ஜெனரல் பிபின் ராவத் மரணம் நாட்டையே உலுக்கியது. அந்தவகையில் அந்த ஹெலிகாப்டர் விபத்திற்கான காரணம் குறித்த செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் தமிழ்நாட்டின் குன்னூர் அருகே நடைபெற்ற விபத்தை யாராலுமே மறக்க முடியாது. Mi-17 V5 ஹெலிகாப்டர் விபத்தில் இந்தியாவின் முப்படைகளின் முன்னாள் தலைமை தளபதியான ஜெனரல் பிபின் ராவத் (CDS General Bipin Rawat), அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட மொத்தம் 13 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அன்று தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் விமானத் தளத்தில் இருந்து ஊட்டி வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரியை நோக்கி ஜெனரல் பிபின் ராவத் உட்பட 12 பேர் ஹெலிகாப்டரில் சென்றனர். அப்போதுதான் இந்த கோர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். குரூப் கேப்டன் வருண் சிங் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டார். இருப்பினும் அவரும் ஒரு வாரத்திற்கு பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த விபத்திற்கு காரணம் மனித தவறா? மேக மூட்டமா? அல்லது தொழில்நுட்ப கோளாறா? அல்லது வேறு எதேனும் சதி திட்டமா? என்பது தெரியவே இல்லை. இந்தநிலையில் நேற்று பாதுகாப்புத்துறையின் ஒரு நிலைக்குழு தனது அறிக்கையை மக்களவையில் தாக்கல் செய்தது. அதில், MI-17 ஹெலிகாப்டர் விபத்து குறித்து அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. குன்னூரில் ஏற்பட்ட அந்த விபத்து மனித தவறால், அதாவது ஹெலிகாப்டரை இயக்கிய விமானப் படையினரால் ஏற்பட்ட தவறு என சுட்டிக்காட்டியுள்ளது.
மக்களவையில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த அறிக்கையில் மேலும் சில திடுக்கிடும் தகவல்கள் இடம்பெற்றிருந்தன. 2017ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை இந்திய விமானப் படை மொத்தம் 34 விபத்துக்களை சந்தித்துள்ளது. அதில் 2021-2022 நிதியாண்டில் மட்டும் 9 விபத்துக்கள் நடந்துள்ளன. அதில் ஒன்றுதான் 2021ம் ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி குன்னூரில் மனித தவறால் விளைந்த Mi-17 ஹெலிகாப்டர் விபத்து.