போலந்திற்கு இரண்டு நாட்கள் பயணம் மேற்கொண்ட பிரதமர், அங்கு இந்திய வம்சாவளியினருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார்.
ஐரோப்பிய நாடுகளுடன் இந்தியாவின் உறவை பலப்படுத்தும் விதமாக அமைந்த உறவுதான் போலந்து இந்தியா உறவு. ரஷ்யா உக்ரைன் போர் வலுவடையும்போது அங்குள்ள இந்திய மாணவர்களை பத்திரமாக மீட்டுத்தர போலந்து பெரிதும் உதவி செய்தது. இதனையடுத்து இன்றுவரை இரண்டு நாடுகளுக்கும் இடையே நட்பு உறவு நீடித்து வருகிறது. இந்தியா போலந்து தூதரக உறவு ஏற்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைந்தது.
இதனையடுத்து போலந்தின் அழைப்பின் பேரில் அங்கு சென்றார் மோடி. அந்நாட்டின் பிரதமர் மற்றும் அதிபரை சந்தித்து பேசிய மோடி, வர்சாவில் இந்திய வம்சாவளியினர் மற்றும் தொழிலதிபர்களை சந்தித்து உரையாடினார்.
அதாவது, “ இங்குள்ள இயற்கை காட்சிகளும், உங்களின் உற்சாகமும் மிகவும் அற்புதமாக இருந்தது. நீங்கள் இங்கு எனக்கு சிறப்பான வரவேற்பு அளித்தீர்கள். இதற்காக உங்கள் அனைவருக்கும் நான் மிகவும் நன்றி.
45 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு இந்திய பிரதமர் போலந்து வந்திருக்கிறார். அதேபோல்தான், சில காலங்களுக்கு முன்னர் ஆஸ்திரேலியா சென்றேன். அப்போதும் 40 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு இந்திய பிரதமர் சென்றார். புதிய இந்தியாவின் கொள்கை என்பது, எல்லா நாடுகளுடனும் நெருக்கத்தை பேணுவதுதான். இன்று இந்தியா அனைவரின் வளர்ச்சியை பற்றித்தான் பேசுகிறது. இன்று உலக நாடுகள் எல்லாம் இந்தியாவை உலகத்திற்கே நட்பு நாடு என்று மதிக்கிறது. இரக்க குணம் என்பது இந்தியர்களின் அடையாளங்களில் ஒன்று. எந்த நாட்டில் எந்த பிரச்சனை ஏற்பட்டாலும், முதலில் உதவி செய்யும் நாடு இந்தியாதான்.
இந்தியா புத்தரின் பாரம்பரியத்தை உறுதியாக நம்புகிறது. அதன்படியே போரை அல்ல சமாதானத்தையே இந்தியா எப்போதும் நம்புகிறது. நாம் உலகத்தையே ஒரே குடும்பமாக கருதுகிறோம். இந்தியா, உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறுவதற்கு வெகு தொலைவில் இல்லை. சமூக பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இந்தியாவும் போலந்தும் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தியாவின் தொலைநோக்கு பார்வை உலகளாவியது. இந்தியாவின் கலாச்சாரமும் உலகளாவியது.”
என்று பேசினார்.
மேலும் இந்த உரையில் இந்தியா போலந்து உறவுப்பற்றியும், பொருளாதாரம் பற்றியும், இருநாடுகளின் வளர்ச்சி குறித்தும் பேசினார்.