"இந்த அரசாங்கம் சீன அச்சுறுத்தலை தவறாகக் கணக்கிட்டுள்ளது"
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான ராகுல்காந்தி மேற்கொண்டுள்ள ‘பாரத் ஜோடோ யாத்திரை’ கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கன்னியாகுமரியில் தொடங்கியது. இந்த பாத யாத்திரையை பல முக்கியப் பிரபலங்கள் ஆதரித்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் கமல்ஹாசனும் ஒருவர். அந்த ஆதரவுதான் ராகுலுடனான அவரது நெருக்கத்துக்கும் இந்த உரையாடலுக்கும் முக்கியக் காரணமாக அமைந்ததாக கூறப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நடத்தி வரும் பாரத் ஜோடோ யாத்திரையில் கடந்த டிசம்பர் 24ஆம் தேதி டெல்லியில் பங்கேற்றார் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன்.
அதன்பின் டெல்லியில் ராகுலின் வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மற்றொரு சிறப்புக் கலந்துரையாடல் நிகழ்விலும் கலந்து கொண்டார்.
கமல்ஹாசன், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு முழு நேர அரசியல் களத்தில் இறங்கி “மக்கள் நீதி மய்யம்” என்ற கட்சியை நிறுவி நாடாளுமன்ற, சட்டப்பேரவை தேர்தல்களை கண்டவர்.
இந்த சந்திப்பில், இந்திய அரசியல், தமிழர்கள், சுதந்திர வரலாறு, கருத்துச் சுதந்திரம் மற்றும் எல்லை ஊடுருவல், சமூக மற்றும் மத நல்லிணக்கம், ஒருமைப்பாடு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் இருவரும் கலந்துரையாடினர்.
ராகுலுடனான கலந்துரையாடலில் அவர் இந்தியாவின் முதலாவது பிரதமர் ஜவாஹர் லால் நேரு, ராகுலின் தந்தை ராஜீவ் காந்தி உள்ளிட்டோர் குறித்தும் பேசினார்.
மகாத்மா காந்தியை முதன் முதலாக உணர்ந்தது குறித்து விவரித்த கமல், "நான் காந்தியை எனது 24-25 வயதில் தான் உணர்ந்தேன். அதன் காரணமாகவே நான் ‘ஹே ராமை’ திரைப்படத்தை உருவாக்கினேன். அதுதான் நான் 'மன்னிப்பு' தெரிவிப்பை வெளிப்படுத்தும் எனது பாணி" என்றார்.
அதைக் கேட்ட ராகுல், "வெறுப்பு உணர்வு உண்மையில் குருட்டுத்தனமானது மற்றும் தவறான புரிதலால் ஏற்படுவது" என்று கூறினார்.
அதற்கு கமல்ஹாசன், "அது மட்டுமின்றி விமர்சனத்தின் மிக உச்சம்தான் படுகொலை செய்வது" என்று விளக்கம் கொடுத்தார்.
தமிழ் மொழி
உரையாடலின் தொடர்ச்சியாக தமிழ் மொழி உணர்வு குறித்து கமல் பேசும்போது,
"எல்லோரையும் போல எங்கள் தமிழ் மொழியைப் பற்றி நாங்கள் பெருமைப்படுகிறோம். மதத்தையும் கடவுளையும் நம்பாதவர்கள் கூட எங்கள் தமிழைக் கொண்டாடுகிறார்கள்," என்றார்.
ராகுல் காந்தி தலைமையிலான பாரத் ஜோடோ யாத்திரைப் பற்றிக் குறிப்பிடும்போது, "மேடையில் நின்று கொண்டு சொற்பொழிவு ஆற்றுவதற்குப் பதிலாக" மக்களிடம் சென்று அவர்கள் பேசுவதை காது கொடுத்துக் கேட்க இது உதவுவதால் இந்த முன்னெடுப்பு பாராட்டுக்குரியது", என்றார் கமல்.
அப்போது கமல், இந்திய நிலப்பரப்பில் சீனா அத்துமீறுவதாகக் கூறப்படுவது குறித்த ராகுலின் நிலைப்பாடு பற்றி கேள்வி எழுப்பினார்.
அதற்கு ராகுல், "இந்த அரசாங்கம் அச்சுறுத்தலை "தவறாகக் கணக்கிட்டுள்ளது" என்றார்.
மேலும் சீனாவின் எல்லை தாண்டிய ஆக்கிரமிப்பு தொடர்பான தகவல்களுக்கு மோதி அரசு குறைந்த அளவே முன்னுரிமை அளித்து வருவதால் அதை சீனா தனக்கு சாதமாக்கிக் கொண்டுள்ளதாக ராகுல் குற்றம்சாட்டினார்.