

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், வீரபாண்டிய கட்டபொம்மன் வழங்கிய 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க வெண்கல மணி சீரமைக்கப்பட்டு மீண்டும் திருக்கோவில் வழிபாட்டில் ஒலிக்கப்பட உள்ளது.
முருகப்பெருமான் மீது வீரபாண்டிய கட்டபொம்மன் வைத்திருந்த பக்திக்கு ஈடு இணையே இல்லை என்று சொல்லலாம்.தினமும் திருச்செந்தூரில் முருகப்பெருமானுக்கு பூஜை, நிவேதனம் நடந்து முடிந்த பிறகே, தன் மதிய உணவை உண்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.கட்டபொம்மனின் கோட்டை இருப்பதோ பாஞ்சாலங் குறிச்சியில். இங்கிருந்து அவ்வளவு தொலைவில் இருக்கிறது திருச்செந்தூர் முருகனாலயம்.கோயிலில் முருகனுக்கு நிவேதனம் நடந்துவிட்டதை அவர் தெரிந்து கொள்ளும விதமாக………திருச்செந்தூரிலிருந்து பாஞ்சாலங்குறிச்சி வரை ஆங்காங்கே கல் மண்டபங்களை அமைத்தார். மண்டபத்தின் உள்ளே வெங்கல மணிகளை பொருத்தினார்.ஒவ்வொரு மண்டபத்திலும் சேவகர்களை நிறுத்தியிருந்தார்.
திருச்செந்தூரில் உச்சிகால பூஜை நடந்து முடிந்தவுடனே திருச்செந்தூர் கோயில் ஆலய கோபுர மணி ஒலிக்கத் தொடங்குவது வழக்கம்.இதைத் தொடர்ந்து அடுத்திருக்கும் மண்டபத்திற்கு இந்த மணியோசை கேட்கும்.இதற்காக ஆறுமுகநேரி, ஆத்தூர், ஒட்டபிடாரம், பாஞ்சாலங்குறிச்சி உள்பட பல இடங்களில் மணி மண்டபம் அமைந்திருந்தார் கட்டபொம்மன்அந்த மண்டபத்திலிருக்கும் சேவகன், உடனே மண்டபத்தின் மணிகட்டை அவிழ்த்து மணியோசையை எழுப்புவான்.இப்படி அடுத்தடுத்து ஒவ்வொரு மண்டபமாக மணி ஒலித்து, இறுதியில் பாஞ்சாலங்குறிச்சி மண்டபத்தில் மணி ஒலிக்கும்.
மேலும், திங்கட்கிழமை தோறும் அதிகாலையில் கட்டபொம்மனுக்கு திருச்செந்தூர் முருகன் கோயிலிலிருந்து இலை விபூதி பிரசாதத்தை குதிரை வீரர்கள் கொண்டு வந்து கட்டபொம்மனிடம் கொடுத்துச் செல்வார்கள்.விபூதி கையில் கிடைத்தபிறகே அன்றாட பணிகளை கட்டபொம்மன் துவங்குவார்.திருச்செந்தூர் முருகன் கோயில் கோபுரத்தின் ஏழாவது நிலையில் ஒரு மணி தொங்க விடப்பட்டிருக்கும்.இதனை கட்டபொம்மனே அமைத்துக் கொடுத்திருந்தார். இது பல வருடங்களாக ஒலிக்கச் செய்யாமலே இருந்து வந்தது.
ஒரு சமயம், தன் மனைவிக்கு தங்க அட்டிகை ஒன்றை அன்பளிப்பாக வழங்க விரும்பி பொற்கொல்லரிடம் அதைத் தயாரிக்கும்படி சொல்லியிருந்தார் கட்டபொம்மன்.அன்றிரவு அவர் கனவில் தோன்றிய முருகன் அந்த அட்டிகையை நீ எனக்குத் தந்திருக்கலாமே? என்றாராம்.அட்டிகை தயாரான உடனேயே அதை எடுத்துப் போய் திருச்செந்தூர் கோயிலில் முருகனுக்கு அணிவித்து விட்டார்.இன்னொரு சமயம், திருச்செந்தூரில் மாசி திருவிழா நடந்து கொண்டிருந்தது.தேரோட்டத்துக்கு தேர் தயாராக நிற்கிறது. கட்டபொம்மன் வந்து வடம் பிடித்து கொடுக்க வேண்டும். ஏனோ அன்று , வர முடியவில்லை.சரி, நாமே தேரை இழுத்து விடலாம், என பக்தர்கள் தேரை இழுத்தனர். தேர் சிறிது தூரம்தான் உருண்டது. அதற்குமேல் நகராமல் நின்று விட்டது.தேரின் சக்கரம் ஓரிடத்தில் பதிந்து நின்று கொண்டது. எவ்வளவோ பக்தர்கள் முயற்சித்தும் தேர் நகரவில்லை.இதற்கிடையில் கட்டபொம்மனுக்கு செய்தி கொண்டு சேர்த்து, அவரும் இங்கு வந்து சேர்ந்தார்.கட்டபொம்மன் தேர்வடத்தை பற்றி பிடித்தார். உடனே தேர் நகர்ந்தது. இதுபோல பல அற்புதங்களை கட்டபொம்மனின் மூலம் முருகன், அவரின் பக்தியை மெச்சி அருளியிருக்கிறார்.
இந்நிலையில் அத்தகைய சிறப்பு மிக்க 200 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட மணி பல ஆண்டுகள் ஒலிக்காமல் இருந்துவந்தது.பக்தர்களுக்கு இந்த மணியை ஒலிக்கச் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
பக்தர்களின் கோரிக்கையை ஏற்று கடந்த ஆண்டு வீரபாண்டிய கட்டபொம்மன் வழங்கிய ராட்சத பித்தளை மணி புதுப்பிக்கப்பட்டது. இந்நிலையில்,ஆவணி திருவிழாவை முன்னிட்டு, உச்சிக்கால (மதியம் 12 மணி) பூஜை போது இந்த ராட்சத மணியை ஒலிக்க செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அந்த மணியில் உள்ள கயிற்றை 3 பணியாளர்கள் சேர்ந்து இழுத்து மணியை அசைத்தால்தான் ஒலியை எழுப்ப முடியும். அதற்கான சோதனை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.