

அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவிருப்பதால், இப்போதே தமிழக அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கி விட்டது. தமிழ்நாட்டின் முன்னணி கட்சிகள் கூட்டணி பேச்சு வார்த்தைகளைத் தொடங்கவிருக்கும் நிலையில், அ.இ.அ.தி.மு.க.வின் மூத்த நிர்வாகியாக இருந்த கே.ஏ.செங்கோட்டையன், நேற்று மதியம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை சந்தித்துப் பேசியுள்ளார்.
சுமார் 2 மணி நேரம் நடந்த இந்தப் பேச்சு வார்த்தையில், செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் இன்று இணையவிருப்பதாக தகவல்கள் வெளியாகின. விஜய்யை சந்திப்பதற்கு முன்னதாக காலையில் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன். இந்நிலையில் தற்போது தனது ஆதரவாளர்களுடன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார் செங்கோட்டையன்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் மறைவுக்குப் பிறகு, அதிமுகவில் உட்கட்சிப் பூசலால் சில முன்னணி நிர்வாகிகள் பிரிந்து சென்றனர். அவர்களை அதிமுகவில் மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் நீண்ட காலமாகவே தெரிவித்து வந்துள்ளார் செங்கோட்டையன்.
இதற்கு எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்த நிலையில், சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக அதிமுக நிர்வாகிகளை ஒன்றிணைத்தல் அவசியம் எனவும் இதற்கு பத்து நாட்கள் காலக்கெடு விதிப்பதாகவும் செங்கோட்டையன் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து செங்கோட்டையனிடமிருந்து கட்சி பொறுப்புகள் முதலில் பறிக்கப்பட்டன. அதன்பிறகு கே.ஏ.செங்கோட்டையனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பதவிகள் மற்றும் கட்சியில் இருந்தே நீக்கப்படுவதாக கடந்த அக்டோபர் 31ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் காலத்தில் இருந்து கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுகவில் முக்கிய நிர்வாகியாக செயலாற்றி வருகிறார் செங்கோட்டையன். அவரை திடீரென கட்சியில் இருந்து நீக்கியதால் அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டது.
அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, “50 ஆண்டுகளாக கிட்டத்தட்ட பல ஏற்றத்தாழ்வுகளை சந்தித்து அதிமுகவிற்காக உழைத்திருக்கிறேன். ஆனால் இதற்கெல்லாம் பரிசு கொடுக்கும் விதமாக என்னை கட்சியிலிருந்து நீக்கிவிட்டனர். இது மன வேதனை அளிக்கிறது இதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றுமே இல்லை” என செங்கோட்டையன் வருத்தத்துடன் தெரிவித்தார்.
சினிமாவை விட்டு தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜய்க்கு மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. இருப்பினும் இதுகுறித்து அதிகாரபூர்வ செய்திகள் வெளியாகாத நிலையில், நேற்று மதியம் விஜய்யை சந்தித்து பேசி உள்ளார் செங்கோட்டையன்.
தமிழக வெற்றிக் கழகத்தில் அனுபவம் வாய்ந்த மூத்த நிர்வாகிகளுக்கான இடம் காலியாக இருப்பதால், செங்கோட்டையன் அக்கட்சியில் இணைந்தால் விஜய்க்கு அடுத்து, இவருக்கு இரண்டாம் இடம் கிடைப்பதற்கு கூட அதிக வாய்ப்பிருக்கிறது எனக் கருதப்பட்டது. இந்நிலையில் பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் அலுவலகத்தில் தலைவர் விஜய் முன்னிலையில், தனது ஆதரவாளர்களுடன் இணைந்தார் செங்கோட்டையன்.
தமிழக அரசியலில் ஒரே தொகுதியில் நின்று அதிக முறை வென்ற வேட்பாளர் செங்கோட்டையன் தான். இவர் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் 8 முறை வெற்றி பெற்று இருக்கிறார். ஆகையால் செங்கோட்டையனின் வரவு, தமிழக வெற்றிக் கழகத்திற்கு பலம் சேர்க்கும் என்பது நிச்சயம்.
தமிழக அரசியலில் போக்குவரத்து துறை, வனத் துறை, வருவாய்த் துறை, பள்ளிக் கல்வித்துறை, விவசாயத் துறை தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அமைச்சராக பணிபுரிந்த அனுபவம் செங்கோட்டையனுக்கு உண்டு. முன்னாள் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா இருந்த காலத்தில், அவரின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தவர் கே.ஏ.செங்கோட்டையன். அப்போதெல்லாம் ஜெயலலிதாவின் பிரச்சார கூட்டங்களைத் திட்டமிடுபவரும் இவர்தான்.
அதிமுகவின் மூத்த நிர்வாகியான செங்கோட்டையனை நீக்கியது, அதிமுகவிற்கு மாபெரும் இழப்பாகவே கருதப்படுகிறது. இந்நிலையில் அவர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருப்பது அக்கட்சிக்கு கூடுதல் பலமாகவே இருக்கும்.
இந்தநிலையில் தவெகவில் இணைந்த உடன் செங்கோட்டையனுக்கு முக்கிய பதவியை கொடுத்து, விஜய் கவுரவித்துள்ளார். அந்த வகையில் புஸ்ஸி ஆனந்துக்கு இணையான பதவியாக கருதப்படும் தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி மற்றும் 4 மாவட்டங்களுக்கு (கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி) அமைப்புச்செயலாளர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது. இனி தவெக சார்ந்த எந்த முடிவாக இருந்தாலும் செங்கோட்டையன், புஸ்ஸி ஆனந்த் இணைந்துதான் எடுக்க முடியும்.