
கிறிஸ்துமஸ் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது கேக் தான். கிறிஸ்துமஸின் முக்கிய உணவாக கேக் உள்ளது. இந்த கிறிஸ்துமஸ் கேக் நீண்ட பாரம்பரியம் கொண்டது. ஆரம்ப காலத்தில் கேக் என்பது பசிக்கு சாப்பிடும் உணவாக இருந்தது. கேக் தோன்றுவதற்கு முன்னர் அது கஞ்சியாக தான் குடிக்கப்பட்டது.
சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் டிசம்பர் மாதத்தின் ஆரம்ப காலத்தில் உண்ணா நோன்பு இருக்கும் முறை கிறித்தவர்களிடம் இருந்தது. இந்த உபவாசம் முடியும் போது அவர்கள் நீண்ட நேரம் பசி தாங்கும் அளவுக்கு ஒரு கஞ்சியினை தயார் செய்தார்கள். இங்கிலாந்தில், பிளம் கஞ்சியை கிறிஸ்மஸ் ஈவ் அன்று மக்கள் சாப்பிட்டனர். அதில் நிறைய ஆரஞ்சு பழங்கள், திராட்சைகள், முந்திரிகள், பாதாம் , பிஸ்தா, பழங்கள், ஓட்ஸ், தேன் அல்லது இனிப்பு சிரப்புகள் ஆகியவற்றை கலந்து கிறிஸ்துமஸ் கஞ்சி தயாரிக்கப்பட்டது.
16 ஆம் நூற்றாண்டில், இந்த பிளம் கஞ்சியில் ஓட்ஸ் நீக்கப்பட்டது. அதற்கு பதில் வெண்ணெய், மாவு, முட்டை எல்லாம் சேர்த்து ஒரு கலவையாக மாற்றினர். இந்த கலவையை பாத்திரத்தில் கொட்டி சூடாக்கி கேக்காக மாற்றினர். அன்றைய காலத்தில் கேக் செய்ய தேவையான பெரிய ஓவன் அடுப்புகள் பணக்காரர்கள் வீட்டில் மட்டுமே இருந்தது. மற்றவர்கள் பன்னிரண்டாம் இரவு கொண்டாட்டங்களில் கிறிஸ்துமஸ் கேக்கிற்கு பதிலாக பாதாம் மற்றும் செவ்வாழையால் மூடப்பட்ட புட்டிங் செய்து கொண்டாடினர்.
பிரிட்டிஷ் ராணி விக்டோரியா 1800 களின் பிற்பகுதியில் பன்னிரண்டாம் இரவு கொண்டாட்டங்களை தடை செய்தார். இது ஒரு கிறிஸ்தவ மத பாரம்பரியத்தில் இல்லை என்றும் கூறினார். அவரது தடையால் பிரிட்டனில் உள்ள பேக்கரிகளின் வருமானம் பாதிக்கப்பட்டது. அதன் பின்னர் பேக்கர்கள் பன்னிரண்டாவது இரவு கேக்கை கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்காக ஐஸ் கேக்காக செய்யத் தொடங்கினர்.
பாரம்பரிய கிறிஸ்துமஸ் கேக், பிளம் கேக்காக தான் பல நாடுகளில் செய்யப்படுகின்றது. இன்றைய செயல் முறைகள் கிறிஸ்துமஸ் மாதத்திற்கு முன்பு குடும்பத்தினர் நண்பர்கள் ஒன்று சேர்ந்து மாவு, திராட்சை, உலர் பழங்கள், செர்ரி, முந்திரி, பாதாம் உள்ளிட்ட விதைகளையும் சேர்த்து சில மது வகைகளையும் அதில் ஊற்றி பிசைந்து தயாரிக்கின்றனர். அதன் பிறகு அந்த கேக்கை பேக் செய்கின்றனர்.
இந்த கேக் செய்யும் போது வெள்ளி, தங்க நாணயங்கள், மோதிரம், நகைகள் போன்றவற்றையும் சேர்ப்பது பணக்காரர்களின் வாடிக்கை. இந்த கேக் பேக் செய்யப்பட்டு கிறிஸ்துமஸ் வரை யாரும் சாப்பிடாமல் வைத்திருப்பார்கள். அவ்வப்போது கேக்கில் உள்ள சிறு துளைகளில் மது ஊற்றப்படும். இந்த கேக் நீண்ட நாட்கள் கெடாமல் அப்படியே இருக்கும். கிறிஸ்துமஸ் அன்று இந்த கேக் வெட்டப்படும். விஸ்கி டண்டீ என்று அழைக்கப்படும் பாரம்பரிய மிக்க இந்த கேக் ஸ்காட்டிஷ் நாட்டில் இருந்து வந்தது. இந்த கேக் வெட்டப்படும் போது அதிர்ஷ்டம் உள்ளவர்களுக்கு அதில் உள்ள மோதிரம், தங்க, வெள்ளி நாணயங்கள் கிடைக்கும்.
பிற கிறிஸ்துமஸ் கேக் வகைகளில் ஆப்பிள் க்ரீம் கேக் மற்றும் மின்ஸ்மீட் கேக் ஆகியவை அடங்கும். இன்று கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் நூற்றுக்கணக்கான வகை கேக்குகள் தயாரிக்கப்படுகின்றன.