காமராஜர் கண்ட கனவுக்கு பின்னடைவு: உசிலம்பட்டியில் 3 அரசு தொடக்க பள்ளிகள் மூடல்!

மாணவர் பற்றாக்குறையால் சிரங்கம்பட்டி, தாதம்பட்டி, ஓணாபட்டி பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டதால் கல்வி ஆர்வலர்கள் அதிர்ச்சி.
3 அரசு தொடக்கப் பள்ளிகள் மூடல்!
3 அரசு தொடக்கப் பள்ளிகள் மூடல்!Source:polimer
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டத்தில் உள்ள சிரங்கம்பட்டி, தாதம்பட்டி மற்றும் ஓணாபட்டி ஆகிய மூன்று கிராமங்களில் இயங்கி வந்த அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகள் மாணவர் பற்றாக்குறையின் காரணமாக மூடப்பட்டுள்ளன. அப்பள்ளிகளில் பணியாற்றிய ஆசிரியர்கள் மற்றும் கல்விப் பணியாளர்கள் வேறு பள்ளிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அத்துடன் அங்கு பயின்று வந்த ஓரிரு மாணவ மாணவிகளும் அருகில் உள்ள பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். மாணவர் சேர்க்கை கடுமையாகக் குறைந்ததைக் காரணம் காட்டி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இப்படி மூன்று கிராமங்களில் இயங்கி வந்த அரசு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளிகள் திடீரென மூடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த அரசு பள்ளிகளில் கடந்த சில ஆண்டுகளாகவே மாணவர்கள் சேர்க்கை தொடர்ந்து சரிந்து வந்துள்ளது. இறுதியாக இப்பள்ளிகளில் பயின்று வந்த சில மாணவ மாணவிகளும் தங்களுடைய பெற்றோரின் விருப்பத்தின் பேரில் அருகில் உள்ள பிற பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். இதனால் மாணவர்களே இல்லாத நிலை உருவானதை அடுத்து கல்வித்துறையின் விதிகளின்படி இந்த மூன்று பள்ளிகளையும் தற்காலிகமாக மூடுவதற்கு அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனால் அந்தப் பள்ளிகளில் பணிபுரிந்த ஆசிரியர்கள் மற்றும் கல்விப் பணியாளர்கள் வேறு பள்ளிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதி பெரும்பாலும் விவசாயம் சார்ந்த மிகவும் பின் தங்கிய பகுதியாக உள்ளது. காமராஜரின் ஒரு கிராமத்திற்கு ஒரு பள்ளி என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்ட அரசு பள்ளிகளின் காரணமாக கிராமப்புற மக்களும் கல்வியால் மாறி வந்தனர். ஆனால் தனியார் பள்ளிகளின் ஆதிக்கத்தால் கிராமப்புற பகுதிகளில் இயங்கும் அரசு துவக்கப் பள்ளிகளில் மாணவ மாணவிகள் சேர்க்கை படிப்படியாக குறைந்து இன்று பள்ளிகள் மூடப்படும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளன. அந்த வகையில் உசிலம்பட்டி தாலுகாவிற்கு உட்பட்ட கிராமப்புற பகுதிகளான சிரங்கம்பட்டி, தாதம்பட்டி, ஓனாபட்டி கிராமங்களில் இயங்கி வந்த மூன்று அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகள் மாணவர் பற்றாக்குறையை காரணம் காட்டி மூடப்பட்டுள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தல் வரை இந்த பள்ளிகளில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட்ட சூழலில், அடுத்து வரும் தேர்தல்களில் இந்த கிராம மக்கள் அடுத்தடுத்த கிராமங்களுக்கு சென்று வாக்களிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

School closed
School closed

அரசுப் பள்ளிகளை மேம்படுத்தவும் மாணவர்களுடைய சேர்க்கையை அதிகரிப்பதற்கும் தமிழக அரசு பலவிதமான சலுகைகளையும், காலை உணவு திட்டம் போன்ற பயனுள்ள திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. இருப்பினும் கிராமப்புற பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் தங்களின் பிள்ளைகளை சேர்ப்பதற்கு பெற்றோர்களும், அந்தப் பள்ளிகளில் சேர்ந்து படிப்பதற்கு மாணவர்களும் முன் வராதது கல்வி துறை அதிகாரிகளிடமும், கல்வி ஆர்வலர்களிடமும் கவலையையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

கிராமப்புறங்களில் உள்ள அரசு பள்ளிகளில் சேர்வதற்கு மாணவர்களை ஊக்கப்படுத்தவும், கிராமப்புறங்களில் உள்ள அரசுப் பள்ளிகள் மீதான விழிப்புணர்வை இன்னும் அதிகரிக்கவும் வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு பள்ளிகளுக்குச் சென்று அங்குள்ள மாணவர்களின் கல்வித் தரத்தை சோதனை செய்வதாகக் கூறி ஆய்வு செய்யும் அமைச்சர்களும் அரசு பள்ளிகளின் நிலைகளைப் பற்றி ஆய்வு செய்து மீண்டும் திறப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் மக்கள் விரும்புகின்றனர்.

தனியார் பள்ளிகளில் படித்தால் தான் மதிப்பு என்ற மோகம் ஒருபுறம், அரசுப் பள்ளியின் தரம் நன்றாக இருந்தாலும் மேலும் கல்வியின் தரத்தை கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகளில் கண்டிப்பாக உயர்த்த வேண்டும் என்பதும் சிந்திக்க வேண்டிய விஷயங்கள். கிராமப்புறங்களில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்கள் அதிக அளவில் சேருவதற்கு அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பல வகையான திட்டங்கள் மற்றும் நலன்கள் ஏற்படுத்த வேண்டும். அரசுப் பள்ளிகளின் குறிப்பாக கிராமப்புறத்தில் உள்ள அரசு பள்ளிகளின் விஷயத்தில் அதிக அக்கறை காட்டி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டியது மிகவும் அவசியம். இல்லையெனில் கிராமங்களில் அரசு பள்ளிகளை மூடி விடுவதால் மிகவும் பின் தங்கிய கிராமங்களில் கல்வி என்பது எட்டாக்கனியாக மாறும் அபாயம் உள்ளது. இதற்கு உடனடியாக அரசு ஆய்வு செய்து, மூடப்பட்ட பள்ளிகளை மீண்டும் திறந்து மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
#BREAKING: 2,000 ரூபாய் நோட்டுகளை இப்போதும் மாற்றிக் கொள்ளலாம்.! RBI அதிரடி அறிவிப்பு.!
3 அரசு தொடக்கப் பள்ளிகள் மூடல்!
logo
Kalki Online
kalkionline.com