

இந்தியாவின் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில், பண மதிப்பிழப்பு நடவடிக்கையை ரிசர்வ் வங்கி அமல்படுத்துவது வழக்கம். இதன்படி புழக்கத்தில் இருந்த 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக கடந்த 2023 ஆம் ஆண்டு மே 19-ம் தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது.
இதன்படி 2,000 ரூபாய் நோட்டுகளை 2023 செப்டம்பர் 30-ம் தேதி வரை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் எனவும் கால அவகாசம் வழங்கப்பட்டது. கால அவகாசம் முடிவுற்ற நிலையில் அக்டோபர் 7ம் தேதி வரை நீட்டித்தது ரிசர்வ் வங்கி. இதன்படி தற்போது வரை 98.47% 2,000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி திரும்பப் பெற்றுள்ளது.
இந்நிலையில் தற்போதும் 2,000 ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் வைத்திருந்தால், மாற்றிக் கொள்ள கடைசி வாய்ப்பை வழங்கியுள்ளது ரிசர்வ் வங்கி. ஆனால் வங்கிகளில் 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாது. மாறாக இந்தியா முழுவதும் உள்ள 19 ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் மட்டுமே 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியும்.
இந்தியாவில் 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதற்கான அறிவிப்பை வெளியிட்ட பிறகு, பொதுமக்கள் பலரும் உடனடியாக வங்கியில் கொடுத்து மாற்றி விட்டனர். இருப்பினும் குறைந்த அளவிலான நோட்டுகள் இன்னும் ரிசர்வ் வங்கிக்கு திரும்ப வராத நிலையில், தற்போது முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது இந்தியன் ரிசர்வ் வங்கி.
ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பில், “2,000 ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் வைத்திருந்தால், இப்போதும் மாற்றிக் கொள்ள முடியும். இந்தியாவில் உள்ள 19 ரிசர்வ் வங்கி பிராந்திய அலுவலகங்களில் மட்டுமே 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியும். இந்தியாவின் பொருளாதாரத்தை உயர்த்த 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவது அவசியமாக கருதப்பட்டது. ஆகையால், பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றும் வழிமுறை:
* ரிசர்வ் வங்கி அலுவகத்திற்கு சென்று, உங்கள் வங்கிக் கணக்கு விவரங்கள் மற்றும் கேஒய்சி சரிபார்ப்பு விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
* பிறகு, நீங்கள் வைத்திருக்கும் 2,000 ரூபாய் நோட்டுகளையும் சமர்ப்பிக்க வேண்டும்.
* விவரங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னர், 2 வங்கி வேலை நாட்களுக்குள் அந்தப் பணம் உங்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
ரிசர்வ் வங்கி அலுவலகங்கள் செல்ல முடியாதவர்கள், அருகிலுள்ள அஞ்சல் அலுவலகங்களைப் பயன்படுத்திக் கெள்ளலாம். அஞ்சல் அலுவலகத்திற்குச் சென்று, வங்கிக் கணக்கு விவரங்களுடன் 2,000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கலாம். விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, இந்தப் பணம் உங்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
பொதுமக்களிடம் உள்ள மிகக் குறைந்த அளவிலான நோட்டுகள், சட்டப்பூர்வமான பணத்தாள்களாகவே கருதப்படுகின்றன. இருப்பினும் இவற்றைச் சாதாரண வணிகப் பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்த முடியாது. ஆகையால் ரிசர்வ் வங்கி அலுவலகங்கள் மூலம் இந்த பணத்தாள்களை மாற்றிக்கொள்வதே சிறந்தது. 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள கடைசி வாய்ப்பாக இது கருதப்படுவதால், உங்களிடம் இருந்தால் உடனடியாக ரிசிர்வ் வங்கி கிளைக்குச் செல்லுங்கள்.
கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள, இந்தியன் ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் (rbi.org.in) பார்வையிடவும்.