

சென்னை மாநகரில் உள்ள 35 பேருந்து முனையங்களில் திருவான்மியூர் பேருந்து முனையமும் ஒன்றாகும். இங்கிருந்து தினமும் 100க்கும் மேற்பட்ட பேருந்துகள் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன. இப்பேருந்து முனையம் பல ஆண்டுகளாக மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்து வருகிறது.
மழைக்காலங்களில் அதிக தண்ணீர் தேங்கி நிற்பது பெரும் பிரச்சனையாக இருக்கிறது. பயணிகளுக்கான அடிப்படை வசதிகளும், தனியார் வாகனங்களுக்கான நிறுத்துமிட வசதியும் இங்கு இல்லை. இதனால், இந்த பேருந்து முனையத்தை பயன்படுத்தும் ஆயிரக்கணக்கான பயணிகள் அன்றாடம் பலச்சிக்கல்களை எதிர் நோக்கி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (CMDA) இந்த பேருந்து முனையத்தை MTC புனரமைக்கும் பணியை மேற்கொண்டுள்ளது. இந்த சீரமைப்பு பணிகள் முடிந்த பிறகு, பயணிகளுக்கான காத்திருப்பு பகுதி, கழிவறை வசதி, கடைகள், போதுமான வாகன நிறுத்துமிடம், மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளப் பிரச்சனைகான தீர்வு போன்ற புதிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டு இந்த பேருந்து முனையம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்பேருந்து முனையம் , கிழக்கு கடற்கரை சாலைக்கு (ECR) செல்லும் முக்கிய நுழைவாயிலாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த திருவான்மியூர் பேருந்து முனையம் ₹35.11 கோடி செலவில் மொத்தம் 1.66 ஏக்கர் பரப்பளவில் ,6,000 சதுர மீட்டர் (sq.m) பரப்பளவில் அமைக்கப்படும் எனத் தெரிகிறது. மேலும் இங்கு நேர அலுவலகம், டிக்கெட் கவுண்டர்கள், விசாலமான காத்திருப்பு பகுதி, மருத்துவ அறை, கடைகள், பயணிகள் ஏறி இறங்குவதற்கான தனித்தனி பகுதிகள் மற்றும் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கான ஓய்வறைகள் போன்ற வசதிகளும் இருக்கும்.
இந்த பேருந்து முனையம், பேருந்து பணிமனையுடன் சேர்த்து மூன்று மாடிக் கட்டிடமாக அமையும். மேலும், இரண்டு மாடிகளைக் கொண்ட தனி வணிக வளாகமும் கட்டப்படும். இதில் 13 பேருந்து நிறுத்துமிடங்கள் (bus bays) இருக்கும். ஒவ்வொரு பேருந்து நிறுத்துமிட ஷெட்டும் 2,500 சதுர மீட்டர் (sq.m) பரப்பளவில் அமைக்கப்படும். இந்த முனையத்தின் மூலம், ஒரே நேரத்தில் சுமார் 70 பேருந்துகளை நிறுத்தி இயக்க முடியும் எனவும் தெரிகிறது.
தனியார் வாகனங்கள் நிறுத்துமிட வசதியும் இந்த பேருந்து முனையத்தில் ஏற்படுத்தப்படும்.இந்த சீரமைப்பு பணிகள் இந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கப்பட்ட நிலையில், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் முழுவதுமாக நிறைவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் எனக் கூறப்படுகிறது .இதன் காரணமாக சென்னை திருவான்மியூர் பகுதி மக்கள் பெருத்த மகிழ்ச்சியில் உள்ளனர்.