்தித்து வருகிறது.

தமிழக அரசியல் களத்தில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் அதிரடி திருப்பங்களின் தொடர்ச்சியாக, திமுகவும் தவெகவும் ஒரே அணியில் பயணிக்க வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியிருக்கும் கருத்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான தனது பிரச்சாரத்தின் போது, தவெக தலைவர் விஜய், திமுகவை தனது "அரசியல் எதிரி" என்றும், பாஜகவை தனது "கொள்கை எதிரி" என்றும் திட்டவட்டமாக அறிவித்தார். திமுகவை ஆட்சியிலிருந்து அகற்றுவதே தனது முக்கிய நோக்கம் என அவர் தீவிரமாகப் பிரச்சாரம் செய்தார்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக இரு பிரதான திராவிட கட்சிகளையும் பின்னுக்குத் தள்ளி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

அதனை தொடர்ந்து தமிழகத்தில் முதலமைச்சராக விஜய் பதவியேற்றதில் இருந்து தவெகவும், திமுகவும் எதிரும் புதிருமாக இருக்கும் நிலையில், மத்தியில் இருக்கும் பாஜகவை எதிர்க்க இரு கட்சிகளும் ஒரே அணியில் இருக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசி இருப்பது பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெகவிற்கு ஆட்சி அமைக்க காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டு, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு கொடுத்தது. அதனை தொடர்ந்து அமைச்சரவையிலும் விசிகவிற்கு இடம் கிடைத்தது. இந்த நிலையில் தவெக, திமுக குறித்து அவர் கூறியகருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அரியலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், ‘தற்போது வரை தவெக கூட்டணியில் விசிக அதிகாரப்பூர்வமாக இணையும் எந்த நிகழ்வும் நடைபெறவில்லை.

cm vijay, MK stalin
cm vijay, MK stalinimage credit-@NewsBeez, livemint.com

அமைச்சர்வையில் இடம் பெற்ற ஒரே காரணத்தினால் நாங்கள் அவர்களுடன் கூட்டணியில் இருக்கிறோம் என்ற அர்த்தம் இல்லை. நாங்கள் எடுக்கும் முடிவுகளை திமுக தலைவர் மு.க. ஸ்டாலினிடம் பகிர்ந்துகொண்டுதான் இருக்கிறோம். நாங்கள் திமுகவை எதிர்க்கவில்லை. திமுகவுடன் எந்த பகையும் எங்களுக்கு இல்லை என்றார்.

திமுக தனது செயல்பாட்டின் மூலம் விசிக கூட்டணியில் இல்லை என்பதை உணர்த்திவிட்டது என, முன்னாள் விசிக சட்டமன்ற உறுப்பினரை தங்கள் கட்சியில் சேர்த்துக்கொண்டதை குறிப்பிட்டு முன்னர் நான் கூறினேன். அதாவது சமீபத்தில் விசிக நிர்வாகி ஒருவரை திமுக தலைமை ஒருங்கிணைந்து தங்கள் கட்சியில் இணைத்தபோதே, விசிகவுடன் எங்களுக்கு உறவில்லை' என்பதை திமுக தலைமையே உணர்த்திவிட்டதாக விசிக தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது. மேலும், திமுக கூட்டணியில் விசிக இல்லை என்பதை மு.க.ஸ்டாலினே அறிவித்துவிட்டதாகவும் திருமாவளவன் பல்வேறு பேட்டிகளில் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு கூட்டணியில் தற்காலிகமாக இணைவதாலோ அல்லது விலகுவதாலோ நட்புறவுகள் முறிந்து விடுவதில்லை. தமிழ்நாட்டையோ அல்லது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியையோ மட்டும் மனதில்கொண்டு நான் பேசவில்லை. என் பார்வை எபபோது மாநில அரசியலை தாண்டி, தேசிய அளவிலானதாகும்’ என்று திருமாவளவன் தெளிவுபடுத்தினார்.

தொடர்ந்து பேசிய அவர், ‘தேசிய அளவில் பாஜகவுக்கு எதிரான ஒரு வலுவான அணியை உருவாக்க வேண்டும். அந்த அணியில் திமுகவும் இருக்க வேண்டும், தவெகவும் இருக்க வேண்டும். கொள்கை எதிரிகள் ஒன்றிணைய வேண்டும்.

இதையும் படியுங்கள்:
தவெக-வா? திமுக-வா? எஸ்.பி.வேலுமணியின் முடிவு என்ன?
mk stalin, Vijay, Thirumavalavan

தமிழ்நாட்டில் திமுக மற்றும் தவெக இடையே அரசியல் ரீதியாகப் பலத்த போட்டி மற்றும் எதிர் நிலைபாடுகள் இருந்தாலும், தேசிய அளவில் மதவாத பாஜகவை வீழ்த்த வேண்டும் என்றால் தவெகவும், திமுகவும் ஒரே அணியில் இருக்க வேண்டும்.

அதாவது, கொள்கை எதிரியான தவெகவும், தொடர்ந்து பாஜகவை எதிர்த்து வரும் திமுகவும் ஒரே அணியில் (இந்தியா கூட்டணியில்) பயணிக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் தெரிவித்தார். என்னுடைய இந்த தேசிய அளவிலான பார்வையைத் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளாலோ அல்லது ஊடகவியலாளர்களாலோ எளிதில் புரிந்துகொள்ள முடியாது. இதனை நான் சொல்லும்போது, ‘இவர் என்ன குழப்புகிறார்’ ‘திருமாவளவனுக்கு என்ன ஆச்சி’ என்று பேசுவார்கள்.

ஆனால் அது என்னுடைய பிரச்சனை இல்லை. அவர்களுடையே புரிதலில் இருக்கும் சிக்கல் என திருமாவளவன் பேசி உள்ளார்.

தவெக அமைச்சரவையில் விசிக இடம் பெற்றிருந்தாலும், திருமாவளவன் இன்னும் முழுமையாக தவெகவுடன் தன்னை இணைத்து கொள்ளவில்லை. மறுபுறம், திமுகவுடனான உறவையும் முற்றிலும் துண்டிக்க முடியாமல் அவர் ஒரு இக்கட்டான மனநிலையில் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் விமர்ச்சித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்:
என்னை துருப்பு சீட்டாக வைத்து திமுக கூட்டணியை உடைக்கப் பார்த்தார்கள் – திருமாவளவன்..!
mk stalin, Vijay, Thirumavalavan

இந்தச் சூழலில் தான், அரசியலில் எதிரும், புதிருமாக இருக்கும் தவெகவும் திமுகவும் ஒரே கூட்டணியில் பயணிக்க வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்திருக்கும் கருத்து, தற்போதைய அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

logo
Kalki Online
kalkionline.com