
தீபாவளிப் பண்டிகையை பொதுமக்கள் பாதுகாப்பாக கொண்டாட வேண்டும் என்று புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. இது சார்ந்து புதுச்சேரி அரசின் சார்பில் முக்கியமான செய்தி குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
பொது மக்கள் தாம் வெடித்த பட்டாசு, எரிந்த கம்பி, மத்தாப்புகள் போன்றவற்றின் மீது தண்ணீரை உடனே ஊற்றி அவற்றின் நெருப்பினை அணைக்க வேண்டும்..இதன் மூலம் நம் உடலில் தீக்காயங்கள் ஏற்படாமல் நம்மால் பார்த்துக் கொள்ள முடியும்.
அரசின் முறையான அனுமதி பெற்ற சட்டபூர்வமான, பசுமை பட்டாசுகளை மட்டும் வாங்குவது நல்லது.
பட்டாசினை வழிப்பாட்டு இடங்கள், மருத்துவமனை, பள்ளி ஆகிய அமைதிப் பகுதிகளில் வெடிக்கக் கூடாது.
மேலும் பட்டாசு வெடிக்கும் போது எளிதில் தீப்பிடிக்கும் பருத்தி ஆடைகள், பாலியஸ்டர் ஆடைகள் அணிவதை பட்டாசு வெடிப்பவர்களும்,அவர் அருகில் உள்ளவர்களும் தவிர்க்க வேண்டும்.
தண்ணீர், மணல் ஆகிய தீ அணைப்பான்களை முன்னெச்சரிக்கையாக பட்டாசு வெடிக்கும் இடத்தின் அருகில் வைத்திருக்க வேண்டும்.இவை பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் தீவிபத்துக்களைத் தவிர்க்க உதவும்.
குழந்தைகள் பட்டாசுகளை பெரியவர்களின் கண்கானிப்பின் கீழ்தான் வெடிக்க வேண்டும்.
ஒரு முறை கொளுத்தப்பட்ட பட்டாசு வெடிக்கவில்லை என்றால் மீண்டும் அவற்றை வெடிக்க வைக்க முயற்சிக்காமல் நீரில் மூழ்கடித்து தூக்கி எறிந்து விட வேண்டும்.
விளக்கு, மெழுகுவர்த்தி போன்ற எரிந்துக் கொண்டிருக்கும் பொருள்கள் வெடிகளின் அருகே இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
வீட்டில் ஜன்னல், கதவுகளை திறந்துவைத்து வீட்டிற்குள் புகை சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
தீபாவளிப் பண்டிகையன்று காற்றில் மாசு அதிகரித்து இருக்க வாய்புண்டு. எனவே, முகக்கவசம் அணிந்துக் கொண்டு பட்டாசுகளை வெடிக்கலாம். மேலும் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பட்டாசு புகையினை விட்டு விலகி இருக்க வேண்டும்.
செல்லப்பிராணிகளை பட்டாசு சத்தத்திலிருந்து பாதுகாப்பான தூரத்தில் வைத்திருக்க வேண்டும். பசுமை பட்டாசுகளை மட்டும் பொதுமக்கள் பயன்படுத்துவதன் மூலம் தீபாவளிப் பண்டிகையன்று காற்றில் ஏற்படும் மாசுபாட்டை குறைக்கலாம் ஆகிய ஆலோசனைகள் இந்த அரசு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளன.
புஸ்வானம் பட்டாசு போன்ற தீ பொறிகள் கிளம்பும் பட்டாசுகளை வெடிக்கும் பொழுது முகத்தினை சற்று தூரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.இதன் மூலம் கண்களை பாதுகாத்துக் கொள்ள முடியும். வெடிகளை கைகளில் பிடித்து எரிவது தவிர்க்கப்பட வேண்டும்.இதன் மூலம் தீக்காயங்கள் உடலில் ஏற்படுவதை தவிர்க்கலாம் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது.
மொத்தத்தில் உடல் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பௌஆகியவற்றின் மீது அக்கறை செலுத்தக் கூடிய தீபாவளிக் கொண்டாட்டமே நம் குடும்பத்துக்கும் சமூகத்துக்கும் மகிழ்ச்சியை அளிக்கும் என்று அந்த செய்திக் குறிப்பு மேலும் தெரிவிக்கிறது.
இச்செய்தி புதுச்சேரி மக்களுக்கு மட்டுமல்ல,நம் அனைவருக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.