பக்தர்கள் ஷாக்..! திருச்செந்தூர் முருகன் கோவில் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு..!

"விலைவாசி உயர்வு, வருவாய் குறைவு" - கட்டண உயர்வுக்குக் கோவில் நிர்வாகம் சொல்லும் காரணமும், பொதுமக்களின் அதிர்ச்சியும்.
திருச்செந்தூர் முருகன் கோயில்
திருச்செந்தூர் முருகன் கோயில்
Updated on

இந்து கடவுள்களில் முருகன் தனித்துவமிக்கவராவார். தமிழகத்தின் தெற்கு பகுதியில் உள்ள திருச்செந்தூர் முருகன் கோவில், அழகான கடற்கரையின் அருகில் அமைந்துள்ள ஒரு பிரசித்திபெற்ற கோவிலாகும். முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடாக விளங்கும் இந்த திருக்கோவில், தன் மெருகூட்டப்பட்ட வரலாறு, கட்டிடக்கலை, மற்றும் ஆன்மிக முக்கியத்துவத்தால் பக்தர்களின் மனதை ஈர்க்கிறது.

இது தூத்துக்குடி மாவட்டத்தில், கடற்கரையோரத்தில் அமைந்துள்ள மிகவும் புகழ்பெற்ற திருத்தலம். மற்ற அறுபடை வீடுகள் பெரும்பாலும் மலைப்பகுதிகளில் இருக்கும்போது, கடலோரத்தில் அமைந்துள்ளது இதன் தனிச்சிறப்பு .புராணக் கதையின்படி மக்களுக்கு தீங்கு செய்த அசுரனான சூரபத்மனை முருகப்பெருமான் சம்ஹாரம் அதாவது வதம் செய்த தலமாக திருச்செந்தூர் கருதப்படுகிறது. அதனால் இங்கு கந்த சஷ்டி, சூரசம்ஹாரம் போன்ற விழாக்கள் மிகப் பிரம்மாண்டமாக நடைபெறுகின்றன.

இந்தக் கோவிலின் மற்றொரு சிறப்பு தீர்த்தம் எனப்படும் நாழிக்கிணறு. கடலருகில் இருந்தும், இதில் இனிமையான குடிநீர் எப்போதும் கிடைப்பது பக்தர்களுக்கு ஆச்சரியத்தைத் தரும் ஒன்று.பக்தியுடன், புராண வரலாறு, அழகின் கடற்கரை, சிறப்பான திருவிழாக்கள் என அனைத்தையும் ஒரே இடத்தில் அனுபவிக்க ஏற்றதாக உள்ளது முருகன் வீற்றிருக்கும் திருத்தலமான திருச்செந்தூர் கோவில்.

எப்போதும் பக்தர்கள் கூட்டம் வந்த வண்ணம் இருக்கும் இக்கோவில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. பக்தர்கள் வசதிக்கேற்ப இங்கு தரிசனக் கட்டணங்கள் நடைமுறையில் இருந்து வருகிறது. அதையும் மீறி விரைவான மற்றும் முருகனின் அருகில் இருந்து பார்க்கும் வகையில் அர்ச்சகர்கள் மூலம் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டும் இங்கு உண்டு.

சமீபத்தில் அறநிலையத்துறையின் அமைச்சர் பக்தர்கள் போல இங்கு வந்து அதிக கட்டணம் வசூலித்த அர்ச்சகர்களை கையும் களவுமாக பிடித்து கோவில் நிர்வாகம் வரை விசாரித்தது மக்கள் இடையில் பெரும் பரபரப்பை தந்தது. அதன் பின்னர் அதிக கட்டணம் இல்லை என்று பாராட்டும் கிடைத்தது. இருப்பினும் இரு வாரங்கள் கழித்து மீண்டும் இதே நிலை இருந்ததாக அங்கு சென்று வந்த பக்தர்கள் கூறியதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையிலும் வருவாய் குறைவைக் காரணம் காட்டி அபிஷேகம், சண்முகார்ச்சனை, தங்கத்தேர் உலா போன்ற கட்டண சேவைகளின் தொகையை அதிகரிக்க திருக்கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கட்டணம் பற்றிய விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிவிப்பில், “அதிகளவு உயர்ந்துள்ள விலைவாசியைக் கருத்தில் கொண்டும், திருக்கோயிலுக்கான வருவாய் குறைவை ஈடு செய்யும் வகையிலும், நிர்வாகத்தின் நலன் கருதியும் தக்கார் தீர்மானத்தின் அடிப்படையிலும் தற்போதுள்ள சேவைக் கட்டணங்கள் மற்றும் அபிஷேக, சிறப்புத் தரிசனக் கட்டணங்களை உயர்த்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

திருசெந்தூர் முருகன்
Thiruchendur Murugan

இதுதொடர்பாக, வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: அதிகளவு உயர்ந்துள்ள விலைவாசியை கருத்தில் கொண்டும், கோவிலுக்கான வருவாய் குறைவை ஈடு செய்திடும் வகையிலும், நிர்வாக நலன் கருதி தக்கார் தீர்மானத்தின் அடிப்படையில், தற்போதுள்ள சேவை கட்டணங்கள் மற்றும் அபிஷேக சிறப்பு தரிசன கட்டணத்தை உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

தங்கரத உலா திட்டத்திற்கான ஒருநாள் கட்டணம் 2,500 ரூபாயில் இருந்து 5,000 ரூபாயாகவும், அதன் நிரந்தர வைப்பு நிதி 50,000 ரூபாயில் இருந்து 1 லட்ச ரூபாயாக உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதேபோல் சண்முகார்ச்சனைக்கான ஒருநாள் கட்டணம் 5,000 ரூபாயில் இருந்து 30,000 ரூபாயாகவும், மூலவர் அபிஷேகத்திற்கான ஒருநாள் கட்டணம் 1,500 ரூபாயில் இருந்து 10,000 ரூபாயாக உயர்த்தப்படுகிறது.

மேலும், ஒன்பது கால பூஜைக்கான ஒருநாள் கட்டணம் 1,500 ரூபாயில் இருந்து 6,500 ரூபாயாகவும், அதன் நிரந்தர வைப்பு நிதி 20,000 ரூபாயில் இருந்து 90,000 ரூபாயாகவும் அதிகரிக்கப்படுகிறது.

சந்தனக்காப்பு செய்வதற்கான ஒருநாள் அனுமதி கட்டணம் தற்போதுள்ள 100 ரூபாயில் இருந்து 1,000 ரூபாயாக உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்கான 1.5 கிலோ சந்தனக் கட்டை வழங்கும் நடைமுறையில் மாற்றமில்லை. அபிஷேக தரிசனக் கட்டணம் தற்போது சாதாரண நாட்களில் 500 ரூபாயாகவும், திருவிழா மற்றும் விசேஷ நாட்களில் 2,000 ரூபாயாகவும், இனி அனைத்து நாட்களுக்கும் பொதுவான முறையில் 2,500 ரூபாயாகவும் உயர்த்தப்பட உள்ளது.

இந்தக் கட்டண உயர்வுகள் குறித்து பக்தர்கள் அல்லது பொதுமக்களுக்கு ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால், அவற்றை எழுத்துப்பூர்வமாக வரும் 07.07.2026 மாலை 05.45 மணிக்குள் திருச்செந்தூர் கோயில் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பக்தர்களிடமிருந்து கருத்து கேட்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தாலும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக முன்பை விட பல மடங்கு உயர்ந்த இந்த கட்டணங்கள் கோவிலுக்கு வரும் எளிய பக்தர்களுக்கு கவலை தரும் செய்தியாக உள்ளது என்ற கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
ஜாதகம் தேவையா? நவீன கால திருமணங்களில் நாம் செய்ய வேண்டிய மாற்றங்கள் என்ன?
திருச்செந்தூர் முருகன் கோயில்
logo
Kalki Online
kalkionline.com