திருப்பத்தூர் வன சரக வட்டத்தில் ஒரு லட்சம் எக்டேர் பரப்பளவில் வனப்பகுதி அமைந்துள்ளது. குறிப்பாக ஏலகிரி மலை, ஜவ்வாது மலை, மாத கடப்பா, நெக்னாமலை, காவனூர், பனங்காட்டேரி உள்ளிட்ட இடங்களில் அடர்ந்த வனப் பகுதிகள் உள்ளன. இங்கு மான், காட்டுப்பன்றி, கரடி மலைப்பாம்பு, முயல் உள்ளிட்ட விலங்கினங்களும், எண்ணற்ற பறவை இனங்களும் வாழ்கின்றன.
இந்நிலையில் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள கிராமப் பகுதிகளில் பெரும்பாலான விவசாயிகள், தங்கள் நிலங்களுக்குள் வனவிலங்குகள் நுழையாமல் இருப்பதற்காக நிலத்தைச் சுற்றிலும் சட்ட விரோதமாக மின்வெளி அமைத்துள்ளனர். அதே வேளையில் சிலர் அத்துமீறி வனப் பகுதிக்குள் புகுந்து காட்டு விலங்குகளை வேட்டையாடவும் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே சின்ன மூக்கனூரைச் சேர்ந்த சிங்காரம் (40) இவர் அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் தனது மகன் லோகேஷ் (14) மற்றும் பெருமாபட்டு கிராமத்தைச் சேர்ந்த கரிபிரான் (60) ஆகியோரை அழைத்துக் கொண்டு வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக உரிமம் பெறாத நாட்டு துப்பாக்கியுடன் பெருமாபட்டு வழியாக ஏலகிரி மலை வனப்பகுதிக்கு நேற்று முன்தினம் மாலை புறப்பட்டு சென்றார்.
நள்ளிரவு 2 மணிக்கு மேல் அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்தை கடக்க முயன்றனர். அப்போது அங்கு சட்ட விரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி மூன்று பேரும் அதே இடத்தில் துடி துடித்து பரிதாபமாக இறந்தனர். இதை தொடர்ந்து நேற்று காலை அந்த வழியாக சென்ற சிலர், விவசாய நிலத்தில் மூன்று பேர் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து குருசிலாபட்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பெயரில் அங்கு சென்ற போலீசார், சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். பின்னர் மின்சாரம் தாக்கி பலியான மூன்று பேர் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அங்கு தரையில் கிடந்த நாட்டு துப்பாக்கி கைப்பற்றினர். இதற்கு முன்னதாக டிஎஸ்பிகள் அறிவழகன் (ஆம்பூர்) தங்கதுரை (மாவட்ட குற்ற ஆவண காப்பகம்) திருப்பத்தூர் வனச்சரகர் சோழராஜன் ஆகியோரும் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இது தொடர்பாக சிங்காரம் மனைவி தீபா கொடுத்த புகாரின் பேரில், குருசிலா பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் பெருமாபட்டு அருகே காளியம்மன் கோவில் வட்டத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் நிலத்தை, நீதி (50) என்பவர் குத்தகைக்கு எடுத்து பயிர் செய்வது தெரிய வந்தது. அவரை பிடித்து விசாரித்ததில், காட்டுப் பன்றிகள் நிலத்தில் நுழையாமல் இருப்பதற்காக சட்டவிரோதமாக மின் வேலி அமைத்தது அவர்தான் என்பது உறுதியானது. இதைத் தொடர்ந்து அவரை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் மலைவாழ் மக்கள் மற்றும் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள கிராமங்களில் வசிப்பவர்களில் சிலர் வன பகுதிக்குள் சென்று காட்டு முயல், காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாடுகின்றனர். பின்னர் அவற்றின் இறைச்சியில் அவர்கள் பயன்பாட்டுக்கு போக மீதம் உள்ளவற்றை விற்பனை தொழிலாக செய்து வருகின்றனர். குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி தேவை அதிக அளவில் உள்ளது என்பதால், சனிக்கிழமை இரவு வனப்பகுதிக்கு சென்று விலங்குகளை வேட்டையாடி, அவற்றின் இறைச்சியை மறுநாள் பொழுது முடிவதற்குள் வாடிக்கையாளர்களுக்கு சப்ளை செய்து விடுகின்றனர். அந்த வகையில் சிங்காரம் உள்ளிட்ட மூன்று பேரும் வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக நேற்று முன்தினம் மாலை வனவிலங்குகளை வேட்டையாட சென்றுள்ளனர். ஆனால் நள்ளிரவில் எதிர்பாராத விதமாக மின்சார வேலியில் சிக்கி இறந்துள்ளனர். இது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.