மக்களுக்கு மிகவும் வசதியான போக்குவரத்து என்றால் அது ரயில் போக்குவரத்துதான். அதிலும் மக்களுக்காக இலவச உணவு வழங்கும் ஒரு ரயில் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
சாதாரண மக்களின் வாழ்வில் ரயில் பயணம் ஒரு முக்கிய அங்கமாக விளங்குகிறது. ரயில் பயணம் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு மிகவும் மலிவான போக்குவரத்து முறையாகும். தொலைதூரப் பயணங்களுக்குக் கூட குறைந்த கட்டணத்தில் செல்ல முடிவதால், வேலை தேடுபவர்கள், வியாபாரிகள் மற்றும் அன்றாட கூலித் தொழிலாளர்கள் தங்கள் ஊர்களிலிருந்து நகரங்களுக்குச் சென்று வர இது மிகவும் உதவுகிறது.
விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை சந்தைகளுக்குக் கொண்டு செல்லவும், சிறு வணிகர்கள் தங்கள் பொருட்களை விநியோகிக்கவும் ரயில் போக்குவரத்து பெரிதும் உதவுகிறது. இதனால், கிராமப்புற பொருளாதாரமும் மேம்பாடு அடைகிறது.
பேருந்துகள் மற்றும் பிற சாலைப் போக்குவரத்துடன் ஒப்பிடும்போது ரயில் பயணம் மிகவும் வசதியானது. நெரிசல் இல்லாத பயணம், கழிப்பறை வசதி, படுத்து உறங்குவதற்கான வசதி போன்ற பல அம்சங்கள் பயணத்தை எளிதாக்குகின்றன. மேலும், ரயில் பயணம் பொதுவாக சாலை விபத்துக்களை விட பாதுகாப்பானது என்று கருதப்படுகிறது. குறிப்பாக பெண்கள் மற்றும் வயதானவர்களுக்கு ரயில் பயணம் மிகவும் பாதுகாப்பானதாக உள்ளது.
அந்தவகையில் மேலும் வசதி தரும் ஒரு ரயில் பற்றி பார்ப்போம். இந்தியாவில் மூன்று வேளை இலவச உணவு வழங்கும் ஒரே ரயில் சச்கண்ட் எக்ஸ்பிரஸ் (Sachkhand Express) ஆகும்.
இந்த ரயில், சீக்கியர்களின் புனிதத் தலங்களான அமிர்தசரஸில் உள்ள ஸ்ரீ ஹர்மந்திர் சாஹிப் மற்றும் நாந்தேட்டில் உள்ள ஸ்ரீ ஹசூர் சாஹிப் ஆகியவற்றை இணைக்கிறது. 2,081 கி.மீ. தூரம் பயணிக்கும் இந்த ரயிலில், ஆறு நிலையங்களில் பயணிகளுக்கு இலவச உணவு வழங்கப்படுகிறது.
சுமார் 29 ஆண்டுகளாக இந்த சேவை நடைபெற்று வருகிறது. பொதுப் பெட்டி மற்றும் ஏசி பெட்டிகளில் பயணிக்கும் சுமார் 2,000 பயணிகள் தினமும் இந்த இலவச உணவைப் பெற்று பயனடைகின்றனர். இந்த ரயிலில் உணவு சமைப்பதற்கென தனியாக சமையலறை பெட்டி இல்லை. லங்கர் எனப்படும் பொது சமையலறையிலிருந்து உணவு தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. கறி-சாவல், பருப்பு மற்றும் காய்கறி போன்ற உணவுகள் வழங்கப்படுகின்றன.
எனவே, மூன்று வேளை இலவச உணவு வழங்கும் ஒரே ரயில் என்ற பெருமை சச்கண்ட் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு மட்டுமே உண்டு.