

தமிழ்நாடு அரசு சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தோழி விடுதிகளை (thozhi hostel scheme) நடத்தி வருகிறது. பணிபுரியும் பெண்கள், படிக்கும் மாணவிகள் உள்ளிட்டோர் இந்த விடுதியில் தங்கிக் கொள்ளலாம். பெண்கள் மட்டுமே இந்த விடுதியில் தங்க முடியும்.
வீட்டிற்குள்ளே முடங்கி இருந்த பெண்கள் தற்போது தங்களது கல்விக்காகவும் வேலைக்காகவும் கடல்கடந்து செல்லவும் ஆரம்பித்துவிட்டனர். பெண்கள் கடல்கடந்து சென்றாலும் கூட பாதுகாப்பு என்று வரும் போது அது கேள்விக்குறியாக தான் உள்ளது. அந்த வகையில் சென்னையில் பல்வேறு இடங்களில் படிக்கும் மற்றும் வேலைக்கு போகும் பெண்கள் தங்குவதற்கு விடுதிகள் உள்ளன. ஆனால் தனியார் மூலம் நடத்தப்படும் இந்த விடுதிகளில் அதிகளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும் சில விடுதிகளில் சரியான பாதுகாப்பும் இல்லை.
இந்நிலையில் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கவும், குறைந்த விலையில் தரமான தங்கும் இடத்தை உறுதி செய்யவும் தமிழக அரசு ‘தோழி பெண்கள் தங்கும் விடுதி’யை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து வேலைக்காகவும், பயிற்சிக்காகவும், படிப்பிற்காகவும் செல்லும் பெண்களின் பாதுகாப்பான தங்குமிடத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான சிறப்பு முயற்சியாக ‘தோழி பெண்கள் தங்கும் விடுதி’ தமிழ்நாடு அரசால் நிறுவப்பட்டுள்ளது.
முழுக்க முழுக்க மாணவிகள் மற்றும் பணிபுரியும் பெண்களுக்கென தனிச்சிறப்பு வாய்ந்த திட்டமாக செயல்பட்டு இந்த திட்டத்தின் கீழ், பெண்களுக்கு பாதுகாப்பான மற்றும் குறைந்த வாடகையில் நவீன வசதிகள் செய்து தரப்படுகிறது. பெண்கள் அவர்களின் வசதிக்கு ஏற்ப தினசரி மற்றும் மாதாந்திர அடிப்படையில் அறைகளின் பதிவு செய்தும் கொள்ளலாம்.
தோழி விடுதி அமைந்துள்ள இடங்கள்:
சென்னை (அடையாறு, தாம்பரம் உட்பட), செங்கல்பட்டு (கூடுவாஞ்சேரி), பெரம்பலூர், சேலம், திருச்சி, திருநெல்வேலி, தஞ்சாவூர், வேலூர், விழுப்புரம் ஆகிய 9 மாவட்டங்களில் 19 மகளிர் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. மேலும் ஆயிரக்கணக்கான பெண்களை தங்க வைப்பதற்காகப் பல விடுதிகள் கட்டுமானபணியில் உள்ளன.
விடுதியில் உள்ள சிறப்பு வசதிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகள்
இந்த விடுதியில் சாப்பாட்டு அறை, குழந்தைகள் காப்பகம், ஓய்வறை, வாட்டர் கூலருடன் கூடிய RO தண்ணீர் வசதி, வைஃபை, மைக்ரோவேவ், ஏர் கண்டிஷனர்கள், லிஃப்ட் வசதி, சலவை இயந்திரம், இஸ்திரி பலகை, இஸ்திரி பெட்டி, குளிர்சாதனப் பெட்டியுடன் கூடிய சமையலறை ஆகியவை உள்ளன.
இந்த விடுதியில் தங்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 24 மணி நேரமும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. மேலும் 24×7 பாதுகாப்புப் பணியாளர்கள், விடுதி மேலாளர், பயோமெட்ரிக் நுழைவு/வெளியேறும் வசதியும் உள்ளது.
நேரம்:
பொதுவாக இரவு 10 மணி வரை மட்டுமே விடுதிக்குள் வருவதற்கு அனுமதிக்கப்படுவார்கள். இருப்பினும், வெவ்வேறு ஷிப்டுகளில் பணிபுரிபவர்கள் ஷிப்ட் நேரத்திற்கு ஏற்றாற் போல விடுதிக்கு வரலாம்.
தோழி விடுதி திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
* வேலைவாய்ப்பு, பயிற்சி அல்லது அலுவல் நோக்கங்களுக்காகப் பயணம் செய்யும் பணிபுரியும் பெண்களுக்குப் பாதுகாப்பான, சுகாதாரமான மற்றும் மலிவு விலையில் தங்குமிடத்தை வழங்குதல்.
* ஒருநாள் தங்குவதற்கு கூட இந்த விடுதியை பெண்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
* ஒருநாள் தங்குபவர்களுக்கு ரூ.1000 அட்வான்ஸ் மற்றும் வாடகை செலுத்த வேண்டும்.
* இந்த விடுதிகளில் தனி அறைகளும், இரண்டு பேர், நான்கு பேர் மற்றும் 6 பேருடன் பகிர்ந்து தங்கக்கூடிய அறைகளும் உள்ளன.
* அறைகளின் மாத வாடகை ரூ.4,000 முதல் தொடங்குகிறது. தேவைப்பட்டால், 15 நாட்களுக்குக் குறுகிய காலமாகவும் தங்கிக் கொள்ளலாம்.
* இருவர் தங்கும் அறையில் கூடுதல் கட்டணம் செலுத்தி தனியாகவும் தங்கிக் கொள்ளலாம்.
* மாத அடிப்படையில் தங்குபவர்களுக்கு ஒருமாத வாடகை அட்வான்ஸாக செலுத்த வேண்டும். டெபாசிட் தொகை செக்அவுட் தேதியில் இருந்து 7 நாட்களுக்குள் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
* மாத அடிப்படையில் தங்குபவர்கள் அறையை காலி செய்வதற்கு 15 நாட்களுக்கு முன்னதாகவே தெரிவிக்க வேண்டியது கட்டாயம்.
* விடுதியில் தங்குபவரை பார்க்க குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் வந்தால் அவர்கள் விடுதியில் தங்குவதற்கு அனுமதியில்லை.
* உணவு வேண்டும் என்றால் அதற்கு தனிக்கட்டணம் செலுத்த வேண்டும்.
* விடுதியில் தங்கி இருப்பவரை பார்க்க எந்த ஆண் பார்வையாளருக்கும் அனுமதி இல்லை.
* இந்த விடுதிகளில் தங்குபவர்களிடம் இருந்து எந்தொரு மின்சாரக் கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை.
* உங்களைப் பற்றிய தகவல்கள் மற்றும் ஆவணங்களை சமர்பித்த பிறகு உங்களுக்கான அறைகளை ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
* விடுதியின் சட்ட திட்டங்கள், விதிமுறையை பின்பற்றாதவர்களை விடுதியைவிட்டு வெளியேற்றும் உரிமை வார்டனுக்கு உண்டு.
புக் செய்வது எப்படி?
தமிழ்நாடு அரசின் தோழி விடுதியில் தங்க விரும்பும் பெண்கள் https://www.tnwwhcl.in/ என்ற இணையதளம் மூலம் சந்தேகங்களையும் நிவர்த்தி செய்து கொள்ளலாம், மேலும் தேவையான விவரங்களை தெரிந்து கொண்டு ஆன்லைனில் விடுதியை புக் செய்து கொள்ளலாம்.
தோழி விடுதி பற்றிய மேலும் விவரங்களுக்கு 9499988009 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.
மேலும், அந்த மாவட்டங்களில் உள்ள தோழி விடுதிகளின் துல்லியமான இடத்தை தெரிந்துக் கொள்ள https://www.tnwwhcl.in/ என்ற வலைத்தள பக்கத்தில் உள்ள Locations ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.